Thursday, August 9, 2007

என்ன குழந்தை தூங்கலையா?

குழந்தையை தூங்க வைப்பது என்பது ஒரு கலை. அப்படி நாம் தேர்ந்தெடுக்கும் வழிகளில் தாலாட்டு பாட்டும் ஒன்று. நாம் எவ்வளவு தான் கூச்ச சுபாவமாக இருந்தாலும், குழந்தைக்கு என்று வரும் போது எல்லாம் எங்கோ பறந்து போய் விடுகிறது. கள்ளங்கபட மில்லா குழந்தை முகத்தை பார்க்கும் போது, யாருமே கண்டிப்பாக கொஞ்ச ஆரம்பித்து விடுவார்கள். அப்படி பட்ட அந்த குழந்தையை தூங்க வைக்க நாம், நமக்கு தெரிந்ததை தாலாட்டாக பாடிக்கொண்டே அதன் கன்னத்தை வருடி விட்டால், அது சுகமாக அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிடும். நான் எப்பொழுதுமே என் குழந்தையை தூங்க வைக்க பாடும் பாட்டு இது தான். குழந்தையை தூங்க வைத்துக் கொண்டே கடவுள் பெயர்களை கொண்ட இப்பாட்டை பாடிய புண்ணியமும் கிடைக்கும், குழந்தைகளுக்கும் கடவுளின் பெயர்கள் தெரிய வரும். இது எப்படி இருக்கு....


இந்த பாடலை சுசீலா அழகாக பாடியிருப்பார்கள். படம் சிப்பிக்குள் முத்து. பாட்டை கேட்க இங்கே சொடுக்கவும்.

தடங்கலுக்கு வருந்துகிறேன் (ஒரு வேளை mozilla வில் பாடவில்லையென்றால் Internet Explorer ரில் போட்டு கேளுங்கள்)

லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குரும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி (வரம் தந்த)

ஆரீராரோ ஆரீராரோ, ஆரீராரோ ஆரீராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
எதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
எதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே (வரம் தந்த)

ஆரீராரோ ஆரீராரோ, ஆரீராரோ ஆரீராரோ

ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் காணும் அந்த கம்ப நாதன் நானே
ஸ்ரீராமன் காணும் அந்த கம்ப நாதன் நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகையர் நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகையர் நானே (வரம் தந்த)

ஆரீராரீ ராரீராரோ, ஆரீராரீ ராரீராரோ

ஸ்ரீ சத்ய நாராயணர்

இந்த வாரம் எதை எழுதலாம் என்று யோசித்த பொழுது சட்டென்று ஸ்ரீ சத்ய நாராயண பூஜை ஞாபகம் வந்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று பௌர்னமி. இந்த பூஜையை நாம் ஒவ்வொரு பௌர்னமியன்றும் செய்தால் மிகவும் நல்லது. அதுவும் பௌர்னமியன்று மாலைப் பொழுதில், சந்த்ரோதய காலத்தில் பூஜையைச் செய்வது மிகவும் உசிதம். ஸ்ரீ சத்யநாராயணர் மகாவிஷ்னுவின் அவதாரம். அவரும், அவர் பேருக்கேற்றார் போல் சத்தியமானவர். நம்பிக்கையுடன் இதனை செய்தால் கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்கும்.

இந்த பூஜையின் விசேஷம் என்னவென்றால், ஸ்ரீ சத்யநாராயணரே நாரதரிடம் மனிதர்கள், தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை விளக்கிக் கூறி அதன் மகிமைகளையும் தன் வாய்மொழியாக குறிப்பிட்டுள்ளார். இந்த பூஜையை புரோகிதர் வைத்தும் செய்யலாம், அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம். இந்த பூஜையை பௌர்னமியன்று செய்ய முடியாதவர்கள் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் அனூகூலமாக உள்ளதோ அப்பொழுதும் செய்யலாம்.

இந்த பூஜையை பொது இடங்களிலோ அல்லது வீட்டிலோ தமது சௌகர்யம் போல் செய்துக் கொள்ளலாம். ஆனால் பூஜை செய்யும் முன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தை துடைத்து கோலமிட்டு, அதன் மேல் மணை வைத்து அதில் சுவாமி படத்தை வைத்து பூஜையை தொடங்க வேண்டும். பின் படத்திற்கு முன் கலசத்தை ஒரு நூலில் சுற்றி, அதில் வஸ்திரமோ அல்லது பூவோ வைத்து சுற்றி வைத்து, அந்த கலசத்தில் சுத்தமான நீரை பரப்பி அதில் சிறிது ஏலக்காய் போட்டு அதன் மேல் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து பூஜையை தொடங்க வேண்டும்.

பின் இப்பூஜை செய்வதற்கு முன் கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்ய வேண்டும். அதற்கு தனித்தனியாக நிவேதனம் செய்ய வேண்டும். நவகிரக தானியங்களை அந்தந்த சுவாமிக்கு படைக்க வேண்டும். அந்தந்த தெய்வத்தை ஆவாகனம் செய்ய சூரியனுக்கு கோதுமை, சந்திரனுக்கு நெல் அரிசி, அங்காரகனுக்கு துவரை, புதனுக்கு பயறு, குருவிற்கு கடலை, சுக்கிரனுக்கு மொச்சை, சனிக்கு எள்ளு, ராகுவிற்கு உளுந்து மற்றும் கேதுவிற்கு கொள்ளு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை வேலைக்கு செல்வதால் நேரம் குறைவாக இருந்தால் கணபதி பூஜையும், ஸ்ரீ சத்ய நாராயண பூஜையும் மட்டுமாவது செய்ய வேண்டும். இவை இரண்டும் மட்டும் செய்ய நவதானியங்கள் தேவையில்லை. மற்றபடி கணமதிக்கு பாலோ, வெல்லமோ அல்லது பழமோ நிவேதனம் செய்யலாம். அதுபோல் ஸ்ரீ சத்ய நாராயணருக்கு ரவை கேசரியோ அல்லது கோதுமை மாவை சிறிது நெய்யில் வருத்து பின் சர்க்கரை சேர்த்து நிவேதனம் செய்யலாம்.

இந்த பூஜையில் வரும் அஷ்டோத்திரத்தையும், அங்க பூஜையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒரு வேளை சங்கல்பத்திற்கு தேவையான குறிப்புகள் கிடைக்க வில்லையென்றால் சுபதினே, சுபநக்ஷ்த்ரே, சுபதிதௌ, சுப முஹூர்த்தே என்றும் சொல்லியும் செய்யலாம். இந்த பூஜைக்கு துளசி கிடைத்தால் அதைக் கொண்டு செய்தால் மிகவும் நல்லது, கிடைக்காதவர்கள் மற்ற மலர்களைக்கொண்டும் அக்ஷதைக் கொண்டும் செய்யலாம். மறந்து விடாமல் பூஜையை முடித்துவிட்டு கதை படிக்க வேண்டும். முழு கதையை படிக்க நேரமில்லையென்றால் அதன் சுருக்கி எழுதிய சாரத்தையாவது கண்டிப்பாக படிக்க வேண்டும். பின் அந்த பிரசாதத்தை தான் முதலில் உண்டு மற்ற எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அதே போல் கலத்திலுள்ள தீர்த்தத்தை தாமும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு பௌர்னமியன்றும் நம்பிக்கையுடன் செய்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
குறிப்பு;- இப்பூஜையைப் பற்றிய முழு விவரங்கள் பல புத்தகங்களில் வருகிறது. உதாரணம் ஸ்ரீ சத்ய நாராயண பூஜை, ஸ்ரீ சத்ய நாராயண விரத மகிமை போன்ற புத்தகங்கள் பல கடைகளில் கிடைக்கிறது. பிரோகிதர் வைத்து செய்ய நேர மில்லாதவர்கள், இம்மாதிரி புத்தகங்கள் மூலம் தாமே சொந்தமாக பூஜை செய்துக் கொள்ளலாம்.

Wednesday, August 1, 2007

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு இந்த ஆகஸ்ட் மாதம் 2007, 3 ஆம் தேதியன்று வருகிறது. ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் 18 ஆம் தேதியன்று வரும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். இந்த தேதியில் தான் மழை நீர் சேகரித்து வைத்து, மேட்டூர் அணை திறந்து விட பட்டு காவிரியில் கலக்கிறது. அப்படி கலந்து விட்டப்பின் நம் காவிரி நதி கூடுதலாக பெருகி,
அதிகரித்து ஓடும். இதனால் தான் பெருக்கு என்ற பெயர் வந்தது. இதனால் உழவர்கள் தங்கள் நெல் விதைக்கும் வேலையை ஆரவாரத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவையை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத இந்த ஜீவ நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் வேலையை தொடங்குவார்கள்.

அதே போல் நம் ஊர்களிலும் பல பெண்கள், நதிக்கு பூஜை செய்து வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம், செல்வம் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு
சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள். நாம் நகரத்து வாசிகள், எப்படி ஆற்றங்கறையில் வைத்து சாப்பிடுவது, என்று யோசித்தால் ஏதாவது கடற்கறையிலோ அல்லது பூங்காகளிலோ நண்பர்களோடும், உறவினர்களோடும் சேர்ந்து கூடி சென்று கொண்டாடி மகிழ்ந்து உணவு உண்டால் அந்த சுகமே தனி தான். என்ன தட்டம் போட ஆரம்பிச்சிட்டீங்களா? எல்லோருக்கும் என் பதினெட்டாம் பெருக்கு நல்வாழ்த்துக்கள்.



குறிப்பு; ஏன் ஆடிப்பெருக்கன்று கலப்பு சாதம் செய்கிறார்கள், என்று தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து சொல்லவும்.

லலிதா நவரத்தின மாலை

இந்த பாட்டை மூன்று பாகங்களாக பிரித்து எழுதியிருக்கிறேன். இதற்கு பொருத்தமான அர்த்தங்களை திரு குமரன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இவற்றை படிக்கவும், பாட்டை கேட்கவும் இங்கே, இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.