Wednesday, July 18, 2007

வைத்தீஸ்வரன் கோவில்

நாம் இந்த வாரத்தின் கோவிலாக திரு வைத்தீஸ்வரன் ஆலயத்தை பற்றி பார்ப்போம். இந்த ஆலயம் கும்பகோணத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் அமைப்புத் தோற்றம் நான்கு ராஜ கோபுரத்துடனும், நடுவில் ஆங்காங்கே பல தீர்த்தங்களுடனும் பார்க்கவே அழகாக இருக்கும். இத்திருதலத்தின் மகிமையை திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், அருணகிரிநாதரும் போற்றி பாடியிருக்கிறார்கள். இத்தலத்திற்கு புள்ளிருக்குவேளூர் என்ற திருப்பெயரும் உண்டு. ஏனெனனில் புள் என்றால் ஜடாயு, இருக்கு என்றால் ரிக்வேதம், வேள் என்றால் முருகன், ஊர் என்றால் சூரியன். இந்நால்வரும் வழிபட்ட இடமாதலால் இப்பெயர் பெற்றது.

மூர்த்திகள்; இங்கிருக்கும் சிவனின் பெயர் வைத்திய நாதர், அம்பாளின் பெயர் தையல் நாயகி. பல தீர்க்க முடியாத நாலாயிரத்து நானூற்றி நாப்பத்தெட்டு நோய்களையும் தீர்த்து வைக்க சிவனும், அவருக்கு உதவியாக அம்பாளும் தன் கையில் தைல பாத்திரமும், வில்வ மரத்தடி மண்ணும், சஞ்சீவியும் ஏந்தி,

கயிலையிலிருந்து கிளம்பி இத்திருத்தலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். மற்றபடி இங்கு முருகன் செல்லக்குழந்தையாக செல்வமுத்துக்குமரனாக அமர்ந்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் தான் முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கினார் என்ற பெருமையும் சாரும்.
இன்னும் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்தலம் விளங்குவதால் செவ்வாய் தோஷம், மற்றும் குடும்ப ஒற்றுமைக்காவும், வியாதிகளுக்காவும் அங்காரகனை வணங்கினால் தீரும் என்பது உறுதி. மற்றும் இத்தலத்தில்


நவகிரகங்கள் வக்கிரமில்லாமல், சிவனின் சந்நிதிக்கு பின்புரத்தில் வரிசையாக நின்று நோய்கள் தீர வேண்டி பிராத்திக்கும் காட்சியும்
தனி சிறப்புகளுள் ஒன்று.


தீர்த்தங்கள்; இக்கோவிலில் பல தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இத்தீர்த்தத்தில் சித்தர்கள் இறைவனுக்கு அபிஷேகித்த தேவாமிர்த்தத்தை கலந்ததால் இப்பெயர் பெற்றது. அது மட்டும் அல்லாமல் அங்கரகனின் செங்குஷ்டத்தை தீர்த்த தீர்த்தமாக விளங்குவதால் இப்பெயர் பெற்றது எனவும் கூறலாம். இன்னும் காமதேனு, கிருதாயுகத்தில், தன் முலைப்பாலால் இறைவனுக்கு செய்த அபிஷேகம் தான் இன்று தீர்த்தமாக உருவாகியிருக்கிறது என்றும் வரலாறு கூறுகிறது. இதனால் தான் இத்தீர்த்தத்திற்கு கோக்ஷர தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது. இதைத்தவிர இத்திருதலத்தில் கோதண்ட தீர்த்தம், அங்க சந்தான தீர்த்தம் என்ற மற்ற தீர்த்தங்களும் உள்ளன. இங்கு முன்னொரு காலத்தில் சதானந்த
முனிவர் தவம் செய்துக்கொண்டிருந்த போது, பாம்பிடமிருந்து தப்பிக்க தவளை தண்ணீருக்குள் குதித்தபோது அந்த தண்ணீர் அவர் மீது தெளித்து தவத்தைக் கலைத்தது. இதனால் இங்குள்ள தீர்த்தத்தில் தவளையும், பாம்பும் வாசம் செய்யக் கூடாதென்று முனிவர் சிபித்ததால், இத்தீர்த்தங்களில் இப்பொழுதும் தவளைகளும், பாம்பும் வசிப்பதில்லை. இன்னும் இந்திரப்பதி, கௌதம, சர்வமுக்தி போன்ற பல தீர்த்தங்களும் உள்ளன.


ஜடாயு குண்டம்; இராவணன் சீதையை கவர்ந்து இழுத்துச் செல்லும் போது, ஜடாயு சீதையை காப்பாற்ற முயச்சித்தார். அப்பொழுது ஜடாயுவின் இரு சிறகுகளையும், இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின் ராமர் வந்ததும் நடந்ததைக் கூறிய ஜடாயு, தன்னை வைத்தீஸ்வரன் கோவிலில் தகணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டு, அவர் காலடியில் உயிர் துரந்தார். ராமரும்
ஜடாயுவின் வேண்டுகோளின் படி அவரை இக்கோவிலில் தகணம் செய்தார். இந்த இடத்திற்கு பெயர் ஜடாயு குண்டம். இந்த குண்டத்தில் இருக்கும் திரு நீற்றினை வேண்டி இட்டுக் கொண்டால் நோய்கள் திரும்.


திருசாந்துருண்டை; இந்த மருந்து வைத்தீஸ்வர்ர் கோவில் பிராசாதமாக வழங்கப் படுகின்றது. இந்த மருந்தைத்தான் அங்காரகனின் குஷ்ட நோயை தீர்க்க இறைவன் அருளினார் என்று புராணம் கூறுகின்றது. இந்த மருந்ததை செய்யும் முறை என்னவென்றால் ஜடாயு குண்டத்திலிருந்து விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தையும் குழைத்து வேண்டி முத்துக்குமார ஸ்வாமி
சந்நிதியிலுள்ள அம்மியில் வைத்து அரைத்து, அதை உருட்டி அம்மன் திருவடியில் வைத்து பிரார்த்தனை செய்து சிவனின் திருவடிகளில் வைத்து பின் வேண்டியவர்களுக்கு வினியோகம் செய்யப் படுகிறது. இதனை உண்டால் தீராத வியாதிகளும் தீரும் என்பது உறுதி.


இத்தலத்தில் விசேஷங்கள் என்று கூறினால், முருகனுக்கு ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் சந்தனத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் பிரசித்திப் பெற்றது. பின் தினமும் சிவனுக்கும், அம்பாளுக்கும் ஆறு கால பூஜைகள் நடைப்பெரும், பின் பங்குனி பிரம்மோற்ச்சவமும் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலில் முருகன் செல்லக் குழந்தையானதால் அவரை தூங்க வைத்த பின்புதான் சிவனுக்கு அர்த்த ஜாம பூஜை நடைப்பெரும். பின் அங்காரகனுக்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், அபிஷேகம் செய்து ஆலயம் முழுவதும் வலம் வரும் சம்பவம் ஏற்படும்.

Thursday, July 12, 2007

உப்புச்சார்

இது ஒரு அபூர்வமான குழம்பு. இந்த சமையலை திருநெல்வேலி பக்கம் அதிகம் பார்க்கலாம். இதைப் பற்றி யாராவது கேள்விபட்டாலோ அல்லது சமைத்திருந்தாலோ எனக்கு பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

தயிர் -- 1 முதல் 1 1/2 டம்ளர்
உப்பு -- 1 1/2 டீஸ்பூன் (தேவைக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ளவும்)
சிகப்பு மிளகாய் -- 4 முதல் 5 வரை போடலாம்
உளுத்தம் பருப்பு -- 1 கைப்பிடி அல்லது 1 முதல் 1 1/2 டீஸ்ப்பூன்
தேங்காய் -- 1 மூடி
சீரகம் -- சிறிது
அப்பக்கொடி, அதளக்கய் வற்றல் ( தாளிக்க)
(இது இரண்டும் ஒரு வகையான மூலிகைகள். இவை திருநெல்வேலி பக்கம் காடுகளிலும், தோட்டகங்களிலும் விளைகிறது. இது இருதயத்திற்கும், நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்கும் நல்லது.)

தேங்காயை நன்றாக துருவிக்கொள்ளவும். பின்பு மிளகாய் வற்றலையும், உளுத்தம் பருப்பையும் சிறு எண்ணை சேர்த்து, சிகப்பாக நன்கு வறுத்துக் கொள்ளவும். அதன் பின், வறுத்து எடுத்ததை துருவிய தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். நன்கு அரைந்து முடந்த பின்னர், சீரகம் சிறிது அத்துடன் சேர்த்து, ஒரு ஓட்டு ஓட்டி விட்டு, அந்த விழுதை, நன்கு கரைத்த மோருடன் உப்பு சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து 3 அல்லது 4 நிமிடம் வரை பதைக்க வைக்க வேண்டும் அதாவது கொதி நிலைக்கு வரும் முன் இறக்கிவிடவும். பின் அப்பக்கொடி அல்லது அதளக்காய் வற்றலை நன்கு கருக்க எண்ணை விட்டு வருத்து எடுத்து, அதை செய்து வைத்த உப்புச்சாரில் விடவும்.

Wednesday, July 4, 2007

எட்டுக்கு எட்டு போட்டால், எட்டுவது இந்த எட்டுக்களே!! இதை கொஞ்சம் எட்டித்தான் பாருங்களேன்

நம்மையும் இந்த எட்டு தொடர் விளையாட்டுக்கு, ஒரு தகுதியை உரியவராக்கிய திரு KRS அவர்களுக்கும், திரு வி.எஸ்.கே அய்யாவிற்கும் என் நன்றிகள்.

ஒவ்வொருத்தர் எழுதியிருப்பதைப் பார்த்தால், நானெல்லாம் வாழ்க்கையில் என்ன செய்தேன் என்று யோசிக்க வைக்கிறது. ஆனால் இனிமேலாவது வாழ்க்கையில் ஏதாவது உருப்படியாகச் செய்து சாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

நான் வாழ்க்கையில் பெற்றதையும், மற்றதையும் பற்றி என் எட்டில் கூறியிருக்கிறேன். இவைகள் எல்லாம் கண்டிப்பாக சாதனைகள் இல்லை. என்னைப்பற்றிய உண்மைகள் மட்டுமே.

1.நான் வாழ்க்கையில் படித்தது Accounts, மேற்படிப்பு HR, ஆனால் அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத Finance பணியில் வேலைப் பார்த்தேன். இதிலேயே தெரிந்திருக்கும் நான் எவ்வளவு தெளிவாக இருக்கிறேன் என்று. நான் முதன் முதலில் கல்லூரியில் சேர்ந்தது BA Corp, ஆனால் பிறகு BCOM கிடைத்தது, அதனால் அந்த படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மற்றொன்றில் சேர்ந்தேன். பிறகு மேல் படிப்பு வரும் போது, MCA படிக்கலாமா என்று ஒரு குழப்பம். என் வீட்டிலும் எது சேர்ந்தாலும் சரி என்றார்கள். நானும் அதற்குண்டான வழிகளை ஆரம்பித்தேன், ஆனால் முடிவில் அங்கும் சேரவில்லை. சேர்ந்ததெல்லாம் HR, ஆனால் என் நேரம் முடிக்கும்போது campus interview வரவில்லை. அதனால் அத்துறையில், முன் அனுபவமில்லாத எனக்கு வேலைக்கிடைக்கவில்லை. தகுந்த வேலையை நான் இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வேரொரு வேலைக்கு சென்றுக் கொண்டேதான், என் மேல் படிப்பை முடித்தேன். என்னாலும் படித்துக் கொண்டே வேலைப் பார்க்க முடிந்தது என்ற ஒரே சந்தோஷம் தான்.

2.நான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தது, ஒரு marketing executive வாகத்தான். தினமும் நாள் கூலி தருவார்கள். இதற்கு காலையிலிருந்து, மாலை நேரம் வரையில் ஒவ்வொரு வீடாகவும், கம்பெனியாகவும் சென்று நாங்கள் விற்கும் தண்ணீரைப் பற்றி கூறிவிட்டு வருவேன். அதேபோல் telemarketing கூட செய்திருக்கிறேன். இது எனக்கு ஒரு வித்யாசமான அனுபவம் தான். அதனால் இன்றும் கூட யாராவது, எதாவது பொருள் விற்க வந்தால், அவர்களை துரத்திவிட மாட்டேன். marketing என்றதும் என் நினைவிற்கு வருவது இந்த வரிகள் தான், கழுத்திலே டை, கையிலே பை, வாயிலே பொய்.

3.கடவுள் என்றால் அபார நம்பிக்கை எனக்கு உண்டு. இதனால் ஒரு நாள் ஒரு வேண்டுதலுக்காக, திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு வந்து 108 முறை பிரகாரம் சுற்றுவதாக வேண்டிக் கொண்டு விட்டாச்சு. ஆனால் நான் முன்னபின்ன அந்த கோவிலுக்கு சென்றதில்லை, அதுவும் நான் சென்ற நேரம் மாலைப் பொழுது. அது மட்டும் இல்லாமல் அன்று தங்கரத பவனி நடந்துக் கொண்டிருந்தது. அம்மனை தரிசித்து முடித்தப் பிறகு மணி சுமார் ஏழு இருக்கும். பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தேன். நேரம் சென்று கொண்டே போனது, ஆனது ஆகட்டும் முடித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். கோவில் குருக்கள் கோவிலை சாத்துவதற்க்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக பத்து மணி அளவில் சுற்றி முடித்தேன். பிறகு தான் கடைசி பேருந்து சென்றுவிட்டது என்ற விஷயம் தெரிந்தது. உடனே பயம் தொற்றிக் கொண்டது. அதன் பின் கோவில் வாசலில் ஒரு பெண், எனக்கு சமாதானம் சொல்லி, அவர்கள் எல்லோரும் இரவு கோவில் முன்பு தங்குவதற்காக வந்துள்ளதாகவும் சொன்னாள். பிறகு என் வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, கவலைப் படாமல் இருக்கும் படி சமாதானம் செய்தேன். அங்கேயே ஒரு கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டு கோவில் வாசலில் இரவு தங்கினேன். அங்கு இரவு முழுவதும் பஜனை நடந்தது. இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து பஜனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சுமார் காலை நாலு மணிவரை பஜனை நடந்தது. பிறகு மறுபடியும், காலை முதல் தரிசனமாக அம்பாளை தரிசித்து செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்தால் செம டோஸ். இதுவும் ஒரு அனுபவம் தான்.

4. மாங்காட்டில் ஒரு நாள் துணைக்கு யாரும் இல்லாத போது, அம்பாளை வணங்கி அங்க பிதர்ஷணம் செய்ய ஆரம்பித்தேன். செய்து முடித்தவுடன் ஒரே தலைச்சுற்றல், வாந்தி. கூடவும் யாருமில்லை. அப்பொழுது உதவிக்கு ஒரு அம்மா வந்து என்னை ஒரு கடையிக்கு அழைத்துச் சென்று ஜூஸ் வாங்கி கொடுத்தாள். பிறகு தான் கொஞ்சம் தெளிந்தது. ஆகவே தனியாக வந்து இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டதிலிருந்தே சிறிது விவேகத்துடனும் செயல் பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் நம்பினார் கெடுவதில்லை என்ற சொல் போல், நான் வேண்டியது நடந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

5. வலியில்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட பாக்கியசாலி நான். பிரசவத்தின் போது, குறித்த நாளும் தாண்டிவிட்டது, ஆனால் வலி எடுக்கவில்லை. பிறகு மருத்துவரிடம் சென்றோம், அவர்களும் பார்த்துவிட்டு, எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, இன்னும் இரண்டு நாள் பொறுத்துப் பார்க்கலாம் என்று கூறினார். சரியென்று நாங்களும் வீடு வந்து விட்டோம், பின் மறுநாள் காலை எனக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு அவசரமாக ஓடினோம். ஆனால் வலி எடுக்கவேயில்லை. பிறகு மருத்துவரும் பார்த்துவிட்டு வலி வருவதற்கு ஊசி போட்டார்கள். ஆனால் எதற்கும் பாச்சா பலிக்கவில்லை. கடைசியில் ஆப்ரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க வேண்டும், இனிமேல் காத்திருந்தால் குழந்தைக்கு ஆபத்து என்று கூறிவிட்டார்கள். சரியென்றதும் ஆப்ரேஷம் செய்து ஒரு குட்டிப்பாப்பாவை வெளியே எடுத்தாங்க. கேட்டால் கொடி சுற்றியிருப்பதால் வலி எடுக்கவில்லை என்றார்கள். இப்ப குட்டிக்கு ஒரு வயசு ஆகுது.

6. கணவருக்கு வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது. இதனால் நானும், என் 5மாத குட்டிபாப்பாவும் கிளம்பி அமரிக்கா வந்தோம். வேறு குழந்தைகளை பார்த்து வளர்வதை கூட இருந்து பார்த்ததும் கிடையாது. குழந்தையை எனக்கு தெரிந்த வரையில் பெரியவர்களின் உதவி மூலம் தொலைபேசி மற்றும் இணைய ஆலோசனையுடன் நல்லபடியாக வளர்த்து வருகிறேன். இப்படி ஒரு குழந்தையை நம்மால் தனியாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்தது பற்றி எனக்கு மிகவும் சந்தோஷம்.

7. Software பற்றி எதுவுமே தெரியாத எனக்கு என் கணவர் உதவியுடன், இணைய அறிவு வளர வழி கிடைத்ததை தாண்டி இன்று கிடைக்கும் நேரத்தில் handycam மூலம் எடுத்த படத்தை edit செயவதிலுருந்து encoding பண்ணி DVD க்கு மாற்றுவதிலிருந்து அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். இதனால் இப்பொழுது நேரம் வாய்க்கும் போது, camera விலுள்ள நாங்கள் எடுத்த படத்தை DVDக்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

8. திருமணத்திற்கு முன் வீட்டில் அவ்வளவாக வேலை பார்க்காமல் ஏதோ ஒன்றிரண்டு வேலை மட்டுமே செய்துவிட்டு, கோவில், class என்று சென்றுவிடுவேன். இதனால் என் அம்மா தனியாகவே எல்லா வேலைகளையும் செய்வார்கள். ஆனால் திருமணமானப்பின் தான் என் அம்மாவின் நிலைமை புரிகிறது. வெளியே வேலைக்கும் சென்றுவிட்டு, வீட்டிலும் வேலை செய்து அப்பாடா என்று ஆகிவிடும். அலுவலகம் விட்டு வேலைக்கு வந்தால் யாராவது காப்பி போட்டு தர மாட்டார்களா என்றிருக்கும். எல்லா நிலைமையும் அவரவர்களுக்கென்று வரும் போது தான் தெரியும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதெல்லாம் நினைத்து பார்த்தால் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

விளையாட்டின் விதிகள்: (உங்களின் தலைவிதிகள்:-)
1. ஆடுபவர் தன்னைப் பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.) அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும் -
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் - இது எல்லாம் optional தான் - நிறைய பேரு இதை மதிக்கலை. ஸோ...கண்டுக்காதீங்க! :-)
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும். - முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)

எனக்கு முன்னாலே எல்லோரும் வந்துவிட்டதனால், யாரைக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.