இந்த வாரம் எதை எழுதலாம் என்று யோசித்த பொழுது சட்டென்று ஸ்ரீ சத்ய நாராயண பூஜை ஞாபகம் வந்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று பௌர்னமி. இந்த பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்னமியன்றும் செய்தால் மிகவும் நல்லது. அதுவும் பௌர்னமியன்று மாலைப் பொழுதில், சந்த்ரோதய காலத்தில் பூஜையைச் செய்வது மிகவும் உசிதம். ஸ்ரீ சத்யநாராயணர் மகாவிஷ்னுவின் அவதாரம். அவரும், அவர் பேருக்கேற்றார் போல் சத்தியமானவர். நம்பிக்கையுடன் இதனை செய்தால் கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்கும்.
இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், ஸ்ரீ சத்யநாராயணரே நாரதரிடம் மனிதர்கள், தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய்மொழியாக குறிப்பிட்டுள்ளார். இந்த பூஜையை புரோகிதர் வைத்தும் செய்யலாம், அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம். இந்த பூஜையை பௌர்னமியன்று செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் அனூகூலமாக உள்ளதோ அப்பொழுதும் செய்யலாம்.
இந்த பூஜையை பொது இடங்களிலோ அல்லது வீட்டிலோ தமது சௌகர்யம் போல் செய்துக் கொள்ளலாம். ஆனால் பூஜை செய்யும் முன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தை துடைத்து கோலமிட்டு, அதன் மேல் மணை வைத்து அதில் சுவாமி படத்தை வைத்து பூஜையை தொடங்க வேண்டும். பின் படத்திற்கு முன் கலசத்தை ஒரு நூலில் சுற்றி, அதில் வஸ்திரமோ அல்லது பூவோ வைத்து சுற்றி வைத்து, அந்த கலசத்தில் சுத்தமான நீரை பரப்பி அதில் சிறிது ஏலக்காய் போட்டு அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து பூஜையை தொடங்க வேண்டும்.
பின் இப்பூஜை செய்வதற்கு முன் கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்ய வேண்டும். அதற்கு தனித்தனியாக நிவேதனம் செய்ய வேண்டும். நவகிரக தானியங்களை அந்தந்த சுவாமிக்கு படைக்க வேண்டும். அந்தந்த தெய்வத்தை ஆவாகனம் செய்ய சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல் அரிசி, அங்காரகனுக்கு துவரை, புதனுக்கு பயறு, குருவிற்கு கடலை, சுக்கிரனுக்கு மொச்சை, சனிக்கு எள்ளு, ராகுவிற்கு உளுந்து மற்றும் கேதுவிற்கு கொள்ளு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை வேலைக்கு செல்வதால் நேரம் குறைவாக இருந்தால் கணபதி பூஜையும், ஸ்ரீ சத்ய நாராயண பூஜையும் மட்டுமாவது செய்ய வேண்டும். இவை இரண்டும் மட்டும் செய்ய நவதானியங்கள் தேவையில்லை. மற்றபடி கணமதிக்கு பாலோ, வெல்லமோ அல்லது பழமோ நிவேதனம் செய்யலாம். அதுபோல் ஸ்ரீ சத்ய நாராயணருக்கு ரவை கேசரியோ அல்லது கோதுமை மாவை சிறிது நெய்யில் வருத்து பின் சர்க்கரை சேர்த்து நிவேதனம் செய்யலாம்.
இந்த பூஜையில் வரும் அஷ்டோத்திரத்தையும், அங்க பூஜையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒரு வேளை சங்கல்பத்திற்கு தேவையான குறிப்புகள் கிடைக்க வில்லையென்றால் சுபதினே, சுபநக்ஷ்த்ரே, சுபதிதௌ, சுப முஹூர்த்தே என்றும் சொல்லியும் செய்யலாம். இந்த பூஜைக்கு துளசி கிடைத்தால் அதைக் கொண்டு செய்தால் மிகவும் நல்லது, கிடைக்காதவர்கள் மற்ற மலர்களைக்கொண்டும் அக்ஷதைக் கொண்டும் செய்யலாம். மறந்து விடாமல் பூஜையை முடித்துவிட்டு கதை படிக்க வேண்டும். முழு கதையை படிக்க நேரமில்லையென்றால் அதன் சுருக்கி எழுதிய சாரத்தையாவது கண்டிப்பாக படிக்க வேண்டும். பின் அந்த பிரசாதத்தை தான் முதலில் உண்டு மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அதே போல் கலத்திலுள்ள தீர்த்தத்தை தாமும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு பௌர்னமியன்றும் நம்பிக்கையுடன் செய்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
குறிப்பு;- இப்பூஜையைப் பற்றிய முழு விவரங்கள் பல புத்தகங்களில் வருகிறது. உதாரணம் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை, ஸ்ரீ சத்ய நாராயண விரத மகிமை போன்ற புத்தகங்கள் பல கடைகளில் கிடைக்கிறது. பிரோகிதர் வைத்து செய்ய நேர மில்லாதவர்கள், இம்மாதிரி புத்தகங்கள் மூலம் தாமே சொந்தமாக பூஜை செய்துக் கொள்ளலாம்.