Saturday, March 24, 2007

சந்தோஷி மாதா


நான் இன்று சந்தோஷி மாதா பூஜை பற்றியும், விரதம் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். சந்தோஷம் அளிப்பவள் தான் சந்தோஷி மாதா. சந்தோஷி மாதா அவதரித்தது ரக்ஷாபந்தனும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்த தினம். ஆகையால் தொடர்ந்து பதினாறு வெள்ளிக் கிழமைகள் பூஜை செய்ய வேண்டும். பூஜையை வீட்டிலோ, அல்லது வேறு இடத்திலோ செய்யலாம். ஆனால் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். காலையில் எழுந்து தலைக்கு குளித்து பின் பூஜையை தொடங்கலாம். இதை வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால் புளிப்பு கலந்த சாப்பாடு எதையும் தொடக்கூட கூடாது வேண்டுமானால் பச்சை வாழைப்பழம் சாப்பிடலாம். பூஜை அறையை துடைத்து கோலம் போட்டு, பின் அதில் பலகை அல்லது தாம்பாளம் வைத்து, அதற்கு மேல் சந்தோஷி மாதா படம் வைக்க வேண்டும். படத்திற்கு எதிரில் கலசம் வைக்க வேண்டும். அதில் தண்ணீர் நிரப்பி பின் மாவிலைக் கொத்துடன் தேங்காய் வைக்க வேண்டும். கலசத்தை ஒரு நுனி இலையில் அரிசியைப் பரப்பி அதில் வைக்கவும். பின் கலசத்திற்கு பக்கத்தில் அல்லது எதிரில் நெய் விளக்கு ஏற்றிக் கொள்ள வேண்டும். பின் பூஜை செய்து, கதையும் படிக்க வேண்டும். பிறகு பருப்பு, அல்லது கொண்டைக் கடலை வெல்லம் சேர்த்து நைவேத்தியம் செய்ய வேண்டும். பின் அந்த ப்ரசாதத்தை தானும் அருந்தி மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அதற்குப் பின் அந்த கலசத்தில் இருக்கும் தண்ணீரை தானும் அருந்தி பின் வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அன்று ஒரு வேளை சாப்பிடலாம். ஆனால் எதிலும் புளிப்பு சேர்க்க கூடாது. புளிப்பு மோர் அல்லது புளிப்பு பழங்கள் கூட தொடக் கூடாது. இதே போல் பதினாறு வெள்ளிக் கிழமைகள் செய்து, பின் பதினேழாவது வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து எட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும். பின் அவர்களுக்கு தட்சணையாக துணியோ அல்லது பொருளோ கொடுக்கலாம் ஆனால் பணம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் அந்தப் பணத்தில் புளிப்பு பண்டங்கள் சாப்பிட்டால் அபசாரம் ஆகிவிடும். சந்தோஷி மாதா திருக்கோவில் சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ளது மற்றபடி மும்பை, பங்களூரு, ஆந்திரா இன்னும் சில இடங்களில் உள்ளது. நம்பிக்கையுடன் பூஜை செய்தால் கண்டிப்பக பலன் கிடைக்கும். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

குறிப்பு: இக்கட்டுரையை நான் tamiloviam.com மில் வெளியிட்டுள்ளேன்

0 comments: