Showing posts with label ஆன்மீகம் பேசலாம். Show all posts
Showing posts with label ஆன்மீகம் பேசலாம். Show all posts

Monday, October 22, 2007

மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் பாகம் 2

{தொடர்ச்சி}


இதன் முந்தய பதிவை பார்க்க இங்கே பார்க்கவும்.


பொற்றாமரை குளம்; இக்குளத்தை சிவபெருமான், நந்தி தேவர் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, தன் சூலத்தால் புமியில் குத்தி தண்ணீரை வரவழைத்தார். இக்குளத்தில் உள்ள தாமரையைத் தான் இந்திரன் தன் பூஜைக்கு உபயோகப் படுத்தினார். இத்தீர்த்திற்கு ஆதி தீர்த்தம், சிவகங்கை மற்றும் உத்தம தீர்த்தம் என்னும் பல பெயர்கள் உள்ளது. இத்தீர்த்தம் முதன் முதலில் வந்ததால் ஆதி தீர்த்தம் என்ற பெயர் பெற்றது. அது போல், ஞானத்தை அளிக்கும் தீர்த்தம் ஆனதால் ஞான தீர்த்தம் என்றும், பரம தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. அது போல் இக்குளத்தில் குளித்தால் முக்தி தரும் தீர்த்தமாதலால், முக்தி தீர்த்தம் என்ற பெயரும் பெற்றது. முன்னொரு காலத்தில் இக்குளத்தில் ஒரு கொக்கு தவம் செய்தது. அப்பொழுது, அங்கிருக்கும் மீன்கள் அத்தவத்தை கலைக்க முற்பட்டது. இதனால், தவம் முடிந்து வரம் கேட்கும் நேரத்தில், இங்கு எந்த மீன்களும் வசிக்கக்கூடாது என்ற வரத்தையும் கொக்கு வாங்கிக் கொண்டதால், இக்குளத்தில் இன்றும் எந்த மீன்களும் வசிப்பதில்லை. இக்குளத்தில் தான் சங்கப் பலகை மிதக்க விட்டு எந்த பாட்டுகளும், கவிதைகளும் இலக்கியத்திற்கு ஏற்றவை என்று சோதனை செய்யப்படும். அப்படி அவை ஏற்றவை அல்லாதவையாக இருந்தால், அந்த கவிதைகள் தண்ணீரில் மூழ்கி விடும். மற்றவை கரையில் சேர்க்கப் படும். அப்படி சோதித்து தேற்வு பெற்றதில் திருக்குறளும் ஒன்று.

கோபுரங்கள்; கோபுரங்களுக்கு பிரசித்தி வாய்ந்த கோவில்களுள் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலும் ஒன்று. மொத்தம் 14 கோபுரங்கள் இக்கோவிலில் உள்ளது. அவைகளுள் ஒன்பது அடுக்கு ராஜகோபுரங்கள் நான்கு உள்ளன. இந்த ராஜகோபுரங்கள் கோவிலின் நான்கு திசைகளிலும் உள்ளது. அதன் பெயர்கள் கிழக்கு ராஜ கோபுரம், மேற்கு ராஜ கோபுரம், தெற்கு ராஜ கோபுரம் மற்றும் வடக்கு ராஜ கோபுரம் ஆகும். பிறகு ஏழு அடக்கு சித்திரை கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரத்தை அம்மன் சந்நிதி கோபுரம் என்றும் சொல்லலாம். இக்கோபுரத்தில் பல சிற்பங்கள் உள்ளதால் இதற்கு சித்திரக் கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்தது ஐந்து அடுக்கு கோபுரங்கள் ஐந்து உள்ளன. அவை கோபுர நாயக கோபுரம் அல்லது சுவாமி சந்நிதி கோபுரம், முக்குருணி வினாயகர் கோபுரம் அல்லது நடுகாட்டு அல்லது இடைக்காட்டு கோபுரம், சின்ன மொட்டை கோபுரம், கடஹ கோபுரம் மற்றும் மர கோபுரம் உள்ளன. அடுத்து மூன்று அடுக்கு கோபுரம் இரண்டு உள்ளன. அவை அம்மன் சந்நிதி கோபுரம் மற்றும் சுவாமி சந்நிதிகள் ஆகும். பிறகு கடைசியாக இரண்டு தங்க கோபுரங்கள் உள்ளன. அவை இந்திர விமானம் கொண்ட சுவாமி சந்நிதி மற்றும் அம்மன் சந்நிதியில் உள்ளது. சுவாமி சந்நிதியில் உள்ள தங்க கோபுரத்தில் எட்டு யானைகளும், முப்பத்தி இரண்டு சிங்களுகளும், அறுபத்தி நான்கு சிவகணங்களும் இக்கோபுரத்தை தாங்குவது போல் காட்சி அளிக்கும். இது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். ஆக இந்த பதிநான்கு கோபுரங்களும் இக்கோவிலில் சுற்றி அமைந்து கோவிலின் வெளி தோற்றம் மிகவும் அகலமாகவும், அழகாகவும் காட்சி அளிக்கும்.

மண்டபங்கள்; கொலு மண்டபம், கிளிகூண்டு அல்லது சங்கிலி மண்டபம் அல்லது யாழி மண்டபம், இருட்டு மண்டபம் அல்லது முத்துப்பிள்ளை மண்டபம், ஆறுகால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், வெள்ளியம்பல மண்டபம், அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மண்டபம், வன்னியடி நடராஜர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், நால்வர் மண்டபம் (அப்பர், சுந்தர ர், மாணிக்கவாசகர் மற்றும் திருதாவுக்கரசர்), மீனாட்சி நாயகர் மண்டபம், சுவாமி சந்நிதி கருவரை மண்டபம் சுவரொற்றி தக்ஷிணாமூர்த்தி மண்டபம், துர்கை மண்டபம் மற்றும் லிங்கோதுபவர் மண்டம்ப் உள்ளது. அது தவிர நூரு கால் மண்டபம் அல்லது மண்டப நாயக மண்டபம், கல்யாண மண்டபம், நகரா மண்டபம், புது மண்டபம், முத்துராமையர் மண்டபம், பேச்சியக்காள் மண்டபம், நந்தி மண்டபம், மங்கயர்க்கரசி மண்டபம், தேரடி மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் மற்றும் பழைய ஊஞ்சல் மண்டபம் என்று பல மண்டபங்கள் உள்ளன.

அஷ்டசக்தி மண்டபம்; இந்த மண்டபத்தை திருமலை நாயகரின் மனைவிகள் கட்டினார்கள். இந்த மண்டபத்தில் எட்டு சக்திகளான கௌமாரி, ரௌத்திரி, வைஷ்ணவி,ஞானரூபிணி, மகாலக்ஷ்மி,மகேஷ்வரி, ஷாமளா மற்றும் மணோண்மணியின் சிலைகள் இருக்கும்.

முத்துராமையர் மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி விக்ரகங்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் தான் அன்னதானம் நடக்கும்.

தேரடி மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் மீனாக்ஷி அம்மனையும் மற்றும் சுந்தரேஸ்வரரையும் அமர்த்தி பின் ஊர்வலம் வருவார்கள். புது ஊஞ்சல் மண்டபம்; இந்த புது ஊஞ்சல் மண்டபத்தில் தான் அம்பாளையும் சிவனையும் அமர்த்தி ஊஞ்சலாட்டும் வைபோகம் நடக்கும்.

கொலு மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் நவராத்திரி நேரத்தில் பல விதமான கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து கொண்டாடுவார்கள்.
இன்னும் இந்த கோவிலின் அழகையும் அமைப்பையும் சொல்லச்சொல்ல முடியாத ஒன்று. நீங்களே நேரில் சென்று கண்டு களிங்கயேன்.
இந்த மீனாட்சி அம்மனின் பாடலை கேட்டு மகிழ இங்கே பார்க்கவும்.இந்த பாட்டின் வரிகளை படிக்க என் முந்தய பதிவிலுள்ளதை பார்க்க இங்கே பார்க்கவும்.

Wednesday, October 17, 2007

மீனாட்சி அம்மன் திருக்கோவில்- பாகம் 1

இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் ஆலயம் மீனாட்சி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயம் மதுரை மாநகரத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் சுந்ததேஸ்வரர். இன்னும் இவருக்கு மற்ற பெயர்களும் உள்ளது. அவற்றில் ஒரு சில பெயர்களை குறிப்பிடுகிறேன். சோமசுந்தரர், கல்யாண சுந்தரர், சொக்கநாதர், கடம்பவனேஸ்வரர். இன்னும் பல உள்ளன. அதுபோல் அம்மனின் பெயர் மீனாட்சி. மற்ற பெயர்கள் அங்கயர்க்கண்ணி, மரகதவல்லி, கோமகள், அபிராமவல்லி, சுந்தரவல்லி இன்னும் பல. ஒரு சில இடங்களில் சிவனுக்கு சக்தி அதிகம், அது போல் ஒரு சில இடங்களில் அம்மனுக்கு சக்தி அதிகம். அப்படி பார்த்தால் மதுரை, மீனாட்சி அம்மனின் ஆட்சியில் தான் நடக்கிறது. நாம் கூட கிண்டலுக்கு கேட்போம் என்ன உங்கள் வீட்டில் மீனாட்சியா, சிதம்பரமா. இந்த கேள்விக்கு அர்த்தம், வீட்டில் பெண்ணின் ஆட்சியா இல்லை ஆணின் ஆட்சியா. இது கிண்டலுக்காக கேட்பது. மீனாட்சி= மீன்+ஆட்சி. மதுரை மீனாட்சி தன் மீன் போன்ற கண்களினால், அந்த இடத்தையே ஆட்சி புரிகிறாள். இதற்கு புராணத்தில் கதை உள்ளது.




ஸ்தல வரலாறு; பாண்டிய வம்சத்தில் வந்த மலயத்துவஜர் என்னும் அரசனுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இதனால் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென ஒரு வேள்வி நடத்தினார். இந்த வேள்வியின் முடிவில் ஒரு பெண் குழந்தை அந்த ஓமகுண்டத்திலிருந்து தோன்றியது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அம்மன்னன் அந்த குழந்தைக்கு அங்கயற்கண்ணி என்றும் மீனாட்சி என்றும் பெயர் சூட்டினார். ஆனால் அந்த குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருந்தது. இதனால் அம்மன்னன் மிகவும் வருத்தமடைந்தான். அப்பொழுது அசரீரியாக ஒரு குரல் வந்து, '' எப்பொழுது உன் மகள், தன் மனதிற்கு பிடித்த மணாளனை காண்கிறாளோ அப்பொழுதே அந்த மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும்'' என்றது. இதனால் மனம் திருப்தி அடைந்த அம்மன்னன், தன் பெண்ணை மிகவும் தைரியசாலியாக வளர்த்தார். வெகு விரைவிலேயே மன்னனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மீனாட்சியை அரசியாக முடிசூட்டினார்கள். மீனாட்சியும், தன் வலிமையால் மற்ற அரசர்களை வெற்றி கொண்டாள். இப்படி ஒரு நாள், கைலாயத்தில் போர் நிகழும் போது, மீனாட்சி தன் மணாளனான சிவபெருமானை காண்கிறாள். அந்த நேரத்தில் அவளுடைய மூன்றாவது மார்பகம் மறையவே, இவர் தான் தான் மணக்கப்போகும் மனாளன் என்பதை உணர்ந்து சிவபெருமானிடம் போரிடாமல், நாணத்தால் தன் தலை குணிந்தாள். இதன் பிறகு மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தேறியது. பின்னர் சிவபெருமான் ஆட்சி புரிந்து பின்னர் உக்கிர பாண்டியன் என்னும் மகனை மதுரைக்கு முடிசூட்டிவிட்டு, சிவனும் அம்பாளும் கைலைக்கு செல்கிறார்கள். ஆனாலும் இன்று வரை அந்த மீனாட்சி அம்மனே மதுரையை ஆட்சி புரிந்து, மக்களை வாழ்த்துகிறார்.

இன்னும் சிவபெருமானுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு நாள் இந்திரன் பூலோகத்திற்கு வந்தான். அப்பொழுது கடம்பவனத்தில் சிவலிங்கம் ஒன்றை கண்டார். அந்த சிவலிங்கத்தை வணங்கி பின் அதை கொண்டுவந்து மதுரையில் பிரதிஷடை செய்தான். பின் அந்த கோயிலை எடுத்து பெரிதாக கட்டியது குலசேகர பாண்டியன் என்னும் மன்னன். நாம் இந்திரன் பிரதிஷ்டை செய்ததிற்கு ஆதாரமாக அங்கு இந்திர வாகனத்தை பார்க்கலாம். நடுவில் பல வேற்று மத அரசினரால் ஆட்சி செய்யப் பட்டதினால், இவ்வாலத்தில் பல சிற்பங்கள் சீர் குலைந்து போனது. பின் இத்திரு ஆலயத்தை திருமலை நாயக்கர் என்னும் அரசர், பல வேலை பாடுகள் செய்து, மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு உருவாக்கினார்.

(தொடரும்)

Monday, September 10, 2007

காளிகாம்பாள் திருக்கோவில்

இத்திருக்கோவில் சென்னையில் பாரீஸ் தம்பு செட்டிதெருவில் அமைந்துள்ளது. அம்பாளின் பெயர் காளிகாம்பாள், சிவனின் பெயர் கமடேஸ்வரர். முதன் முதலில் இத்திருத்தலம் சென்னைக்குப்பம் என்னும் பகுதியில், பண்டைக் கால ஆங்கிலேயர் ஆட்சியில் கிபி 1640 யில் ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் கட்டப்பட்டது. பிறகு ஆங்கிலேயர்களின் கோரிக்கையின் பேரில் தம்பு செட்டி தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.பின்னர் இத்திலுகோவில் விஸ்வகர்மா குலத்தினரால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.

இத்திருத்தலம் காஞ்சிபுரத்திற்கு ஈசான்யமாகவும், திருமயிலைக்கு வடக்கிலும், திருவொற்றியூருக்கு தெர்க்கிலும்,மற்றும் திருவேற்க்காட்டிற்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தினை வியாசர், அகத்தியர், பராசரர், பிருங்கி மகரிஷி போன்ற பல முனிவர்கள் வழிபட்டிருக்கிறார்கள். மற்றும் இந்திரன்,வருணன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் முதலானோரும் இத்திருதலத்தை வழிபட்டுள்ளார்கள். மற்றும் குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம்அதிகரித்தது என்ற செய்திகளும் உண்டு.

இன்னும் சத்ரபதி சிவாஜி அவர்களும் காளிகாம்பாளை வழிபட்ட பிறகே தனக்குமுடிசூட்டிக் கொண்டார் என்ற வரலாறு செய்திகளும் உண்டு.

இவ்வாலயத்தின் ஸ்தல விருக்ஷம் மாமரம். அம்மனின் பிகாரத்தை சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சித்தி புத்தியுடன்வினாயகர், ஸ்ரீ கமடேஸ்வரர், துர்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மா, வீரபத்ர மாகாளி,ஸ்ரீ நாகேந்திரர், காயத்ரி, விஸ்வகர்மா,நடராகஜர், இன்னும் நிறைய சந்நிதிகள் உள்ளன.

இவ்வாலயத்திலும், ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேரு ஸ்ரீ சக்கரத்தை காணலாம்.இங்கு அருள் பாலிக்கும் காளிகாம்பாள் மற்ற சக்தியை விட பல மடங்கு சக்திவாய்ந்ததாகும். இன்னும் சொல்லப் போனால் காஞ்சி காமாட்சியே, காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும். அம்பாள் அமர்ந்திருக்கும் காட்சியானது கைகளில் அங்குசம், பாசமும்,நீலோத்ப மலரை தாங்கிய வண்ணமுமாகவும், பின் இடக்கையில் வரத முத்திரை தரித்தநிலையிலும், தன் ஒரு காலை மடித்தும்வலது காலை தாமரையின் மேல் வைத்துபத்மாசன நிலையில் காட்சி தருகிறாள்.இத்திருக்காட்சியைப் பார்க்க கண் கோடிவேண்டும். ஆக நீங்களும் வந்து அம்மனை தரிசித்து அருள் பெருங்களேன்

Thursday, August 9, 2007

ஸ்ரீ சத்ய நாராயணர்

இந்த வாரம் எதை எழுதலாம் என்று யோசித்த பொழுது சட்டென்று ஸ்ரீ சத்ய நாராயண பூஜை ஞாபகம் வந்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று பௌர்னமி. இந்த பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்னமியன்றும் செய்தால் மிகவும் நல்லது. அதுவும் பௌர்னமியன்று மாலைப் பொழுதில், சந்த்ரோதய காலத்தில் பூஜையைச் செய்வது மிகவும் உசிதம். ஸ்ரீ சத்யநாராயணர் மகாவிஷ்னுவின் அவதாரம். அவரும், அவர் பேருக்கேற்றார் போல் சத்தியமானவர். நம்பிக்கையுடன் இதனை செய்தால் கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்கும்.

இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், ஸ்ரீ சத்யநாராயணரே நாரதரிடம் மனிதர்கள், தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய்மொழியாக குறிப்பிட்டுள்ளார். இந்த பூஜையை புரோகிதர் வைத்தும் செய்யலாம், அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம். இந்த பூஜையை பௌர்னமியன்று செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் அனூகூலமாக உள்ளதோ அப்பொழுதும் செய்யலாம்.

இந்த பூஜையை பொது இடங்களிலோ அல்லது வீட்டிலோ தமது சௌகர்யம் போல் செய்துக் கொள்ளலாம். ஆனால் பூஜை செய்யும் முன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தை துடைத்து கோலமிட்டு, அதன் மேல் மணை வைத்து அதில் சுவாமி படத்தை வைத்து பூஜையை தொடங்க வேண்டும். பின் படத்திற்கு முன் கலசத்தை ஒரு நூலில் சுற்றி, அதில் வஸ்திரமோ அல்லது பூவோ வைத்து சுற்றி வைத்து, அந்த கலசத்தில் சுத்தமான நீரை பரப்பி அதில் சிறிது ஏலக்காய் போட்டு அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து பூஜையை தொடங்க வேண்டும்.

பின் இப்பூஜை செய்வதற்கு முன் கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்ய வேண்டும். அதற்கு தனித்தனியாக நிவேதனம் செய்ய வேண்டும். நவகிரக தானியங்களை அந்தந்த சுவாமிக்கு படைக்க வேண்டும். அந்தந்த தெய்வத்தை ஆவாகனம் செய்ய சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல் அரிசி, அங்காரகனுக்கு துவரை, புதனுக்கு பயறு, குருவிற்கு கடலை, சுக்கிரனுக்கு மொச்சை, சனிக்கு எள்ளு, ராகுவிற்கு உளுந்து மற்றும் கேதுவிற்கு கொள்ளு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை வேலைக்கு செல்வதால் நேரம் குறைவாக இருந்தால் கணபதி பூஜையும், ஸ்ரீ சத்ய நாராயண பூஜையும் மட்டுமாவது செய்ய வேண்டும். இவை இரண்டும் மட்டும் செய்ய நவதானியங்கள் தேவையில்லை. மற்றபடி கணமதிக்கு பாலோ, வெல்லமோ அல்லது பழமோ நிவேதனம் செய்யலாம். அதுபோல் ஸ்ரீ சத்ய நாராயணருக்கு ரவை கேசரியோ அல்லது கோதுமை மாவை சிறிது நெய்யில் வருத்து பின் சர்க்கரை சேர்த்து நிவேதனம் செய்யலாம்.

இந்த பூஜையில் வரும் அஷ்டோத்திரத்தையும், அங்க பூஜையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒரு வேளை சங்கல்பத்திற்கு தேவையான குறிப்புகள் கிடைக்க வில்லையென்றால் சுபதினே, சுபநக்ஷ்த்ரே, சுபதிதௌ, சுப முஹூர்த்தே என்றும் சொல்லியும் செய்யலாம். இந்த பூஜைக்கு துளசி கிடைத்தால் அதைக் கொண்டு செய்தால் மிகவும் நல்லது, கிடைக்காதவர்கள் மற்ற மலர்களைக்கொண்டும் அக்ஷதைக் கொண்டும் செய்யலாம். மறந்து விடாமல் பூஜையை முடித்துவிட்டு கதை படிக்க வேண்டும். முழு கதையை படிக்க நேரமில்லையென்றால் அதன் சுருக்கி எழுதிய சாரத்தையாவது கண்டிப்பாக படிக்க வேண்டும். பின் அந்த பிரசாதத்தை தான் முதலில் உண்டு மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அதே போல் கலத்திலுள்ள தீர்த்தத்தை தாமும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு பௌர்னமியன்றும் நம்பிக்கையுடன் செய்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
குறிப்பு;- இப்பூஜையைப் பற்றிய முழு விவரங்கள் பல புத்தகங்களில் வருகிறது. உதாரணம் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை, ஸ்ரீ சத்ய நாராயண விரத மகிமை போன்ற புத்தகங்கள் பல கடைகளில் கிடைக்கிறது. பிரோகிதர் வைத்து செய்ய நேர மில்லாதவர்கள், இம்மாதிரி புத்தகங்கள் மூலம் தாமே சொந்தமாக பூஜை செய்துக் கொள்ளலாம்.

Wednesday, August 1, 2007

லலிதா நவரத்தின மாலை

இந்த பாட்டை மூன்று பாகங்களாக பிரித்து எழுதியிருக்கிறேன். இதற்கு பொருத்தமான அர்த்தங்களை திரு குமரன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவற்றை படிக்கவும், பாட்டை கேட்கவும் இங்கே, இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

Wednesday, July 18, 2007

வைத்தீஸ்வரன் கோவில்

நாம் இந்த வாரத்தின் கோவிலாக திரு வைத்தீஸ்வரன் ஆலயத்தை பற்றி பார்ப்போம். இந்த ஆலயம் கும்பகோணத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் அமைப்புத் தோற்றம் நான்கு ராஜ கோபுரத்துடனும், நடுவில் ஆங்காங்கே பல தீர்த்தங்களுடனும் பார்க்கவே அழகாக இருக்கும். இத்திருதலத்தின் மகிமையை திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், அருணகிரிநாதரும் போற்றி பாடியிருக்கிறார்கள். இத்தலத்திற்கு புள்ளிருக்குவேளூர் என்ற திருப்பெயரும் உண்டு. ஏனெனனில் புள் என்றால் ஜடாயு, இருக்கு என்றால் ரிக்வேதம், வேள் என்றால் முருகன், ஊர் என்றால் சூரியன். இந்நால்வரும் வழிபட்ட இடமாதலால் இப்பெயர் பெற்றது.

மூர்த்திகள்; இங்கிருக்கும் சிவனின் பெயர் வைத்திய நாதர், அம்பாளின் பெயர் தையல் நாயகி. பல தீர்க்க முடியாத நாலாயிரத்து நானூற்றி நாப்பத்தெட்டு நோய்களையும் தீர்த்து வைக்க சிவனும், அவருக்கு உதவியாக அம்பாளும் தன் கையில் தைல பாத்திரமும், வில்வ மரத்தடி மண்ணும், சஞ்சீவியும் ஏந்தி,

கயிலையிலிருந்து கிளம்பி இத்திருத்தலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். மற்றபடி இங்கு முருகன் செல்லக்குழந்தையாக செல்வமுத்துக்குமரனாக அமர்ந்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் தான் முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கினார் என்ற பெருமையும் சாரும்.




இன்னும் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்தலம் விளங்குவதால் செவ்வாய் தோஷம், மற்றும் குடும்ப ஒற்றுமைக்காவும், வியாதிகளுக்காவும் அங்காரகனை வணங்கினால் தீரும் என்பது உறுதி. மற்றும் இத்தலத்தில்


நவகிரகங்கள் வக்கிரமில்லாமல், சிவனின் சந்நிதிக்கு பின்புரத்தில் வரிசையாக நின்று நோய்கள் தீர வேண்டி பிராத்திக்கும் காட்சியும்
தனி சிறப்புகளுள் ஒன்று.


தீர்த்தங்கள்; இக்கோவிலில் பல தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இத்தீர்த்தத்தில் சித்தர்கள் இறைவனுக்கு அபிஷேகித்த தேவாமிர்த்தத்தை கலந்ததால் இப்பெயர் பெற்றது. அது மட்டும் அல்லாமல் அங்கரகனின் செங்குஷ்டத்தை தீர்த்த தீர்த்தமாக விளங்குவதால் இப்பெயர் பெற்றது எனவும் கூறலாம். இன்னும் காமதேனு, கிருதாயுகத்தில், தன் முலைப்பாலால் இறைவனுக்கு செய்த அபிஷேகம் தான் இன்று தீர்த்தமாக உருவாகியிருக்கிறது என்றும் வரலாறு கூறுகிறது. இதனால் தான் இத்தீர்த்தத்திற்கு கோக்ஷர தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது. இதைத்தவிர இத்திருதலத்தில் கோதண்ட தீர்த்தம், அங்க சந்தான தீர்த்தம் என்ற மற்ற தீர்த்தங்களும் உள்ளன. இங்கு முன்னொரு காலத்தில் சதானந்த
முனிவர் தவம் செய்துக்கொண்டிருந்த போது, பாம்பிடமிருந்து தப்பிக்க தவளை தண்ணீருக்குள் குதித்தபோது அந்த தண்ணீர் அவர் மீது தெளித்து தவத்தைக் கலைத்தது. இதனால் இங்குள்ள தீர்த்தத்தில் தவளையும், பாம்பும் வாசம் செய்யக் கூடாதென்று முனிவர் சிபித்ததால், இத்தீர்த்தங்களில் இப்பொழுதும் தவளைகளும், பாம்பும் வசிப்பதில்லை. இன்னும் இந்திரப்பதி, கௌதம, சர்வமுக்தி போன்ற பல தீர்த்தங்களும் உள்ளன.


ஜடாயு குண்டம்; இராவணன் சீதையை கவர்ந்து இழுத்துச் செல்லும் போது, ஜடாயு சீதையை காப்பாற்ற முயச்சித்தார். அப்பொழுது ஜடாயுவின் இரு சிறகுகளையும், இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின் ராமர் வந்ததும் நடந்ததைக் கூறிய ஜடாயு, தன்னை வைத்தீஸ்வரன் கோவிலில் தகணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டு, அவர் காலடியில் உயிர் துரந்தார். ராமரும்
ஜடாயுவின் வேண்டுகோளின் படி அவரை இக்கோவிலில் தகணம் செய்தார். இந்த இடத்திற்கு பெயர் ஜடாயு குண்டம். இந்த குண்டத்தில் இருக்கும் திரு நீற்றினை வேண்டி இட்டுக் கொண்டால் நோய்கள் திரும்.


திருசாந்துருண்டை; இந்த மருந்து வைத்தீஸ்வர்ர் கோவில் பிராசாதமாக வழங்கப் படுகின்றது. இந்த மருந்தைத்தான் அங்காரகனின் குஷ்ட நோயை தீர்க்க இறைவன் அருளினார் என்று புராணம் கூறுகின்றது. இந்த மருந்ததை செய்யும் முறை என்னவென்றால் ஜடாயு குண்டத்திலிருந்து விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தையும் குழைத்து வேண்டி முத்துக்குமார ஸ்வாமி
சந்நிதியிலுள்ள அம்மியில் வைத்து அரைத்து, அதை உருட்டி அம்மன் திருவடியில் வைத்து பிரார்த்தனை செய்து சிவனின் திருவடிகளில் வைத்து பின் வேண்டியவர்களுக்கு வினியோகம் செய்யப் படுகிறது. இதனை உண்டால் தீராத வியாதிகளும் தீரும் என்பது உறுதி.


இத்தலத்தில் விசேஷங்கள் என்று கூறினால், முருகனுக்கு ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் சந்தனத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் பிரசித்திப் பெற்றது. பின் தினமும் சிவனுக்கும், அம்பாளுக்கும் ஆறு கால பூஜைகள் நடைப்பெரும், பின் பங்குனி பிரம்மோற்ச்சவமும் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலில் முருகன் செல்லக் குழந்தையானதால் அவரை தூங்க வைத்த பின்புதான் சிவனுக்கு அர்த்த ஜாம பூஜை நடைப்பெரும். பின் அங்காரகனுக்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், அபிஷேகம் செய்து ஆலயம் முழுவதும் வலம் வரும் சம்பவம் ஏற்படும்.

Tuesday, June 26, 2007

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும்

நான் கூறும் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் என்னும் திருதலத்தில் உள்ளது. இத்தலத்தில் தான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார். அவருக்கென இக்கோவிலில் தனி சந்நிதியொன்று உள்ளது. இங்குள்ள பெருமாள் தன் துணைவிகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு கோவிலும் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கலோக கதவை
திறப்பார்கள். ஆனால் இக்கோவிலே பூலோகத்தின் வைகுண்டமாக கருதப்படுவரால் வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு இக்கோவிலில் அடி எடுத்து வைத்தாலே சொர்க்க வாசலில் நுழைந்த முழு பலனைப் பெறலாம். இங்குள்ள தாயாரின் பெயர் யதிராஜவல்லி. தாயாருக்கென்று தனி சந்நிதியுள்ளது. அத்தோடு ஆண்டாளுக்கும் தனி சந்நிதி ஒன்று தனியாக உள்ளது. ஆண்டாளின் அழகை வர்னிக்க நம் அகக்கண் கூட பத்தாது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பிறகு ராமருக்கும், வேணுகோபாலருக்கும் தனித்தனி சந்ந்திகள் உள்ளன. இப்பெருமாளின் திருநட்சத்திரம் திருவோணம். ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரங்கள் வரும் தினங்களில் திருவீதி உலா வரும் வைபோகத்தை நாம் காணலாம்.


ஸ்தல வரலாறு; இக்காலத்தில் ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் ஒரு நாள் சிவபெருமான் கைலாயத்தில் தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவர் உடம்பில் இருந்த வஸ்திரம் நழுவி விழுந்தது. இதை பார்த்த சிவகணங்கள் சிவனை
பார்த்து சிரித்தன. இதை உணர்ந்த சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சாபமளித்தார். இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவம் செய்தார்கள். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக, கணங்களுக்கு காட்சி அளித்து , பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார்.
அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது.


தோஷம் நீங்கும் ஆலயத்தின் விசேஷம்; ராமானுஜர் என்பவர் ஆதிசேஷனின் மறுபிறவிகளில் ஒன்றாக பிறந்து பெருமாளின் உடனிருந்து, அவறை என்றுமே பிரியாதிருப்பவர். ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர். அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார். இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார். அவரைப் பற்றி கூறிக் கொண்டிருந்தால் ஒரு கட்டுரையே பத்தாது. ஆக ஆதிசேஷணனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.


ராமானுஜரின் சிறப்பாக கொண்டாடப்படும் விஷயங்கள்; நான் குறிப்பிடும் இவையெல்லாமே இக்கோவிலில் வேலை பார்க்கும் ஒருவர் கூறியது; இந்த ஊரில் இறந்த ஒவ்வொருத்தருக்கும் மோட்சம் அடையக்கூடிய பாக்கியம் பெறுவர். எப்படியெனில் சுவாமிக்கு சூட்டப்பட்ட திருமாலையையும், ஆளவந்தார் காஷாயம், பரிவட்டம் ஆகியவையை இறந்தவரின் உடலில் வந்து சாத்துவார்கள். இதனால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென நம்பிக்கை.



ஸ்ரீராமானுஜருக்கு அபிஷேகம் நடக்கும் போது அவருக்கு சாத்திய உடைகள் ஈரமாகி விடும் அல்லவா. ஆகவே அந்த நீரை பிழிந்து தீர்த்தமாக நாம் அருந்தினால் அவர்களுக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை உண்டு.


நப்பிக்கையுடன் செய்தால் பலன் உறுதி.

Wednesday, June 13, 2007

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் 2

(தொடர்ச்சி)

இதன் முன் பாகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

இத்தலத்தை ஒட்டிய மற்ற வரலாறு கதைகள்;

அர்தநாரீஸ்வரராக உருவான வரலாறு; ஒரு நாள் அம்மன் விளையாட்டாக சிவனின் இரு கண்களையும் பொத்தினாள். இதனால் உலகமே இருண்டு போயிற்று. இச்செயலினால் கோபமடைந்த சிவபெருமான் அம்மனை பூலோகத்தில் சென்று தவம் செய்து தன்னை அடையும் படி கூறினார். கணவரின் சொல்படி பூலோகத்திற்கு சென்று அம்மன் தவம் செய்ய தொடங்கினாள். இந்த கதையை விரிவாக படிக்க இங்கே பார்க்கவும். பிறகு பதிதன்னின் சொல்படி மாங்காட்டிலிருந்து காஞ்சிக்கு அம்மன் புறப்பட்டு சென்றாள். பிறகு காஞ்சியில் சிவனின் உருவத்தை செய்து வேண்டி வந்தாள். இதனால் சிவபெருமான், திருவண்ணாமலைக்கு வந்து தன்னுடைய உடலில் சரிபாதையை பெருமாறு கூறினார். பிறகு அம்மன் திருவண்ணாமலைக்கு சென்று சிவனையெண்ணி தவம் செய்ய தொடங்கினாள். அப்பொழுது அத்தவத்தை கலைக்க மகிடாசூரன் அங்கே வந்தான். இதனால் அம்மன் மகிஷாசுரமர்தினியாக உருவெடுத்து அவனைக் கொன்றாள். அதன்பின்னர் கார்த்திகை மாதம் பௌர்னமி கூடிய சுப தினத்தில் பிரதோஷ வேளையில் ஜோதிரூபமான சிவனை தரிசித்துவிட்டு அம்மன் சிவனின் இடபாகத்தைப் பெற்றாள். அதனால் தான் கார்த்திகை தீபத்தின் போது அர்த்தனாரீஸ்வரர் ரூபமாக எழுந்தருளி சிவனும் அம்பாளுமாக சேர்ந்து எல்லோருக்கும் காட்சி கொடுக்கிறார்.

முருகனின் அருள்பெற்ற அருணகிரிநாதர்; அருணகிரிநாதர் தன் இளமை காலத்தில் வாழ்க்கையை வெருத்து வள்ளாள மகாராஜா கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கு தோன்றி அருணகிரிநாதரை காப்பாற்றி அவருக்கு அருள் புரிந்தார். பின்பு அவர் முருகப்பெருமானின் மீது அளவு கடந்த பக்தி
வைத்து பல பாடல்களை இயற்றினார். இதனால் இவர் மேல் பொறாமை கொண்ட அரசவைப்புலவரான சம்பந்தன் நீ அழைத்தால் உனது முருகன் வருகிறானா அல்லது நான் அழைத்தால் எனது காளி தேவி வருகிறாளா? என்று அகந்தையோடு பேசினான். பிறகு அருணகிரிநாதர் தன் நிலைமையை முருகனிடம் கூறி மன வேதனை அடைந்தார். இதனால் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சி தந்தருளினார். அகந்தையாக பேசியதால் காளி தேவி சம்பந்தனுக்கு காட்சி கொடுக்கவில்லை. இதனால் பெரும் கோபம் கொண்ட சம்பந்தன், அருணகிரிநாதனின் புகழை அழிக்க தக்க சமயத்திற்காக காத்திருந்தார். அதற்கு சமயமாக விஜயநகர் மன்னரான பிரபுவிட தேவராயர் தன்னுடைய கண் பார்வை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை தனக்கு சாதகமாகிக்கொள்ள சம்பந்தன், பிரபுவிட மன்னரைப் பார்த்து தங்களுக்கு கண் பார்வை கிடைக்க ஒரு வழி இருக்கிறது என்றார். அது என்னவென்றால் சொர்க்கத்தில் இருக்கும் பாரிஜாத மலரைக் கொண்டு வைத்தியம் செய்தால் இழந்த கண்களை திரும்ப பெற முடியும் என்றும், ஆனால் இதை அருணகிரிநாதரால் தான் கொண்டு வர முடியும் என்றார். இதனால் மன்னரும் அருணகிரிநாதரிடம் தனக்கு இச்செயலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அருணகிரிநாதரும் அதற்கிணங்க தன்னுடைய பூத உடலோடு சொர்க்கத்திற்கு செல்ல முடியாததால் ஒரு இறந்த கிளியிடம் தன் உயிரை வைத்து கூடுவிட்டு கூடு பாய்ந்து சொர்க்கத்திற்கு சென்றார். ஆனால் சம்பந்தரின் சூழ்ச்சியால் அருணகிரினாதரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.

இதனால் அங்கு அருணகிரிநாதர் கிளிரூபத்திலேயே இருந்து முருகனின் பாடல்களை இயற்றினார். அங்கு கிளி வடிவமாக ஒரு கோபுரத்தில் அருணகிரிநாதர் தங்கியதால் அது கிளி கோபுரம் என்ற பெயரைப் பெற்றது.

வள்ளாள மகாராஜாவின் மகனான பரமசிவன்; வள்ளாள மகாராஜாவிற்கு தன் மேல் மிகவும் கர்வம் கொண்டு அருணாசலேசுவரர், தான் சொன்னால் அனைத்தையும் நிறை வேற்றுவார் என்ற நினைப்போடு வாழ்ந்து வந்தார். இதனால் இவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான் அவருக்கு குழந்தையாக பிறந்தார். ஆனால் வள்ளாள மகாராஜா, தாம் எடுத்து அந்த குழந்தையை கொஞ்சும் போது சிவனாக பிறந்த அந்த குழந்தை மறைந்து விட்டது. மனம் கலங்கி சிவனை வந்து மகாராஜா வேண்டினார். இதனால் மகாராஜாவின் தவறை உணர்த்தி அவருக்கு மகனாக பிறந்ததால் தாமே அவருக்கு ஈமக்கிரியைகளை செய்துவிப்பதாக அருணாசலேசுவரர் வாக்களித்தார். இதனால் தான் இன்றும் மாசி மாதத்தில் வள்ளாள மகாராஜாவிற்கு அருணாசலேசுவரர் திதி செய்து வைக்கிறார். இதற்கு மாசி மகம் தீர்த்தவாரி என்று பெயர்.

மற்றொரு சம்பவம்; வள்ளாள மகாராஜா தன் பெயரில் ஒரு கோபுரத்தை கட்டி முடித்து விட்டு தன் பேரில் கர்வம் கொண்டார். இதனால் இவருக்கு புத்தி சொல்ல விரும்பிய சிவபெருமான் பத்து நாட்கள் தொடர்ந்து வரும் திருவிழாவில் ஒன்பது நாளும் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல மறுத்து விட்டார். இதனால் மனம் வருந்தி தன்
தவரை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் திருவிழாவின் கடைசி நாளில் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல சிவபெருமான் அனுமதித்தார்.

ரமண மகரிஷியின் பாதாள லிங்கம்; ஆயிரங்கால் மண்டபத்தில் படிகட்டின் வழியாக கீழே சென்றால் அங்கே நாம் பாதாள லிங்கத்தை பார்க்கலாம். அங்கே தான் ரமண மகரிஷி தன் இளமை காலத்தில் தங்கி சிவனையெண்ணி தவமிருந்தார். அவருக்கு உதவியாக சேஷாத்திரி என்பவர் உடனிருந்தார். மனதில் உள்ள ஆசைகளையும், எண்ணங்களையும் எப்படி அடக்க வேண்டும் என்று எளிமையான முறையில் கூறியது இவரது சிறப்பு. ஒரு எடுத்துக்காட்டாக...... ஒரு பெண் தன் விலையுயர்ந்த நகையை கழுத்தில் அணிந்துக் கொண்டே மற்ற எல்லா
இடங்களிலும் தேடியது, தன் பொருளின் மேல் தான் வைத்த பற்றை பற்றி எல்லோருக்கும் தெரியும் படி செய்தது போன்ற கதையில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

இவையே திருவண்ணாமலை ஸ்தலம் பற்றி நான் அறிந்ததும் கேட்டதும். உங்களுக்கு தெரிந்த வரலாறு கதை இருந்தால் தயவு செய்து கூறவும். நானும் தெரிந்துக் கொள்வேன்.

Wednesday, June 6, 2007

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் 1

இந்த வாரத்தின் கோவில் திருவண்ணாமலையில் இருக்கும் திரு அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று.
திருவாரூரில் பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும், ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.
இம்மலையில் சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது. அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமானம். அதுவும் பௌர்னமியன்று சுற்றினால் மிகவும் விசேஷம். இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது. முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது. மூன்றாவது பிராகரத்தில்
உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது. மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, வினாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம். இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.


ஸ்தல வரலாறு; ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று. இதனால் இருவரும் சிவபெருமானை மத்யஸ்த்திற்கு அழைத்தார்கள். ஆகையால் சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை போக்க ஒரு போட்டி வைத்தார். யார் முதலில் தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ பார்த்து
சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார். பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால் விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை. தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டார். அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின் முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக் காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிற வருஷ காலமாக கீழே விழுவதால் தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோர்க்கக்கூடாது என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக பொய் சாட்சி கூற கூறினார். இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ
சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபித்தார். அப்படி ஜோதியாக சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.


இத்தலத்தை ஒட்டிய மற்ற வரலாறு கதைகளை அடுத்த பதிவில் பார்க்கலாமா.....

(தொடரும்)

Tuesday, May 22, 2007

மாங்காட்டின் முக்கோவில்கள்

இந்த வாரத்தின் கோவில் மாங்காட்டில் உள்ள முக்கோவில்கள். முதலில் வள்ளீஸ்வரர் சிவன் கோவில். இந்த ஆலயம் மாங்காட்டு காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இத்திருக்கோவிலில் அம்மனே சிவனை வந்து வணங்குவதாக ஐதீகம். அம்மன் சிவனை வந்து வணங்கும் இடத்தை குறிப்பதற்காக அங்கே நந்தியின் முன்னால் அம்மனின் பாதங்களை பதித்திருக்கிறார்கள். இது மிகவும் பழமையானக் கோவிலாகும். ஆனால் இந்த கோவிலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும். எல்லா மக்களும் அம்மன் கோவிலுக்கு மட்டும் சென்று வருவார்கள். இதனால் இந்த கோவில் பிரசித்தி ஆகவில்லை. ஆனால் இங்கே அம்மனே சிவனை வணங்க வருவதால், இந்த சிவனுக்கு சக்தி அதிகம். ஆதிசங்கரர் இந்த கோவில் முன்னேற்றத்திற்கு உதவியிருக்கிறார். இப்பொழுது சிறிது காலமாக ஆலய திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. தன்னால் இயன்ற அளவிற்கு ஒவ்வொருத்தரும் இந்த கோவிலுக்கு கொடுத்து உதவினால், கோவில் முன்னேற்றத்திற்கு நலமாக இருக்கும்.

அம்மன் கோவிலின் மற்றொரு பக்கத்தில் விஷ்னு ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலில் இருக்கும் பெருமாள் தன் தங்கையான அம்மனின் திருமணத்திற்காக நகைகள் வாங்கி கொண்டு வருவதாக ஐதீகம். அதனால் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தன் கையில் நகையுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில், பெருமாள் சந்நிதியின் ஒரு புரத்தில் ஆண்டாள் சந்நிதி தனியாக உள்ளது. மற்றொரு புரத்தில் மகாலக்ஷ்மிக்கு தனி சந்நிதி உள்ளது.

மாங்காடு காமாட்சி அம்மன் ஸ்தல வரலாறை படிக்க இங்கே பார்க்கவும்.

இங்கே அம்மனின் ஆலயத்திற்கு வருபவர்கள், மற்ற கோவில்களுக்கும் சென்று வந்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

ஸ்வர்ண காமாக்ஷி

வேத வேத ரூபிணி என்ற பாட்டை கேட்கவும், படிக்கவும் இங்கே பார்க்கவும்.

Wednesday, May 9, 2007

கர்பரக்ஷாம்பிகை அம்மன்

நான் இன்று கர்பரக்ஷாம்பிகை அம்மன் கோவில் பற்றி எழுதவிருக்கிறேன். இத்திருக்கோவில் திருக்கருகாவூர் என்ற இடத்திலுள்ளது. இந்த கோவில் கும்பகோணத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நெய் வாங்கிக் கொடுப்பார்கள். அந்த நெய்யை அம்மனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து தம்பதியிடம் கொடுப்பார்கள். அதை தினமும் 48 நாட்கள் தொடர்ந்து (பெண்களுக்கு 3 நாட்கள் தவிர) இருவரும் சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் அம்மனின் அருளால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். அதே போல கர்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆக தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து விளக்கெண்ணெய் வாங்கித் தர வேண்டும். இதை அம்மனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து தருவார்கள். இதை தினமும் சிறிது எடுத்து அடி வயிற்றில் தடவ வேண்டும். அதே போல வலி எடுக்கும் போது இந்த எண்ணையை தடவிக்கொண்டால் அம்மனின் அருளால் சுக்ப் பிரசவம் ஆகும். கன்னிப் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் சீக்கரம் திருமணம் கைக்கூடும்.


ஸ்தல வரலாறு: நித்துருவர் முனிவருக்கும் வேதிகாவிற்கும் குழந்தை நீண்ட நாளாக பிறக்காத்தினால் சிவனையும், அம்பாளையும் வேண்டி பூஜை செய்து வந்தார்கள். இதனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. அப்பொழுது ஒரு நாள் தன்னையும் மறந்து, தன் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை நினைத்து வேதிகா கனவு கண்டுகொண்டிருந்தாள். முனிவரும் அப்பொழுது வெளியில் சென்று விட்டார். இந்த நேரம் பார்த்து தர்ச்செயலாக அங்கு உர்த்தவ முனிவர் வந்து சேர்ந்தார். அவர் வந்ததைக் கூட வேதிகா கவனிக்காதலால் வெகு கோவம் கொண்டு, நீ நினைத்து கொண்டிருப்பது எதுவானாலும் உன்னை விட்டு பிரிந்து போக என்று சபித்தார். இதனால் இவள் வயிற்றிலிருக்கும் சிசு தன்னுடைய கர்ப்பபையிலிருந்து நகர்ந்து சென்றது. இதனால் வலி தாங்க முடியாமல் அம்பாளை வேண்டினாள், இதனால் அம்பாள் கர்ப்பரக்ஷாம்பிகையாக அவதரித்து அந்த சிசுவை ஒரு பானையில் வைத்து, பாதுகாத்து வந்தாள். பிறகு பத்து மாதம் முடிந்ததும் அந்த பானையிலிருந்து ஒரு அழகான ஆண் குழந்தையை வேதிகாவிடம் ஒப்படைத்தாள். அதனால் வேதிகா, அம்மனிடம் இந்த இடத்திலேயே இருந்து எல்லா கர்பிணி பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதனால் தான் அம்மன் கர்பரக்ஷாம்பிகையாக இங்கிருந்து இன்றைக்கும் எல்லோரையும் காத்து வருகிறாள்.


இங்கிருக்கும் சிவனின் பெயர் முல்லைவன நாதர். இந்த சிவலிங்கம் ஸ்வயம்புவாக அதாவது தானாகவே உருவானது. இதனால் சிவனுக்கு தண்ணீர் விட்டு அபிஷேகம் செய்வதில்லை. ஆனால் புனுகு சாத்தி சிவலிங்கத்தை வைத்திருப்பார்கள். குணமாகாத வியாதி உள்ளவர்களும் இங்கு வந்து சிவனுக்கு புனுகு சட்டம் சாத்தி சிவனை வழிப்படுவார்கள். இதனால் வியாதி குணமாகி நலமடைவார்கள்.

சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்ப சசிசூட ஹரிதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே

சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்

ஹமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷிணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணிபவேது



Wednesday, May 2, 2007

செண்பகவல்லி அம்மன்




நான் இன்று செண்பகவல்லி அம்மன் கோவிலைப் பற்றி எழுதப்போகிறேன். இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கோவில்மேடு என்னும் இடத்தில் காந்தி மைதானத்திற்கு பின்புரத்தில் உள்ளது. இந்த கோவிலை செண்பகராஜா என்னும் அரசர் கட்டியுள்ளார். இது மிகவும் பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் இருக்கும் சிவனின் பெயர் பூவனநாதசுவாமி. இங்கிருக்கும் அம்மனின் சிலை வடிவம் சுமார் ஏழு அடி உயரம் இருக்கும். அம்மனை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். அம்மனுக்கும் சிவனுக்கும் தனித்தனி பிரகாரங்கள் உள்ளது. இங்கிருக்கம் அம்மனுக்கு சக்தி அதிகம். அம்மனின் அருளால் அங்கு எல்லோருமே சுபிக்ஷமாக இருக்கிறார்கள். இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு, நவராத்திரி, வருஷப்பிறப்பு போன்ற விசேஷங்கள் விமர்சையாக கொண்டாடப்படும். அதுமட்டுமில்லாது, மார்கழி மாதம் முழுவதுமே அம்பாளுக்கு விசேஷமாக கொண்டாடப்படும். உங்களுக்கு இக்கோவில் பற்றி தெரிந்த மற்ற விஷயங்களையும் நாம் பரிமாரிக்கொள்ளலாம்.

Thursday, April 26, 2007

கற்பூர நாயகியே கனகவல்லி

கற்பூர நாயகியே கனகவல்லி பாடலைப் பார்க்க ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில் சொடுக்கவும்.

Tuesday, April 24, 2007

சோம்னாத்பூர்






















 நான் இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள சோம்னாத்பூர் என்னும் இடத்தில் இருக்கும் கேசவ கோவிலைப் பற்றி உங்களிடம் எண் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கோவிலானது ஹொய்சால ராஜா நரசிம்மா3 (1254-1291 A.D.) வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலை கட்டியது சோம்னாத் என்னும் படைத் தளபதி. அவன் இக்கோவிலை காவிரி நதிக்கரையில் அமைத்திருக்கிறான். இவன் இந்த கோவிலை கட்ட பணவுதவியும், உத்தரவும் அந்நாட்டு மன்னனிடம் கேட்டு பெற்று, பின் இருப்பதிலேயே மிகவும் திறமை வாய்ந்த ஹொய்சாலா சிற்பிகளை கொண்டு இந்த கோவிலை கட்டி முடித்தான். இந்த கோவிலை செய்த சிற்பிகளின் பெயர் மல்லிதம்மா, மாசானத்தம்மா, சாமேயா, பாமேயா, மற்றும் பலர். மல்லிதம்மா என்னும் சிறப்புவாய்ந்த சிற்பி இருப்பதிலேயே அதிகமான சிற்பங்களை செதுக்கியுள்ளார். அந்தந்த சிற்பங்களுக்கு கீழே அதை உருவாக்கிய சிற்பிகள் தங்கள் பெயரை செதுக்கியுள்ளார்கள்.




இந்த கோவிலின் அமைப்பு, கோபுர வாசலை கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்து அதற்கு கீழ் 64 முக்குகள் வைத்து அதில் ஒவ்வொரு இடத்திலும் புராண கதை கொண்ட சிற்பங்களை வடித்துள்ளர்கள். இந்த கோவிலில் வேணுகோபாலர், கேசவர், ஜனார்த்தனர் ஆகியோரின் கர்ப்பகிரகங்கள் உள்ளன. தூண்களிலும், மேற்கூறையிலும் அழகாக வடிவங்களை சிற்பிகள் செதுக்கியுள்ளார்கள். அவை பார்க்க மிகவும் அழகாக உள்ளது. ஆக கோபுரதிற்கு உட்புரத்திலும், வெளிபுரத்திலும் சிற்பங்களாக நிறைந்து அந்த இடமே பார்க்க சொர்கலோமாக தோன்றும்.

இந்த கோவிலை நிறைய படத்தில் காட்சிகளாக பார்க்கலாம் (குறிப்பாக அருணாசலம் படத்தில் அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்ட என்ற பாட்டில் பார்க்கலாம்). இந்த கோவிலை நேரில் பார்த்து ரசித்தால் தான் மனதில் ஆழமாக பதியும். எல்லோரும் இந்த கோவிலில் உள்ள சிற்பங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த கோவிலைப் பற்றி கூற விரும்பினேன்.










Wednesday, April 18, 2007

அந்த அழகிய மாநகர் மதுரையிலே

என்னுடைய பங்களிப்பு இங்கே உள்ளது.

அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக

இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா

இந்த பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்

Friday, April 13, 2007

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்




நான் இன்று கருங்குளம் வெங்கடாசலபதி கோவில் பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் கூறுகிறேன். இத்திருக்கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் போகும் வழியில் இத்திருத்தலம் உள்ளது. இந்தக் கோவில் கருங்குளம் மலை மேல் உள்ளது. இந்தக் கோவிலில் ஒரு விசேஷம் என்னவென்றால் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள், இரண்டு சந்தன கட்டைகளாக நமக்கு காட்சியளிக்கிறார். இதற்கு ஒரு புராணக் கதை உள்ளது. அதைப் பற்றி பின் கூறுகிறேன். இந்தக் கோவிலில் மற்ற முக்கியமான விசேஷம் என்னவென்றால், இங்கு உறங்கா புளி மரமும், ஊறா கிணரும் உள்ளது. அதாவது இந்த புளிமரத்தில் என்றுமே புளியம்பூ புளியங்காயாக மாறாது அதுமட்டுமில்லாமல் இந்த மரம் என்றுமே உறங்காமல் இருக்கும், அதேபோல இந்த கிணற்றில் என்றுமே தண்ணீர் வற்றாமல் இருக்கும் அதனால் புதிதாக தண்ணீர் என்றுமே ஊற்றெடுக்காது. இந்த கோவிலில் சித்திரா பௌர்னமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
புராணக் கதை:
ஒரு காலத்தில் சுபகந்தன் என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் நெறி தவறாமல் அந்நாட்டு மக்களிடம் மிகவும் பிரியமாக பழகி வந்தான். அதனால் எல்லோரும் அவனிடம் அன்பாக பழகி வந்தார்கள். ஆனால் சில காலத்திற்கு பிறகு அவனுக்கு புற்று நோய் வர ஆரம்பித்தது. எந்த வைத்தியர்களாலும் அவனை குணப்படுத்த முடியவில்லை. புற்று நோய் அவன் உடம்பு முழுவதும் படற ஆரம்பித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் மிகவும் தவித்தான். பின் திக்கற்றவர்களுக்கு தெய்வமே கதி என்று திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று, அங்கு தங்கி இறைவனை நினைத்து முழுமனதுடன் பிரார்த்தித்தான். இதனால் பெருமாள் மகிழ்ந்து அவனது கனவில் தோன்றி, உன் நோய் குணமாக வேண்டுமென்றால் எனக்கு சந்தன கட்டைகளைக் கொண்டு வாகனம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்ததில் இரண்டு கட்டைகள் மிஞ்சும், அதை கருங்குளம் மலையில் வந்து வைத்து விடு, அந்த கட்டைகளில் நான் என்றும் வசிப்பேன் என்றார். இப்படி செய்தால் உன் நோய் கண்டிப்பாக குணமாகும் என்றார். இதனால் அந்த அரசனும் மகிழ்ந்து பெருமாள் சொன்னது போலவே சந்தன கட்டைகளைக் கொண்டு வாகனம் செய்து பின் மிஞ்சியதை கொண்டு வந்து உறங்கா புளிமரம் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தான். இதனால் அவனுடைய நோய் நீங்கியது. ஆகவே இந்த பெருமாளை முழுமனதுடன் வணங்கினால், நோய்கள் தீர்ந்து நலமாக வாழலாம். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

Saturday, March 24, 2007

சந்தோஷி மாதா


நான் இன்று சந்தோஷி மாதா பூஜை பற்றியும், விரதம் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். சந்தோஷம் அளிப்பவள் தான் சந்தோஷி மாதா. சந்தோஷி மாதா அவதரித்தது ரக்ஷாபந்தனும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்த தினம். ஆகையால் தொடர்ந்து பதினாறு வெள்ளிக் கிழமைகள் பூஜை செய்ய வேண்டும். பூஜையை வீட்டிலோ, அல்லது வேறு இடத்திலோ செய்யலாம். ஆனால் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். காலையில் எழுந்து தலைக்கு குளித்து பின் பூஜையை தொடங்கலாம். இதை வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால் புளிப்பு கலந்த சாப்பாடு எதையும் தொடக்கூட கூடாது வேண்டுமானால் பச்சை வாழைப்பழம் சாப்பிடலாம். பூஜை அறையை துடைத்து கோலம் போட்டு, பின் அதில் பலகை அல்லது தாம்பாளம் வைத்து, அதற்கு மேல் சந்தோஷி மாதா படம் வைக்க வேண்டும். படத்திற்கு எதிரில் கலசம் வைக்க வேண்டும். அதில் தண்ணீர் நிரப்பி பின் மாவிலைக் கொத்துடன் தேங்காய் வைக்க வேண்டும். கலசத்தை ஒரு நுனி இலையில் அரிசியைப் பரப்பி அதில் வைக்கவும். பின் கலசத்திற்கு பக்கத்தில் அல்லது எதிரில் நெய் விளக்கு ஏற்றிக் கொள்ள வேண்டும். பின் பூஜை செய்து, கதையும் படிக்க வேண்டும். பிறகு பருப்பு, அல்லது கொண்டைக் கடலை வெல்லம் சேர்த்து நைவேத்தியம் செய்ய வேண்டும். பின் அந்த ப்ரசாதத்தை தானும் அருந்தி மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அதற்குப் பின் அந்த கலசத்தில் இருக்கும் தண்ணீரை தானும் அருந்தி பின் வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அன்று ஒரு வேளை சாப்பிடலாம். ஆனால் எதிலும் புளிப்பு சேர்க்க கூடாது. புளிப்பு மோர் அல்லது புளிப்பு பழங்கள் கூட தொடக் கூடாது. இதே போல் பதினாறு வெள்ளிக் கிழமைகள் செய்து, பின் பதினேழாவது வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து எட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும். பின் அவர்களுக்கு தட்சணையாக துணியோ அல்லது பொருளோ கொடுக்கலாம் ஆனால் பணம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் அந்தப் பணத்தில் புளிப்பு பண்டங்கள் சாப்பிட்டால் அபசாரம் ஆகிவிடும். சந்தோஷி மாதா திருக்கோவில் சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ளது மற்றபடி மும்பை, பங்களூரு, ஆந்திரா இன்னும் சில இடங்களில் உள்ளது. நம்பிக்கையுடன் பூஜை செய்தால் கண்டிப்பக பலன் கிடைக்கும். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

குறிப்பு: இக்கட்டுரையை நான் tamiloviam.com மில் வெளியிட்டுள்ளேன்