Showing posts with label மனதிற்குப் பட்டது. Show all posts
Showing posts with label மனதிற்குப் பட்டது. Show all posts

Wednesday, August 1, 2007

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு இந்த ஆகஸ்ட் மாதம் 2007, 3 ஆம் தேதியன்று வருகிறது. ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். இந்த தேதியில் தான் மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டப்பின் நம் காவிரி நதி கூடுதலாக பெருகி,
அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.

அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு
சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள். நாம் நகரத்து வாசிகள், எப்படி ஆற்றங்கறையில் வைத்து சாப்பிடுவது, என்று யோசித்தால் ஏதாவது கடற்கறையிலோ அல்லது பூங்காகளிலோ நண்பர்களோடும், உறவினர்களோடும் சேர்ந்து கூடி சென்று கொண்டாடி மகிழ்ந்து உணவு உண்டால் அந்த சுகமே தனி தான். என்ன தட்டம் போட ஆரம்பிச்சிட்டீங்களா? எல்லோருக்கும் என் பதினெட்டாம் பெருக்கு நல்வாழ்த்துக்கள்.



குறிப்பு; ஏன் ஆடிப்பெருக்கன்று கலப்பு சாதம் செய்கிறார்கள், என்று தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து சொல்லவும்.

Wednesday, July 4, 2007

எட்டுக்கு எட்டு போட்டால், எட்டுவது இந்த எட்டுக்களே!! இதை கொஞ்சம் எட்டித்தான் பாருங்களேன்

நம்மையும் இந்த எட்டு தொடர் விளையாட்டுக்கு, ஒரு தகுதியை உரியவராக்கிய திரு KRS அவர்களுக்கும், திரு வி.எஸ்.கே அய்யாவிற்கும் என் நன்றிகள்.

ஒவ்வொருத்தர் எழுதியிருப்பதைப் பார்த்தால், நானெல்லாம் வாழ்க்கையில் என்ன செய்தேன் என்று யோசிக்க வைக்கிறது. ஆனால் இனிமேலாவது வாழ்க்கையில் ஏதாவது உருப்படியாகச் செய்து சாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

நான் வாழ்க்கையில் பெற்றதையும், மற்றதையும் பற்றி என் எட்டில் கூறியிருக்கிறேன். இவைகள் எல்லாம் கண்டிப்பாக சாதனைகள் இல்லை. என்னைப்பற்றிய உண்மைகள் மட்டுமே.

1.நான் வாழ்க்கையில் படித்தது Accounts, மேற்படிப்பு HR, ஆனால் அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத Finance பணியில் வேலைப் பார்த்தேன். இதிலேயே தெரிந்திருக்கும் நான் எவ்வளவு தெளிவாக இருக்கிறேன் என்று. நான் முதன் முதலில் கல்லூரியில் சேர்ந்தது BA Corp, ஆனால் பிறகு BCOM கிடைத்தது, அதனால் அந்த படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மற்றொன்றில் சேர்ந்தேன். பிறகு மேல் படிப்பு வரும் போது, MCA படிக்கலாமா என்று ஒரு குழப்பம். என் வீட்டிலும் எது சேர்ந்தாலும் சரி என்றார்கள். நானும் அதற்குண்டான வழிகளை ஆரம்பித்தேன், ஆனால் முடிவில் அங்கும் சேரவில்லை. சேர்ந்ததெல்லாம் HR, ஆனால் என் நேரம் முடிக்கும்போது campus interview வரவில்லை. அதனால் அத்துறையில், முன் அனுபவமில்லாத எனக்கு வேலைக்கிடைக்கவில்லை. தகுந்த வேலையை நான் இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வேரொரு வேலைக்கு சென்றுக் கொண்டேதான், என் மேல் படிப்பை முடித்தேன். என்னாலும் படித்துக் கொண்டே வேலைப் பார்க்க முடிந்தது என்ற ஒரே சந்தோஷம் தான்.

2.நான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தது, ஒரு marketing executive வாகத்தான். தினமும் நாள் கூலி தருவார்கள். இதற்கு காலையிலிருந்து, மாலை நேரம் வரையில் ஒவ்வொரு வீடாகவும், கம்பெனியாகவும் சென்று நாங்கள் விற்கும் தண்ணீரைப் பற்றி கூறிவிட்டு வருவேன். அதேபோல் telemarketing கூட செய்திருக்கிறேன். இது எனக்கு ஒரு வித்யாசமான அனுபவம் தான். அதனால் இன்றும் கூட யாராவது, எதாவது பொருள் விற்க வந்தால், அவர்களை துரத்திவிட மாட்டேன். marketing என்றதும் என் நினைவிற்கு வருவது இந்த வரிகள் தான், கழுத்திலே டை, கையிலே பை, வாயிலே பொய்.

3.கடவுள் என்றால் அபார நம்பிக்கை எனக்கு உண்டு. இதனால் ஒரு நாள் ஒரு வேண்டுதலுக்காக, திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு வந்து 108 முறை பிரகாரம் சுற்றுவதாக வேண்டிக் கொண்டு விட்டாச்சு. ஆனால் நான் முன்னபின்ன அந்த கோவிலுக்கு சென்றதில்லை, அதுவும் நான் சென்ற நேரம் மாலைப் பொழுது. அது மட்டும் இல்லாமல் அன்று தங்கரத பவனி நடந்துக் கொண்டிருந்தது. அம்மனை தரிசித்து முடித்தப் பிறகு மணி சுமார் ஏழு இருக்கும். பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தேன். நேரம் சென்று கொண்டே போனது, ஆனது ஆகட்டும் முடித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். கோவில் குருக்கள் கோவிலை சாத்துவதற்க்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக பத்து மணி அளவில் சுற்றி முடித்தேன். பிறகு தான் கடைசி பேருந்து சென்றுவிட்டது என்ற விஷயம் தெரிந்தது. உடனே பயம் தொற்றிக் கொண்டது. அதன் பின் கோவில் வாசலில் ஒரு பெண், எனக்கு சமாதானம் சொல்லி, அவர்கள் எல்லோரும் இரவு கோவில் முன்பு தங்குவதற்காக வந்துள்ளதாகவும் சொன்னாள். பிறகு என் வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, கவலைப் படாமல் இருக்கும் படி சமாதானம் செய்தேன். அங்கேயே ஒரு கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டு கோவில் வாசலில் இரவு தங்கினேன். அங்கு இரவு முழுவதும் பஜனை நடந்தது. இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து பஜனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சுமார் காலை நாலு மணிவரை பஜனை நடந்தது. பிறகு மறுபடியும், காலை முதல் தரிசனமாக அம்பாளை தரிசித்து செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்தால் செம டோஸ். இதுவும் ஒரு அனுபவம் தான்.

4. மாங்காட்டில் ஒரு நாள் துணைக்கு யாரும் இல்லாத போது, அம்பாளை வணங்கி அங்க பிதர்ஷணம் செய்ய ஆரம்பித்தேன். செய்து முடித்தவுடன் ஒரே தலைச்சுற்றல், வாந்தி. கூடவும் யாருமில்லை. அப்பொழுது உதவிக்கு ஒரு அம்மா வந்து என்னை ஒரு கடையிக்கு அழைத்துச் சென்று ஜூஸ் வாங்கி கொடுத்தாள். பிறகு தான் கொஞ்சம் தெளிந்தது. ஆகவே தனியாக வந்து இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டதிலிருந்தே சிறிது விவேகத்துடனும் செயல் பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் நம்பினார் கெடுவதில்லை என்ற சொல் போல், நான் வேண்டியது நடந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

5. வலியில்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட பாக்கியசாலி நான். பிரசவத்தின் போது, குறித்த நாளும் தாண்டிவிட்டது, ஆனால் வலி எடுக்கவில்லை. பிறகு மருத்துவரிடம் சென்றோம், அவர்களும் பார்த்துவிட்டு, எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, இன்னும் இரண்டு நாள் பொறுத்துப் பார்க்கலாம் என்று கூறினார். சரியென்று நாங்களும் வீடு வந்து விட்டோம், பின் மறுநாள் காலை எனக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு அவசரமாக ஓடினோம். ஆனால் வலி எடுக்கவேயில்லை. பிறகு மருத்துவரும் பார்த்துவிட்டு வலி வருவதற்கு ஊசி போட்டார்கள். ஆனால் எதற்கும் பாச்சா பலிக்கவில்லை. கடைசியில் ஆப்ரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க வேண்டும், இனிமேல் காத்திருந்தால் குழந்தைக்கு ஆபத்து என்று கூறிவிட்டார்கள். சரியென்றதும் ஆப்ரேஷம் செய்து ஒரு குட்டிப்பாப்பாவை வெளியே எடுத்தாங்க. கேட்டால் கொடி சுற்றியிருப்பதால் வலி எடுக்கவில்லை என்றார்கள். இப்ப குட்டிக்கு ஒரு வயசு ஆகுது.

6. கணவருக்கு வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது. இதனால் நானும், என் 5மாத குட்டிபாப்பாவும் கிளம்பி அமரிக்கா வந்தோம். வேறு குழந்தைகளை பார்த்து வளர்வதை கூட இருந்து பார்த்ததும் கிடையாது. குழந்தையை எனக்கு தெரிந்த வரையில் பெரியவர்களின் உதவி மூலம் தொலைபேசி மற்றும் இணைய ஆலோசனையுடன் நல்லபடியாக வளர்த்து வருகிறேன். இப்படி ஒரு குழந்தையை நம்மால் தனியாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்தது பற்றி எனக்கு மிகவும் சந்தோஷம்.

7. Software பற்றி எதுவுமே தெரியாத எனக்கு என் கணவர் உதவியுடன், இணைய அறிவு வளர வழி கிடைத்ததை தாண்டி இன்று கிடைக்கும் நேரத்தில் handycam மூலம் எடுத்த படத்தை edit செயவதிலுருந்து encoding பண்ணி DVD க்கு மாற்றுவதிலிருந்து அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். இதனால் இப்பொழுது நேரம் வாய்க்கும் போது, camera விலுள்ள நாங்கள் எடுத்த படத்தை DVDக்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

8. திருமணத்திற்கு முன் வீட்டில் அவ்வளவாக வேலை பார்க்காமல் ஏதோ ஒன்றிரண்டு வேலை மட்டுமே செய்துவிட்டு, கோவில், class என்று சென்றுவிடுவேன். இதனால் என் அம்மா தனியாகவே எல்லா வேலைகளையும் செய்வார்கள். ஆனால் திருமணமானப்பின் தான் என் அம்மாவின் நிலைமை புரிகிறது. வெளியே வேலைக்கும் சென்றுவிட்டு, வீட்டிலும் வேலை செய்து அப்பாடா என்று ஆகிவிடும். அலுவலகம் விட்டு வேலைக்கு வந்தால் யாராவது காப்பி போட்டு தர மாட்டார்களா என்றிருக்கும். எல்லா நிலைமையும் அவரவர்களுக்கென்று வரும் போது தான் தெரியும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதெல்லாம் நினைத்து பார்த்தால் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

விளையாட்டின் விதிகள்: (உங்களின் தலைவிதிகள்:-)
1. ஆடுபவர் தன்னைப் பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.) அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும் -
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் - இது எல்லாம் optional தான் - நிறைய பேரு இதை மதிக்கலை. ஸோ...கண்டுக்காதீங்க! :-)
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும். - முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)

எனக்கு முன்னாலே எல்லோரும் வந்துவிட்டதனால், யாரைக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.

Monday, April 16, 2007

அழகுக்கு அழகு

கடலுக்கு அலை அழகு, அந்த
அலைகளின் ஓசை கேட்பதிற்கு அழகு

குழந்தையின் பிஞ்சு கால்கள் அழகு, அந்த
காலில் சிணுங்கும் தங்ககொலுசு கூடுதல் அழகு

பெண்ணிற்கு தாய்மை அழகு, அந்த
தாய்மைக்கு தன் பிள்ளையின் புத்திசாலிதனம் அழகு

ஆணுக்கு வீரம் அழகு, அந்த
வீரத்திற்கு விவேகமும் சேர்ந்தால் தான் அழகு

கிளிக்கு பச்சை நிறம் அழகு, அந்த
பச்சை நிறத்தில் சுட்டியிழுக்கும் பட்டுப் புடவைகள் அழகு

கடலுக்குள் முத்து அழகு, அந்த
முத்துகள் சேர்ந்து மாலையானால் கழுத்திற்கு அழகு

சூரியன் அதிகாலையில் விடிவது அழகு, அந்த
விடியலுக்காக காத்திருக்கும் விவசாயிகள் உழைப்பு அழகு

வி எஸ் கே அய்யாவிற்கு கவிதை அழகு, அந்த
கவிதைக்குள் பொதிந்திருக்கும் உண்மைகள் அழகு

என்னை அழகு சுற்றுக்கு அழைத்த திரு வி எஸ் கே அய்யாவிற்கு எனது நன்றி.

பதிலுக்கு நான் அழைக்கும் நபர்கள்

துளசி கோபால்
முத்துலெட்சுமி
கண்ணபிரான் ரவிசங்கர்
சத்யா
சிறில் அலெக்ஸ்

Saturday, April 7, 2007

வியர்டு கவிதை

நான் இன்று வழக்கம் போல் என் மின்னஞ்சலை பார்க்க தொடங்கினேன். எஸ் கே அய்யா ஒரு மடல் அனுப்பியிருந்தார். பார்த்தால் இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே பங்கேற்றிருந்தாலும் நான் அழைத்ததிற்காக, மறுபடியும் வியர்டு விளையாட்டிற்கு ஒரு கவிதையே பதிவிட்டுள்ளார். கட்டாயம் பாருங்கள்.

Sunday, March 25, 2007

வித்தியாசமான (weird) குணங்கள்

வணக்கம்,

என்னுடைய வித்தியாசமான ஐந்து குணங்களை திருமதி முத்துலெட்சுமி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். நானே இப்பொழுது தான் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். என்னைப் பற்றி சிந்திக்க வைத்ததிற்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

1. என் மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்து கொண்டே இருப்பேன். குறிப்பாக நான் எனக்குள்ளே ஒரு தனி வாழ்க்கை வாழ்வேன். இதனால் சில சமயத்தில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே கவனிக்காமல் இருப்பேன். பிறகு மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்றே எனக்கு தெரியாமல் போய்விடுகிறது. குறிப்பாக பயணம் செய்யும் நேரங்களில் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பது எனக்கு வழக்கமாக போயிற்று. இதனால் நான் வெளியில் வேடிக்கை பார்த்தும் என் மனதில் எதுவும் பதியாமல் போய்விடுகிறது.

2. குழந்தை மாதிரி சண்டைப் போடுவது. சில நேரத்தில் நான் குழந்தைப் போல சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டு சண்டைப் போடுவேன். பிறகு தான் தெரியும் அவர்கள் வேறு அர்த்தத்தில் சொல்கிறார்கள், நாம் தான் தவறாக நினைத்துக் கொண்டு விட்டோம் என்று. அதற்காக நாள் முழுவதும் வருத்தப் படுவேன். எதற்கு இந்த சின்ன பிள்ளைத்தனமோ எனக்கு தெரியவில்லை.

3. எதையும் பார்த்தால் முதலில் எந்த விஷயம் அதில் இல்லை என்று தான் பார்ப்பேன். இதனால் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும் என்றே தோன்றாது. குறிப்பாக ஏதாவது ஒரு புது இடத்திற்கு சென்றால் எல்லோரும் அங்கிருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி பாராட்டுவார்கள். ஆனால் நான் மட்டும் எது இந்த இடத்தில் இல்லை என்று பார்ப்பேன்.

4. நானாக யாரிடமும் உதவி கேட்க மாட்டேன். ஆனால் அவர்களே வந்து உதவி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பேன். இதனால் சிலபேர் வேலை விஷயத்தில் கண்டு கொள்ளவே மாட்டார்கள். கடைசியில் நானே எல்லா வேலைகளையும் செய்யும் படி ஆகிவிடும். இதனால் யாருக்கு லாபம் என்று சொல்லுங்கள்?

5. முன்பெல்லாம் தனக்கு தெரியாத இல்லை சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடவே மாட்டேன். இதனால் வீட்டில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியாது. நான் உண்டு, என் வேலை உண்டு என்றிருப்பேன். ஆனால் இதனால் நிறைய விஷயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் போயிற்று. உதாரணமாக அம்மா, அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தேன். பிறகு தான் இது தவறான விஷயம் என்று தெரிந்துக் கொண்டு திருத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

இவர்களை நான் அழைக்கிறேன்

மு.கார்த்திகேயன்
எஸ் கே அய்யா
சிறில் அலெக்ஸ்
எஸ்பி விஆர் சுப்பையா
வடுவூர் குமார்

Thursday, March 8, 2007

மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்

எல்லோருக்கும் என் மங்கையர் தின வாழ்த்துக்களை மனதாரத் தெரிவித்துக் கொள்கிறேன். மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று பாரதியார் கூரியிருக்கிறார். ஆம் ஒரு பெண்ணின் சௌந்தர்யத்தை நாம் மகாலஷ்மிக்கு ஒப்பிடுகிறோம், அவள் தைரியத்தை நாம் பராசக்திக்கு ஒப்பிடுகிறொம், அதே போல் படிப்பில் சிறந்து விளங்கினால், சரஸ்வதி குடிகொண்டிருக்கிறாள் என்று நாம் உவமானம் சொல்வோம். அதேபோல் இயற்கை அன்னை என்றும், பாரத மாதா என்றும் சொல்கிறோம். ஆகவே எந்த ஒரு எடுத்துக்காட்டையும் நாம் பெண்ணினத்தோடு தான் ஒப்பிடுகிறோம். அதுபோல் ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால், அது ஒரு குடும்பத்துக்கே அளித்த சமானம் என்பார்கள். எந்த வீட்டில் பெண் சந்தோஷமாக இருக்கிறாளோ, அந்த வீட்டில் மகாலஷ்மி குடி கொண்டிருப்பாள்.

ஒரு பெண்ணானவள் தன் கணவனுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும், அவனுடைய கஷ்ட காலத்தில் ஒரு நல்ல தோழியாகவும், மனம் கலங்கும் நேரத்தில் நல்ல தாய்மையுணர்வோடும், சந்தோஷமான நேரத்தில் சக தர்மினியாகவும் இருக்க வேண்டும். அதனால் தான் பரமசிவனும், ஈஸ்வரிக்கு தன்னுடைய பாதி உடலை தந்திருக்கிறார். சிவனில்லையேல் சக்தியில்லை, சக்தியில்லையேல் சிவனுமில்லை. அதேபோல் மாகாவிஷ்னுவும், லஷ்மிக்கு தன் இதய கமலத்தில் இடம் தந்திருக்கிறார். ஆகவே, நானும் ஒரு பெண் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

Tuesday, March 6, 2007

கார்ட்டூன் சானல்

நான் இன்று உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போவது அமரிக்காவில் வரும் " கார்ட்டூன் சானல்" பற்றி தான். ஆம், இங்கு குழந்தைகளுக்காக வரும் சானலில் "ஸ்பானிஷ்" மொழி சொல்லிக் கொடுக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் எநதெந்த பொருள் எதற்கு உபயோகப்படும் என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களுடைய சங்கீதத்தையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். பிறகு, மற்ற விலங்குகளைக் காப்பாற்றுவது பற்றியும், எப்படி அன்பாக பழக வேண்டும் என்பது பற்றியும் சொல்லித்தருகிறார்கள். அத்தோடு நாம் அருந்தும் பழங்களின் சத்துக்கள் பற்றியும், அதனால் விளையும் பயன்கள் பற்றியும் கூறுகிறார்கள். பிறகு எப்படி மற்றவர்களிடம் அன்பாக உரையாடுவது என்பது பற்றியும், பின் எப்படி சேர்ந்து வேலை செய்தால் சுலபமாக செய்ய முடியும் என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆகவே சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் செய்கிறார்கள்.

ஆனால் குறைகள் என்று சொன்னால் இந்த வயதிலேயே "ராக்" இசையை அறிமுகம் செய்கிறார்கள், அது போலவே காதலர் தினம் பற்றியும், எப்படி அன்று பழக வேண்டும் என்றும், என்னன்ன பரிசு கொடுத்தால், அதற்கு என்னன்ன கிடைக்கும் என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார்கள். பிறகு முன்பு ஒளிபரப்பிய நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள், இதனால் குழந்தைகளுக்கு சலிப்பு உண்டாகும்.

இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

குறிப்பு: ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சேர்த்து எழுதியுள்ளேன், அதற்க்காக மன்னிக்கவும்.

Monday, March 5, 2007

பாத்திரம் அறிந்து பிச்சை போடு

எல்லோருக்கும் வணக்கம்,

பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழி, நம் நாட்டில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு, கண்டிப்பாகப் பொருந்தும். ஏனென்றால், அவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு குறைவாக பிச்சைப் போட்டால் அதை திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு காசின் அருமை தெரியவில்லை. இதற்கு பதில் கோவில் உண்டியலில் பைசா போட்டாலாவது புண்ணியமாவது கிடைக்கும். ஒரு நாலு நாளைக்கு, அப்படி செய்தால் தான் அவர்களூக்கு பணத்தின் அருமை தெரியும். பிறகு அவர்கள் வரும் லஷ்மியை கைவிட மாட்டார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

அன்புத்தோழி