Sunday, March 25, 2007

வித்தியாசமான (weird) குணங்கள்

வணக்கம்,

என்னுடைய வித்தியாசமான ஐந்து குணங்களை திருமதி முத்துலெட்சுமி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். நானே இப்பொழுது தான் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். என்னைப் பற்றி சிந்திக்க வைத்ததிற்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

1. என் மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்து கொண்டே இருப்பேன். குறிப்பாக நான் எனக்குள்ளே ஒரு தனி வாழ்க்கை வாழ்வேன். இதனால் சில சமயத்தில் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே கவனிக்காமல் இருப்பேன். பிறகு மற்றவர்கள் என்ன பேசினார்கள் என்றே எனக்கு தெரியாமல் போய்விடுகிறது. குறிப்பாக பயணம் செய்யும் நேரங்களில் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பது எனக்கு வழக்கமாக போயிற்று. இதனால் நான் வெளியில் வேடிக்கை பார்த்தும் என் மனதில் எதுவும் பதியாமல் போய்விடுகிறது.

2. குழந்தை மாதிரி சண்டைப் போடுவது. சில நேரத்தில் நான் குழந்தைப் போல சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டு சண்டைப் போடுவேன். பிறகு தான் தெரியும் அவர்கள் வேறு அர்த்தத்தில் சொல்கிறார்கள், நாம் தான் தவறாக நினைத்துக் கொண்டு விட்டோம் என்று. அதற்காக நாள் முழுவதும் வருத்தப் படுவேன். எதற்கு இந்த சின்ன பிள்ளைத்தனமோ எனக்கு தெரியவில்லை.

3. எதையும் பார்த்தால் முதலில் எந்த விஷயம் அதில் இல்லை என்று தான் பார்ப்பேன். இதனால் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும் என்றே தோன்றாது. குறிப்பாக ஏதாவது ஒரு புது இடத்திற்கு சென்றால் எல்லோரும் அங்கிருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி பாராட்டுவார்கள். ஆனால் நான் மட்டும் எது இந்த இடத்தில் இல்லை என்று பார்ப்பேன்.

4. நானாக யாரிடமும் உதவி கேட்க மாட்டேன். ஆனால் அவர்களே வந்து உதவி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பேன். இதனால் சிலபேர் வேலை விஷயத்தில் கண்டு கொள்ளவே மாட்டார்கள். கடைசியில் நானே எல்லா வேலைகளையும் செய்யும் படி ஆகிவிடும். இதனால் யாருக்கு லாபம் என்று சொல்லுங்கள்?

5. முன்பெல்லாம் தனக்கு தெரியாத இல்லை சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிடவே மாட்டேன். இதனால் வீட்டில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியாது. நான் உண்டு, என் வேலை உண்டு என்றிருப்பேன். ஆனால் இதனால் நிறைய விஷயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லாமல் போயிற்று. உதாரணமாக அம்மா, அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தேன். பிறகு தான் இது தவறான விஷயம் என்று தெரிந்துக் கொண்டு திருத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

இவர்களை நான் அழைக்கிறேன்

மு.கார்த்திகேயன்
எஸ் கே அய்யா
சிறில் அலெக்ஸ்
எஸ்பி விஆர் சுப்பையா
வடுவூர் குமார்

Saturday, March 24, 2007

சந்தோஷி மாதா


நான் இன்று சந்தோஷி மாதா பூஜை பற்றியும், விரதம் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். சந்தோஷம் அளிப்பவள் தான் சந்தோஷி மாதா. சந்தோஷி மாதா அவதரித்தது ரக்ஷாபந்தனும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்த தினம். ஆகையால் தொடர்ந்து பதினாறு வெள்ளிக் கிழமைகள் பூஜை செய்ய வேண்டும். பூஜையை வீட்டிலோ, அல்லது வேறு இடத்திலோ செய்யலாம். ஆனால் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். காலையில் எழுந்து தலைக்கு குளித்து பின் பூஜையை தொடங்கலாம். இதை வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால் புளிப்பு கலந்த சாப்பாடு எதையும் தொடக்கூட கூடாது வேண்டுமானால் பச்சை வாழைப்பழம் சாப்பிடலாம். பூஜை அறையை துடைத்து கோலம் போட்டு, பின் அதில் பலகை அல்லது தாம்பாளம் வைத்து, அதற்கு மேல் சந்தோஷி மாதா படம் வைக்க வேண்டும். படத்திற்கு எதிரில் கலசம் வைக்க வேண்டும். அதில் தண்ணீர் நிரப்பி பின் மாவிலைக் கொத்துடன் தேங்காய் வைக்க வேண்டும். கலசத்தை ஒரு நுனி இலையில் அரிசியைப் பரப்பி அதில் வைக்கவும். பின் கலசத்திற்கு பக்கத்தில் அல்லது எதிரில் நெய் விளக்கு ஏற்றிக் கொள்ள வேண்டும். பின் பூஜை செய்து, கதையும் படிக்க வேண்டும். பிறகு பருப்பு, அல்லது கொண்டைக் கடலை வெல்லம் சேர்த்து நைவேத்தியம் செய்ய வேண்டும். பின் அந்த ப்ரசாதத்தை தானும் அருந்தி மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அதற்குப் பின் அந்த கலசத்தில் இருக்கும் தண்ணீரை தானும் அருந்தி பின் வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அன்று ஒரு வேளை சாப்பிடலாம். ஆனால் எதிலும் புளிப்பு சேர்க்க கூடாது. புளிப்பு மோர் அல்லது புளிப்பு பழங்கள் கூட தொடக் கூடாது. இதே போல் பதினாறு வெள்ளிக் கிழமைகள் செய்து, பின் பதினேழாவது வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து எட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும். பின் அவர்களுக்கு தட்சணையாக துணியோ அல்லது பொருளோ கொடுக்கலாம் ஆனால் பணம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் அந்தப் பணத்தில் புளிப்பு பண்டங்கள் சாப்பிட்டால் அபசாரம் ஆகிவிடும். சந்தோஷி மாதா திருக்கோவில் சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ளது மற்றபடி மும்பை, பங்களூரு, ஆந்திரா இன்னும் சில இடங்களில் உள்ளது. நம்பிக்கையுடன் பூஜை செய்தால் கண்டிப்பக பலன் கிடைக்கும். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

குறிப்பு: இக்கட்டுரையை நான் tamiloviam.com மில் வெளியிட்டுள்ளேன்

Thursday, March 22, 2007

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

எல்லோருக்கும் வணக்கம்,

நான் இன்று "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" என்ற திரைப்படம் பற்றி எண் எண்ணங்களை கூறுகிறேன். இந்தப் படம் நான் பார்த்து ஒரு மாதம் ஆயிற்று. இந்தப் படத்தில் பரத் கதாநாயகன், மல்லிகா கபூர் கதாநாயகி, மற்றபடி அருண்குமார், தீபு இதில் நடித்திள்ளார்கள். படத்தில் முதல் காட்சி சண்டைப் படம் மாதிரி தோன்றும், ஆனால் இது சிரிப்பு மற்றும் பாசம் கலந்த படம். இதில் பரத் தன் காதலியைத் தேடி சென்னை வருகிறார். ஆனால் அவருடைய காதலி தீபு வேரு ஒருவனைக் காதலிக்கிறாள். அதேபோல் தன்னுடைய காதலியை காதலிக்கும் காதலன் அருண்குமார். அவரை ஒரு பெண் காதலிக்கிறாள், அவள் பெயர் மல்லிகா கபூர். இவர்கள் இருவருமாக சேர்ந்து அவர்களுடைய காதலைப் பிரிக்க சதி திட்டம் செய்கிறார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஆனால் இருதியில் இருவரும் நீ, நான் என்ற போட்டியில் சண்டை போட்டு அவர்களே பிரிந்து விடுகிரார்கள். இதற்கு இடையில் பரத் ஒரு ஹோட்டலில் பாஸ்க்கரை சந்திக்கிறார். இவராலும் மல்லிகா கபூராலும் பாஸ்க்கரின் சர்வர் வேலை போய்விடுகிறது. பிறகு ஒரு நாள் அருண்குமார் அலுவலகத்தில் பாஸ்க்கரை, பரத் சந்திக்கிறார். அப்பொழுது பாஸ்கரிடம், பரத்திற்கு பழக்கம் ஏற்படுகிறது. அப்பொழுது தான் எதற்காக சென்னைக்கு வந்ததாக பரத் கூறுகிறார். அவருடைய அம்மா ரேணுகா, ஒரு பெண்ணைப் பார்த்து இவள் தான் தனக்கு மருமகளாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் இந்த விஷயம் எதுவுமே அந்த பெண்ணிர்க்கு தெரியாது. ஒருநாள் கல்லூரி விழாவிற்காக ஒத்திகை நடக்கும் நேரத்தில் பரத் அந்த பெண்ணை சந்திக்கிறார். அவரைப் பார்த்தவுடன் தன் மனதை பரி கொடுக்கிரார். இது எல்லாவமே ஒரு தலை பட்ச காதல் தான். ஆனால் அவர் அங்கு பார்த்த பெண் தீபு இல்லை, மல்லிகா கபூர். ஆனால் மல்லிகா கபூர், அருண் குமாரை ஒரு தலை பட்சமாக காதலிக்கிறார். ஆம் அருண்குமாருக்கு, மல்லிகா கபூரை தெரியவே தெரியாது. தன்னுடைய காதலியின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்க்காக அருண்குமாரிடம் வேலைக்கு சேர்கிறார். பின்பு பரத், அருண்குமாரின் மனதை மாற்றி இவரை மல்லிகா கபூரை காதலிக்க செய்கிறார். அருண்குமார் காதலித்த தீபு, வேரு ஒருவனை காதலிக்க ஆரம்பிக்கிறார். கடைசியில் நந்தினி கபூருக்கும், அருண்குமாருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகு தான் மல்லிகா கபூருக்கு, பரத்தின் காதலி தாம் தான் என்று தெரிய வருகிறது. தனக்கு தெரியும் என்று காட்டிக் கொண்டால் பரத்திற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால், அதை சொல்லாமலேயே இருந்து விடுகிறார். ஆக கதை என்றால் பரத் செய்யும் தியாகங்கள் தான். படத்தில் கார்டூன் கலந்து ஆரம்பத்தில் கலகலப்பாக உள்ளது பிறகு சென்டிமென்ட் தான். படம் நன்றாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?

Monday, March 12, 2007

தண்டீஸ்வரர் கோவில்

இந்தக் கோவிலானது வேளச்சேரியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்வயம்புவாகவே சிவலிங்கம் அமைந்துள்ளது. சிவனின் பெயர் தண்டபாணீஸ்வரர், அம்பாளின் பெயர் கருணாம்பிகை. இந்த கோவிலில் மற்றும் பிள்ளையார், முருகர், துர்க்கை, சரஸ்வதி, லஷ்மி, தட்சினாமூர்த்தி, நவகிரக சந்நிதிகள் உள்ளன. இது மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலின் விசேஷம் என்னவென்றால் மார்க்கண்டேயனுக்காக, சிவன் யமனிடம் சண்டையிட்டு பின் அவனுடைய தண்டத்தை கைப்பற்றினார். பின்பு, யமன் சிவனையெண்ணி தவம் செய்து, தன்னுடைய தண்டத்தை இந்த கோவிலில் தான் மீண்டும் பெற்றார். அதனால் தான் இந்த ஆலயத்தின் பெயர் தண்டீஸ்வரர் ஆலயம் என பெயர் பெற்றது. இந்த கோவிலில் யம தீர்த்தக் குளம் உள்ளது. இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

Friday, March 9, 2007

திருவேற்காடு கருமாரியம்மன்


நான் இன்று உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போவது திருவேற்காடு ஸ்தலத்தைப் பற்றி தான். அங்கிருக்கும் அம்மனின் பெயர் தேவி கருமாரியம்மன். இந்த ஆலயம் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது.

ஸ்தல வரலாறு: ஒரு முறை அம்மன் கிழவி வேடம் பூண்டு, கதிரவனை சோதிக்க நினைத்தாள். ஆகையால் அம்மன் குறி சொல்லும் கிழவியாக வேடம் பூண்டு கதிரவனை சந்தித்தாள். ஆனால் சூரியன், அம்மனை அடையாளம் கண்டுக் கொள்ளாமல் அவமானப் படுத்தினான். இதனால் கோவம் கொண்ட அம்மன், சூரியனிடமிருந்து அகன்றாள். உடனே சூரியனின் ஒளி மங்கியது. தன்னுடைய தவறை உணர்ந்த சூரியன், அம்மனிடம் மன்னிப்பு கேட்டான். அம்மனும் சூரியனை மன்னித்து அருளினாள். பிறகு சூரியன், தன்னுடைய நாளான ஞாயிற்று கிழமையை அம்மனின் நாளாக கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அம்மனும் ஏற்றுக் கொண்டாள். அத்துடன் பங்குனி, புரட்டாசி மாதங்களில் கதிரவன் தன் கதிரால் அம்மனை அபிஷேகம் செய்யவும் வரம் கேட்டுப் பெற்றான்.

ஆகவே தான் பலர் ஞாயிற்று கிழமை கோவிலில் இரவு தங்குவதாக வேண்டிக் கொள்வார்கள். அந்த ஸ்தலத்தில் தங்கினால் அவ்வளவு புண்ணியம். இந்த சந்தர்ப்பம் எனக்கு அம்மனே தந்தருளினாள். ஒரு நாள் முதல் முறையாக அந்தக் கோவிலுக்குச் சென்றேன். 108 முறை ப்ராகாரத்தை சுற்றுவதாக நான் முன்னதாகவே வேண்டிக் கொண்டிருந்தேன். அதை நிறைவேற்றுவதற்காக கோவிலுக்கு சென்றேன். ஆனால் நான் சென்ற நேரம் மாலைப் பொழுதானதால் கூட்டம் இருந்தது. அது மட்டும் இல்லாமல் அன்று தங்கரத பவனி நடந்துக் கொண்டிருந்தது. அம்மனை தரிசித்து முடித்தப் பிறகு மணி சுமார் ஏழு இருக்கும். ப்ரகாரத்தை சுற்ற ஆரம்பித்தேன். நேரம் சென்று கொண்டே போனது, ஆனது ஆகட்டும் முடித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். கோவில் குருக்கள் கோவிலை சாத்துவதற்க்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக பத்து மணி அளவில் சுற்றி முடித்தேன். பிறகு தான் கடைசி பேருந்து சென்றுவிட்டது என்ற விஷயம் தெரிந்தது. அந்த இடத்திற்கு நான் இதற்கு முன் சென்றது கூட இல்லை. பயம் தொற்றிக் கொண்டது. அதன் பின் கோவில் வாசலில் ஒரு பெண், எனக்கு சமாதானம் சொல்லி, அவர்கள் எல்லோரும் இரவு தங்குவதற்காக வந்துள்ளதாகவும் சொன்னாள். பிறகு என் வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, கவலைப் படாமல் இருக்கும் படி சமாதானம் செய்தேன். அங்கேயே ஒரு கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டு கோவில் வாசலில் இரவு தங்கினேன். அங்கு இரவு முழுவதும் பஜனை நடந்தது. இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து பஜனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சுமார் காலை நாலு மணிவரை பஜனை நடந்தது. பிறகு மறுபடியும், காலை முதல் தரிசனமாக அம்பாளை தரிசித்து செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

அந்தக் கோவிலிற்கு சிரிது தூரத்தில் சிவன் கோவில் உள்ளது. அங்கு அகஸ்த்தியருக்கு கல்யானக் கோலத்தில் சிவனும், அம்பாளும் தரிசனம் தருகிறார்கள்.
ஏனென்றால், ஒரு தடவை சிவனுக்கும், அம்மனுக்கும் திருமணம் ஆகும் போது எல்லோரும் ஒரு இடம் வந்துவிடவே, உலகம் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது. இதனால் சிவன் அகஸ்த்தியரை மட்டும் வேறு இடத்தில் இருக்குமாறு செய்தார். இதனால் அகஸ்த்தியர் திருமணத்தை பார்க்க முடியாமல் போனதே என்று கவலைப் பட்டார். அதற்காக அவருடைய இடத்திற்கே வந்து திருமணக் கோலத்தில் சிவன் காட்சிக் கொடுத்தார். இந்தக் கோவிலில் வேதம் நிறைந்த மரம் ஒன்று இருக்கிறது, அதனால் தான் இந்த ஸ்தலத்திற்கு வேற்காடு என்ற பெயர் வந்தது. இந்தக் கோவிலுக்கு மிக அருகில் வேரொரு கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனைத் தான் வேரொரு இடத்தில் ப்ரதிட்ஷ்ட்டை செய்ததாக ஐதீகம். அந்த ப்ரதிட்ஷ்ட்டை செய்த அம்மன் கோவில் தான் இப்பொழுது எல்லோரும் செல்லும் கருமாரி அம்மன் ஆலயம். ஆகவே இந்த மூன்று கோவிலுக்கும் சேர்ந்து சென்றால் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும். உங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.

Thursday, March 8, 2007

மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்

எல்லோருக்கும் என் மங்கையர் தின வாழ்த்துக்களை மனதாரத் தெரிவித்துக் கொள்கிறேன். மாதராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று பாரதியார் கூரியிருக்கிறார். ஆம் ஒரு பெண்ணின் சௌந்தர்யத்தை நாம் மகாலஷ்மிக்கு ஒப்பிடுகிறோம், அவள் தைரியத்தை நாம் பராசக்திக்கு ஒப்பிடுகிறொம், அதே போல் படிப்பில் சிறந்து விளங்கினால், சரஸ்வதி குடிகொண்டிருக்கிறாள் என்று நாம் உவமானம் சொல்வோம். அதேபோல் இயற்கை அன்னை என்றும், பாரத மாதா என்றும் சொல்கிறோம். ஆகவே எந்த ஒரு எடுத்துக்காட்டையும் நாம் பெண்ணினத்தோடு தான் ஒப்பிடுகிறோம். அதுபோல் ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால், அது ஒரு குடும்பத்துக்கே அளித்த சமானம் என்பார்கள். எந்த வீட்டில் பெண் சந்தோஷமாக இருக்கிறாளோ, அந்த வீட்டில் மகாலஷ்மி குடி கொண்டிருப்பாள்.

ஒரு பெண்ணானவள் தன் கணவனுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும், அவனுடைய கஷ்ட காலத்தில் ஒரு நல்ல தோழியாகவும், மனம் கலங்கும் நேரத்தில் நல்ல தாய்மையுணர்வோடும், சந்தோஷமான நேரத்தில் சக தர்மினியாகவும் இருக்க வேண்டும். அதனால் தான் பரமசிவனும், ஈஸ்வரிக்கு தன்னுடைய பாதி உடலை தந்திருக்கிறார். சிவனில்லையேல் சக்தியில்லை, சக்தியில்லையேல் சிவனுமில்லை. அதேபோல் மாகாவிஷ்னுவும், லஷ்மிக்கு தன் இதய கமலத்தில் இடம் தந்திருக்கிறார். ஆகவே, நானும் ஒரு பெண் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

Tuesday, March 6, 2007

கார்ட்டூன் சானல்

நான் இன்று உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போவது அமரிக்காவில் வரும் " கார்ட்டூன் சானல்" பற்றி தான். ஆம், இங்கு குழந்தைகளுக்காக வரும் சானலில் "ஸ்பானிஷ்" மொழி சொல்லிக் கொடுக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் எநதெந்த பொருள் எதற்கு உபயோகப்படும் என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவர்களுடைய சங்கீதத்தையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். பிறகு, மற்ற விலங்குகளைக் காப்பாற்றுவது பற்றியும், எப்படி அன்பாக பழக வேண்டும் என்பது பற்றியும் சொல்லித்தருகிறார்கள். அத்தோடு நாம் அருந்தும் பழங்களின் சத்துக்கள் பற்றியும், அதனால் விளையும் பயன்கள் பற்றியும் கூறுகிறார்கள். பிறகு எப்படி மற்றவர்களிடம் அன்பாக உரையாடுவது என்பது பற்றியும், பின் எப்படி சேர்ந்து வேலை செய்தால் சுலபமாக செய்ய முடியும் என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆகவே சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் செய்கிறார்கள்.

ஆனால் குறைகள் என்று சொன்னால் இந்த வயதிலேயே "ராக்" இசையை அறிமுகம் செய்கிறார்கள், அது போலவே காதலர் தினம் பற்றியும், எப்படி அன்று பழக வேண்டும் என்றும், என்னன்ன பரிசு கொடுத்தால், அதற்கு என்னன்ன கிடைக்கும் என்பது பற்றியும் சொல்லிக் கொடுக்கிறார்கள். பிறகு முன்பு ஒளிபரப்பிய நிகழ்ச்சியையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகிறார்கள், இதனால் குழந்தைகளுக்கு சலிப்பு உண்டாகும்.

இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

குறிப்பு: ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சேர்த்து எழுதியுள்ளேன், அதற்க்காக மன்னிக்கவும்.

Monday, March 5, 2007

புடலங்காய் கறி

தேவையான சாமான்கள்:

புடலங்காய் கால் கிலோ
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
உப்பு இரண்டு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய்

செய்முறை:

புடலங்காயை தண்ணீர் விட்டு அலம்பிய பிறகு சிறுசிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு அடுப்பை மூட்டி வாணலியை வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், எண்ணெய் விட்டு தாளிக்கவும். நன்றாக சிவந்து வெடித்தப்பின் கரிவேப்பிலையும் போட்டு கிளரி விட்டு, புடலங்காய் துண்டுகளை அதில் சேர்த்து கிளரி விடவும் (தண்ணீர் நன்றாக வடிந்தப்பின் தான் அடுப்பில் போட வேண்டும்). பிறகு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளரி விட்டு அடுப்பை ஸிம்மில் வைத்து 6,7 நிமிடங்கள் காயை மூடி வைக்க வேண்டும். இடையே இருமுறை மூடியைத் திறந்து கிளரி விட வேண்டும். நன்றாக வெந்தப்பின் தேங்காய் துருவலையும் போட்டு சேர்த்து வதக்க வேண்டும். காய் நன்றாக வதங்கியப் பின் சிறிது தேங்காய் எண்ணெய்யை காய் மேலே பரவலாக விட்டு கிளரி இறக்கவும்.

பாத்திரம் அறிந்து பிச்சை போடு

எல்லோருக்கும் வணக்கம்,

பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழி, நம் நாட்டில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு, கண்டிப்பாகப் பொருந்தும். ஏனென்றால், அவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு குறைவாக பிச்சைப் போட்டால் அதை திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு காசின் அருமை தெரியவில்லை. இதற்கு பதில் கோவில் உண்டியலில் பைசா போட்டாலாவது புண்ணியமாவது கிடைக்கும். ஒரு நாலு நாளைக்கு, அப்படி செய்தால் தான் அவர்களூக்கு பணத்தின் அருமை தெரியும். பிறகு அவர்கள் வரும் லஷ்மியை கைவிட மாட்டார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

நன்றி

அன்புத்தோழி

Friday, March 2, 2007

பாகற்காய் கறி

தேவையான சாமான்கள்:

பாகற்காய் கால் கிலொ
புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு ஒரு டேபில் ஸ்பூன்
கொஞ்சம் மஞ்சள் பொடி
மேலே தூவ: பருப்புகள் வறுத்து திரித்தப் பொடி 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
தாளிக்க சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய்

செய்முறை:

பாகற்காயை துண்டம் துண்டமாவோ அல்லது வட்ட வட்டமாகவோ நறுக்கிக் கொள்ள வேண்டும். பாகற்காயை தண்ணீரில் போடக் கூடாது. அதனால் நறுக்குவதற்கு முன்பாகவே அலம்பிக் கொள்ள வேண்டும். அடுப்பை மூட்டி வாய் அகன்ற பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். அதில் உப்பு, மஞ்சள் தூளைச் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து வரும் போது நறுக்கிய பாகற்காயைப் போட வேண்டும். நன்றாக வெந்து வரும் போது அடுப்பை ஸ்ம்மில் வைத்து தட்டு போட்டு மூடி விட வேண்டும். இடை இருமுறை கிளரி விட வேண்டும். இளம் காயானால் ஐந்து நிமிடத்தில் வெந்து விடும், முற்றல் காயானால் பத்து நிமிடம் எடுத்துக் கொள்ளும். காய் நன்றாக வெந்தப்பின் வடிதட்டில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும் (மிகவும் குழைந்து விடக் கூடாது). அதன் பின் அடுப்பில் வாணலியை வைத்து தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்தவுடன் கரிவேப்பிலைச் சேர்க்கவும். அதில் வெந்த காயைப் போட்டு நன்றாக கிளரவும்.
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு வருத்து பொடித்து வைத்தக் கலவையை இரண்டு ஸ்பூன், கொஞ்சம் மிளகாய் பொடி அல்லது சாம்பார் பொடி சேர்த்துப் போட்டு மேலாக கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி தேங்காய் பூ துருவியது கொஞ்சம் போட்டு இரண்டு கிண்டு கிண்டி இறக்கவும்.

Thursday, March 1, 2007

பிரபுவின் பையனின் கல்யானம்

வணக்கம்

இப்பொழுதெல்லாம் நம் நாட்டு பத்திரிக்கைகளுக்கு முக்கியமான விஷயமென்றால் அது திரைப்படமும், நடிகர்களும் தான். இல்லையென்றால் குமுதம் வெப்சைட்டில், பரபுவின் பையனுடைய கல்யாண வீடியோவை, போட்டிருக்க மாட்டார்கள். ஏன் தான் நடிகர்கள் என்றால் தனி மறியாதையோ தெரியவில்லை. ஒவ்வொருத்தர், அவர்களின் துறையில் சிறந்து விளங்குகிறார்கள், அவர்களுக்கெல்லாம் நாம் ரசிகர் மன்றம் வைக்கிறோமா என்ன? ஏன் நாமெல்லாம் நமது பணியில் சிறந்து விளஙவில்லையா?, நமக்கெல்லாம் ஏன் ரசிகர் மன்றம் இல்லை?. முதலில் எதற்காக ரசிகர் மன்றம் வேண்டும், அவரவர்கள், அவர்களுடைய வேலையை செய்கிறார்கள், அவ்வளவு தான். இதே அஜித்துக்கும், விஜைக்கும், சூரியாவிற்கும், சிம்ரனுக்கும், ஜோதிக்காவிற்கும் ஏதாவது என்றால் உடனே அது பத்திரிக்கைக்கு வந்து விடும், ரசிகர்கள் படங்களை ஒட்டி கும்மாளம் அடிப்பார்கள், எப்பொழுது தான் இந்த நிலை மாறுமோ தெரியவில்லை.

அன்புத்தோழி

பாரிஜாதம்

வணக்கம்,

நான் ஒரு மாதத்திற்கு முன்பு, பாரிஜாதாம் படம் பார்த்தேன். நன்றாக உள்ளது. படத்தின் கதை என்னவென்றால், நமது கதாநாயகியைச் சந்தித்து, அவளின் குணாதிசயங்களைப் பார்த்து, அவளை தன் மருமகளாக்கிக் கொள்ள எண்ணுகிறாள் ஒரு பணகார குடும்பத்தலைவி. ஆனால் அப்பொழுது அந்த குடும்பத்தலைவியின், குடும்பம் வேறு ஊரில் இருந்தது. தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, விஷயங்களை தன் குடும்பத்திற்கு தெரிவிக்கிறாள், ஆனால் பெயரை மட்டும் அவள் குறிப்பிடவில்லை. இதற்க்குள் அவள் ஏணியிலிருந்து விழுந்து இறந்து விடுகிறாள். பிறகு அவளுடைய கணவனும், பையனும், அந்தப் பெண் யார் என்று நம் பாக்கியராஜ் மூலம் கண்டுபிடுக்கின்றனர். பிறகு என்ன டும் டும் டும் தான். கதையை நன்றாக எடுத்துருக்கிறார் நமது பாக்கியராஜ்.

வந்தனம்

அன்புத்தோழி

Wednesday, February 28, 2007

திருக்கடையூர்


நான் இன்று திருக்கடையூர் ஸ்தலத்தைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். இந்தக் கோவில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. சிவனின் பெயர் அமிர்த கடேஸ்வரர், அம்பாளின் பெயர் அபிராமி. இந்தக் கோவிலானது, மூன்று விதமான சிறப்புகளைப் பெறப் பெற்றுள்ளன.

1. அந்தக் கோவிலில் உள்ள பிள்ளையார்.
2. எமனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய சிவலிங்கம்.
3. அபிராமி பட்டரைக் காப்பாற்றிய அம்பாள்.

முதலில் வினாயகரைப் பற்றி சொல்லுகிறேன். முன்னொரு காலத்தில், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பார்க்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தார்கள். ஆனால் அதற்காக, அவர்கள் முழு முதற் கடவுளான வினாயகரை ப்ராத்திக்க மறந்து விட்டார்கள். அதனால், வினாயகர் அந்த அமிர்தத்தை எடுத்து கொண்டு வந்து திருக்கடையூரில் ஒளித்து வைத்து விட்டார், பிறகு உண்மை அறிந்து, வினாயகரிடம் மன்னிப்பு கேட்டு, தேவர்கள் அந்த அமிர்தத்தை அருந்தினார்கள்.


2. எமனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய சிவலிங்கம்:

முன்னொரு காலத்தில், ம்ரிகண்ட முனிவர் என்பவர், தனக்கு புத்திர பாக்கியம் பெற சிவனை எண்ணி தவம் இருந்தார். அவருக்கு காட்சி அளித்த பரமேஸ்வரன், அரிவிற்சிறந்தவனாகப் பிறந்து பதினாரு வயது வறை வாழும் புத்திரன் வேண்டுமா, இல்லையானால் முட்டாளாகப் பிறந்து நீண்ட காலம் வாழும் புத்திரன் வேண்டுமா என்று முனிவரிடம் கேட்டார். அதற்கு முனிவர், தனக்கு சில காலமே வாழும் புத்திரன் இருந்தாலும் போதும், ஆனால் அவன் அறிவோடு இருக்க வேண்டும் என்று வரம் பெற்றார். பிறகு அந்த முனிவருக்கு குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டன் என்று பெயர் சூட்டினார். அவனிடம் நடந்தவற்றைக் கூறி சிவனை எண்ணி தவம் செய்யும் படியும் கூறினார். ஆகையால் மார்க்கண்டேயனும், சிவனை எண்ணி பெரும் தவம் புரிந்தார். அவனுக்கு பதினாறாவது காலம் எட்டியது, அந்த நேரத்தில் எமதர்மன், அவனுடைய உயிரைக் கொண்டுப் போவதற்காக அவனை நெருங்கினார். ஆனால் சிவன் அங்கு தோன்றி, மார்க்கண்டேயன் தன்னை சரண் அடைந்தால், அவனுடைய உயிரைக் கொண்டுச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் எமன், சிவனை மதிக்காமல் தன்னுடைய பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீசினார். அப்பொழுது அவன், சிவனை கட்டிக் கொண்டு இருந்ததால், அந்தப் பாசக்கயிறு சிவனையும் சேர்த்து சுத்தியது. இதனால் கோபம் அடைந்த சிவன், எமனை தன் காலால் மிதித்து, அவனுடைய சக்தியை கைப்பற்றினார். இதனால், தான் செய்த தவறை எண்ணி, எமன் சிவனிடம் மன்னிப்புக் கேட்டு விடைப் பெற்றுக் கொண்டார். பிறகு மார்க்கண்டனுக்கும் என்றும் பதினாறு வயதாக வாழ்வாயாக என்று சிவன் வரம் அளித்தார்.

இதனால் தான் யாருக்காவது, எதாவது நோய் இருந்தால், இங்கு வந்து பரிகாரம் செய்வதாக வேண்டிக் கொள்வார்கள், அல்லது அறுபதாம் திருமணம் செய்துக் கொள்வார்கள். குழந்தைக்கு நோய் வந்தால், இங்கு வந்து காது குத்துவார்கள், அல்லது பூனல் கல்யானம் செய்வார்கள். குறிப்பாக நோய் நீங்குவதற்கு, இந்த ஸ்தலம் புகழ் பெற்றதாகும்.


3. அபிராமி பட்டரைக் காப்பாற்றிய அம்பாள்.

அபிராமி பட்டர் என்பவர், அம்பளின் பூரண பக்தர். தன் வாயால் மனிதர்களைப் புகழ்ப் பாட்டு பாட மாட்டார். இதை அறிந்த அந்த நாட்டு மன்னன், இவரை தன் அரண்மனைக்கு வரச் செய்தார். அபிராமி பட்டரைப் பார்த்து இன்று அமாவாசையா, அல்லது பௌர்னமியா என்று அந்த மன்னன் கேட்டார். என்நேரமும் அம்பாளையே எண்ணிக் கொண்டிருந்ததால், பௌர்னமி என்று வாய் தவறி கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அபிராமி பட்டரை சிறையில் இட்டார். இதனால் மன வேதனை அடைந்த பட்டர், அம்பாளை எண்ணி நூறு பாடல்களை அந்தாதியாகப் பாடினார், ஆகையால் அபிராமியும் மனம் குளிர்ந்து, தன் காதிலிருந்த காதணியை எடுத்து எரிந்தார், அது முழு பௌனமி நிலவாக மாறியது. இதனால் தன் தவறை உணர்ந்து, அபிராமி பட்டரிடம் மன்னன் மன்னிப்புக் கேட்டான்.

குறிப்பு: அந்தாதி என்பது, ஒரு பாடலின் கடைசி வார்த்தையிலிருந்து, அடுத்த பாடலின் முதல் வரியாக அமைவது.

நன்றி

அன்புத்தோழி

Tuesday, February 27, 2007

எண்ணெய் கத்தரிக்காய்

தேவையான சாமான்கள்:

பிஞ்சு கத்தரிக்காய் 1/4 கிலொகிராம்
(கத்தரிக்காய் குட்டி குட்டியாக இருக்க வேண்டும்)
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு
எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்
பொடித்துத்தூவ: 4 மிளகாய் வற்றல்
கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
துவரம் பருப்பு ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிறு துண்டு
சிறிது உப்பு

செய்முறை:

கத்தரிக்காயை காம்பு கொஞ்சம் இருக்குமாறு வெட்ட வேண்டும். கத்தரிக்காயையும் நான்காக வகுர வேண்டும் தனித்துண்டமாக்கக் கூடாது. நறுக்கிய காயை தண்ணீரில் போட்டு வைக்கவும். அடுப்பை மூட்டி வாணலியை அடுப்பில் வைத்து நான்கு டேபில் ஸ்பூன் எண்ணெய்யை விட வேண்டும். அது காய்ந்து வரும் போது நறுக்கிய காயைப் போட வேண்டும். பின் மஞ்சள் தூளை சிறிது போட வேண்டும். நன்றாக கிளரி விட்டு ஸிம்மில் வைத்து மூட வேண்டும். திரும்ப திரும்ப கிளர வேண்டும். எண்னெய் காணாமல் மண்டு விடக்கூடாது. ஐந்து நிமிடம் கழித்து அதில் புளியை நன்றாக கட்டியாக கரைத்து தெளிந்தார்ப்போல் விட வேண்டும். உப்பையும் சேர்த்து நன்றாக கிளரி விட சேர்ந்து வெந்து விடும். பிறகு மேலே தூவுவதற்கு மிளகாய் வற்றல் மற்றும் பருப்பு வகைகளை தனியாக வாணலியில் எண்ணெய் கொஞ்சம் விட்டு நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். பருப்புகள் கருகி விடக்கூடாது. வறுத்த பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றை மிக்ஸியில் பொடி செய்து, பின் வதங்கி வரும் கத்தரிக்காயில் போட்டு நன்றாக சேர்த்து கிளரி இரண்டு நிமிடம் அடுப்பில் இருக்கச்செய்து இறக்க வேண்டும். காய், எண்ணெய், பொடித்துப்போட்ட தூள் எல்லாம் சேர்ந்து வதங்கி இருக்க வேண்டும். கொழகொழவென்று இருக்கக்கூடாது.

Monday, February 26, 2007

திருமணஞ்சேரி


tirumanaanchericom

படங்களுக்கு நன்றி

எல்லோருக்கும் வணக்கம்,

நான் இன்று திருமணஞ்சேரியில் உள்ள சிவஸ்தலத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்தக் கோவில் குற்றாலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. அங்குள்ள சிவனின் பெயர் கல்யான சுந்தரேஸ்வரர், பார்வதியின் பெயர் கோகிலாம்பாள். இந்த கோவிலின் விஸேஷம் என்னவென்றால், அங்கு சென்று சிவன் பார்வதி ஸந்நிதியின் முன்பு வேண்டி மாலைப் போட்டுக் கொண்டு வந்தால் கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைக் கூடும். அந்த மாலையை வீட்டில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிவனையும், அம்பாளையும் நினைத்து தினமும் வீட்டில் ஸ்லோகம் சொல்லி வர வேண்டும். அப்படிச் செய்தால் திருமணம் கண்டிப்பாகக் கைக்கூடும். ஆனால் திருமணமான பிறகு, கணவனையும் அழைத்துக் கொண்டு, தாம் கோவிலிருந்து கொண்டு வந்த பழைய மாலையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று, சிவன் பார்வதியின் சந்நிதியின் முன்பு மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் கைமேல் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும். இது என் வாழ்க்கையில், நான் கண்கூடாகக் கண்ட உண்மை.

நன்றி

அன்புத்தோழி

கத்தரிக்காய் கறி

தேவையான சாமான்கள்:

கத்தரிக்காய் கால் கிலொ
புளி : ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் இரண்டு டேபில்ஸ்பூன்

செய்முறை:

அடுப்பை மூட்டி அதில் வாய் அகன்ற பாத்திரத்தை வைக்க வேண்டும். அதில் புளி கரைத்த ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட வேண்டும். அதில் உப்பை போட்டு நறுக்கிய கத்தரிக்கயைப் போட வேண்டும். காய் நறுக்கும் போது நீளவாக்கில் நறுக்க வேண்டும். காய் மூன்று நிமிடத்தில் வெந்து விடும். கத்தரிக்காய் வேகும் போது அடுப்பு நன்றாக எரிய வேண்டும். அதுபோல் காயை நறுக்கி தண்ணீர் விடாமல் வைத்திருந்தால் காய் கருத்து விடும். அதேபோல் மிகுந்த நேரமும் ஊற வைக்கக்கூடாது. காய் வெந்தப்பின் தண்ணீரை வடித்து விட வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கரிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்த காயைப்போட்டு நன்றாக கிளரி, காய் துவண்டப்பின் தேங்காய் துருவலைச் சேர்த்து இரண்டு நிமிடம் ஸிம்மில் போட்டு நன்றாக கிளரி இறக்கவும். காரம் வேண்டுமானால் சிறிது தனி மிளகாய் பொடி அல்லது சாம்பார் பொடி சேர்த்துக் கொள்ளலாம். கத்தரிக்காய் கறி தயாராகிவிட்டது.

Friday, February 23, 2007

குழந்தை உரைமருந்து

வணக்கம்,

நான் இன்று குழந்தைக்குத் தரும் உரைமருந்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். உரைமருந்து என்பது இயற்கை மருந்தை ஒரு கல்லில் அல்லது சந்தனக்கட்டை உறைக்கும் கல்லில் உறைத்துக் கொடுக்க வேண்டும். அதாவது சுக்கு, மிளகு, வசம்பு (பிள்ளை வளப்பான்), ஜாதிக்காய், மாசிக்காய் இவற்றை உரைத்து தாய்ப்பாலுடன் சேர்த்து குழந்தைளுக்கு பிறந்த பத்து நாளைக்குப் பின் கொடுக்க வேண்டும். முதலில் ஐந்து முறை உரைத்துக் கொடுக்க வேண்டும், ஆனால் ஜாதிக்காயையும், மாசிக்காயையும் எப்பொழுதுமே குறைத்துக் கொடுக்க வேண்டும். இதை ஆறு மாதம் வறை ஒரு நாள் விட்டு, ஒரு நாள் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் குழந்தைக்கு ஜீரண சக்தி அதிகரிக்கும், இதனால் அதிகமாக கக்காமல் இருப்பார்கள். அதிலும் வசம்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஆறு மாதத்திற்க்கு பிறகு அளவை கொஞ்சம் அதிகரித்து அதாவது பத்து முறை வறை உரைத்துக் கொடுக்கலாம், ஆனால் வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால் போதும். அதே போல் உஷ்ணமான ப்ரதேசத்தில் வாழ்பவர்கள் கொஞ்சம் சந்தன கட்டையும் லேசாக உரைத்துக் கொடுத்தால் குழந்தையின் உடம்பு சிறிது குளிர்ச்சியாக இருக்கும், ஆனால் குழந்தைக்கு ஐந்து மாதமாவது ஆகியிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்று வலித்தால் வசம்பை அடுப்பில் காய்த்து நன்றாகப் பொடித்து திப்பி இல்லாமல் தாய் பாலுடன் சேர்த்துக் கொடுக்கலாம். இல்லையானால் வெற்றிலையில் வெளக்கெண்ணையை தடவி அடுப்பில் வெதுவெதுப்பாக அதாவது குழந்தை உடம்பு தாங்கும் வறை வைத்துப் பின் குழந்தையின் வயிற்றில் வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் மலம் வெளியில் வெளியேறி, குழந்தைக்கு வயிற்று வலி குணமாகும். இதைப்போல் மலம் வெளி்யேறாமல் குழந்தை வயிறு கல் போல் இருந்தாலும் செய்யலாம்.

நன்றி

அன்புத்தோழி

பீன்ஸ் பொரியல்

தேவையான சாமான்கள்:

கால் கிலொ பீன்ஸ்
மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன்
உப்பு ஒன்றறை டீஸ்பூன்
தேங்காய் துருவல் இரண்டு டேபில்ஸ்பூன்
தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் ஒரு டேபில்ஸ்பூன்

செய்முறை:

பீன்ஸை நன்றாக கழுவிய பின் தண்ணீரை வடித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு ட்ம்ளர் தண்ணீர்விட்டு பிறகு கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க விட வேண்டும். அதில் நறுக்கியப் பீன்ஸை போட்டு பிறகு மேலே சொன்ன அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி மூடி விட வேண்டும். நன்றாக கொதித்து வரும் சமயம், அடுப்பை ஸிம்மில் வைத்து மூடி போட வேண்டும். பீன்ஸ் ரொம்பவும் குழைந்து விட கூடாது. பிறகு தண்ணீரை வடிகட்டிவிட வேண்டும். அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பை போட்டு தாளிக்க வேண்டும். பிறகு வடிகட்டிய காயைப்போட்டு நன்றாக கிளரி ஈரம் போய் காய் துவண்டு வரும் போது துருவிய தேங்காயையும் சிறிது கரிவேப்பிலையும் போட்டு கிளரி இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கவும். பீன்ஸ் பொரியல் தயாராகிவிட்டது.


அன்புத்தோழி

சுந்தர காண்டம்

எல்லோருக்கும் வணக்கம்,

நான் இன்று ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தின் பெருமையைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். ஏனென்றால் மற்ற ஆறு காண்டத்தை விட, இந்த காண்டம் மிகவும் முக்கியமானதும், சக்கியும் வாய்ந்தது. அனுமார், ராமருக்காக சீதா தேவியைக் காண இலங்கைக்குச் செல்கிறார். அங்கு சீதா தேவியின் கஷ்டங்களைப் பார்த்து, ஆறுதல் கூறி ராமர் கொடுத்து அனுப்பிய மோதிரத்தைக் கொடுக்கிறார். தாம் சீதா தேவியைப் பார்த்ததற்கு சாட்சியாக அவர்கள் தலையில் சூடியிருந்த சூடாமணியைப் பெறுகிறார். பிறகு விபீஷணின் நட்பு அவருக்குக் கிடைக்கிறது. பின் ராவணனை நேருக்கு நேராக சந்தித்து, ராமரின் தூதனாக எச்சரிக்கை செய்கிறார். இதனால் கோபம் அடைந்த ராவணன், அனுமரின் வாலில் தீயை வைக்கிறார். பின் அனுமார், இலங்கை முழுவதும் (சீதா தேவியின் இடத்தைத் தவிற) தீயை வைத்து தன் கைவரிசையைக் காண்பிக்கிறார். அதற்குப் பின் சீதா தேவியிடம் விடைப் பெற்றுக் கொண்டு, ராமரைச் சந்தித்து நிகழ்ந்தவற்றைக் கூறி அவரைத் தேற்றுகிறார். இதனால் ராமர் மகிழ்ச்சி அடைந்து, அனுமரைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். பிறகு விபீஷனன் அதற்மத்தை எதிர்த்து நிற்க, ராமரிடம் வந்து சேருகிறார். இது தான் சுந்தர காண்டத்தில் வரும் பகுதி.

இதை முழு நம்பிக்கையுடன் வீட்டில் தினமும் பகுதிகளாகப் படித்து, கற்கண்டு கலந்த காய்ச்சியப் பாலை நைய்வேத்தியம் செய்து, தான் மட்டுமே அருந்த வேண்டும். இப்படி செய்தால் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும். இதை முழுவதும் படித்து முடித்தப் பின் சர்க்கரைப் பொங்கல் நைய்வேத்தியம் செய்து, மற்றவர்களுக்கும் வினியோகம் செய்யலாம். உங்கள் எண்ணம் நிறைவேற நானும் ப்ராத்தித்துக் கொள்கிறேன்.

நன்றி

அன்புத்தோழி

baby food posion

babyfoodpoisoncheckthisout

hello everybody,

Today i got the shocking news that in the organic baby foods, they are including Clostridium botulinum, which can cause botulism. Botulism is a potentially fatal form of food poisoning and causes illness within 18-36 hours of exposure, with early symptoms of a decreased frequency or absence of stools, poor feeding, lethargy, weak cry and difficulty with swallowing with drooling from the mouth.

Now a days, we are not able to believe even the organic foods, that too for babies. So every parent should be very careful, while buying any artificial foods. whenever ur buying those items check the contents in the bottle, or u can consult with other parents, who are already having practice to those baby foods.

thanks

anbuthozhi