Tuesday, June 26, 2007

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும்

நான் கூறும் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் என்னும் திருதலத்தில் உள்ளது. இத்தலத்தில் தான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார். அவருக்கென இக்கோவிலில் தனி சந்நிதியொன்று உள்ளது. இங்குள்ள பெருமாள் தன் துணைவிகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். ஒவ்வொரு கோவிலும் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கலோக கதவை
திறப்பார்கள். ஆனால் இக்கோவிலே பூலோகத்தின் வைகுண்டமாக கருதப்படுவரால் வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு இக்கோவிலில் அடி எடுத்து வைத்தாலே சொர்க்க வாசலில் நுழைந்த முழு பலனைப் பெறலாம். இங்குள்ள தாயாரின் பெயர் யதிராஜவல்லி. தாயாருக்கென்று தனி சந்நிதியுள்ளது. அத்தோடு ஆண்டாளுக்கும் தனி சந்நிதி ஒன்று தனியாக உள்ளது. ஆண்டாளின் அழகை வர்னிக்க நம் அகக்கண் கூட பத்தாது. பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். பிறகு ராமருக்கும், வேணுகோபாலருக்கும் தனித்தனி சந்ந்திகள் உள்ளன. இப்பெருமாளின் திருநட்சத்திரம் திருவோணம். ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரங்கள் வரும் தினங்களில் திருவீதி உலா வரும் வைபோகத்தை நாம் காணலாம்.


ஸ்தல வரலாறு; இக்காலத்தில் ஸ்ரீபெரும்புதூராக அழைக்கப்படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் ஒரு நாள் சிவபெருமான் கைலாயத்தில் தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவர் உடம்பில் இருந்த வஸ்திரம் நழுவி விழுந்தது. இதை பார்த்த சிவகணங்கள் சிவனை
பார்த்து சிரித்தன. இதை உணர்ந்த சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சாபமளித்தார். இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவம் செய்தார்கள். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக, கணங்களுக்கு காட்சி அளித்து , பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார்.
அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது.


தோஷம் நீங்கும் ஆலயத்தின் விசேஷம்; ராமானுஜர் என்பவர் ஆதிசேஷனின் மறுபிறவிகளில் ஒன்றாக பிறந்து பெருமாளின் உடனிருந்து, அவறை என்றுமே பிரியாதிருப்பவர். ஸ்ரீராமர் காலத்தில் லக்ஷ்மணராக பிறந்து அவருடனே இருந்து உதவி புரிந்தவர். அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் பலராமனாக பிறந்து கிருஷ்ணருக்கு உதவி புரிந்தார். இக்கலிகாலத்தில் ராமானுஜராகப் பிறந்து பெருமாளுக்கு தொண்டு செய்தார். அவரைப் பற்றி கூறிக் கொண்டிருந்தால் ஒரு கட்டுரையே பத்தாது. ஆக ஆதிசேஷணனின் அவதாரமாக பிறந்த இவரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.


ராமானுஜரின் சிறப்பாக கொண்டாடப்படும் விஷயங்கள்; நான் குறிப்பிடும் இவையெல்லாமே இக்கோவிலில் வேலை பார்க்கும் ஒருவர் கூறியது; இந்த ஊரில் இறந்த ஒவ்வொருத்தருக்கும் மோட்சம் அடையக்கூடிய பாக்கியம் பெறுவர். எப்படியெனில் சுவாமிக்கு சூட்டப்பட்ட திருமாலையையும், ஆளவந்தார் காஷாயம், பரிவட்டம் ஆகியவையை இறந்தவரின் உடலில் வந்து சாத்துவார்கள். இதனால் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென நம்பிக்கை.



ஸ்ரீராமானுஜருக்கு அபிஷேகம் நடக்கும் போது அவருக்கு சாத்திய உடைகள் ஈரமாகி விடும் அல்லவா. ஆகவே அந்த நீரை பிழிந்து தீர்த்தமாக நாம் அருந்தினால் அவர்களுக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை உண்டு.


நப்பிக்கையுடன் செய்தால் பலன் உறுதி.

Wednesday, June 13, 2007

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் 2

(தொடர்ச்சி)

இதன் முன் பாகத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்

இத்தலத்தை ஒட்டிய மற்ற வரலாறு கதைகள்;

அர்தநாரீஸ்வரராக உருவான வரலாறு; ஒரு நாள் அம்மன் விளையாட்டாக சிவனின் இரு கண்களையும் பொத்தினாள். இதனால் உலகமே இருண்டு போயிற்று. இச்செயலினால் கோபமடைந்த சிவபெருமான் அம்மனை பூலோகத்தில் சென்று தவம் செய்து தன்னை அடையும் படி கூறினார். கணவரின் சொல்படி பூலோகத்திற்கு சென்று அம்மன் தவம் செய்ய தொடங்கினாள். இந்த கதையை விரிவாக படிக்க இங்கே பார்க்கவும். பிறகு பதிதன்னின் சொல்படி மாங்காட்டிலிருந்து காஞ்சிக்கு அம்மன் புறப்பட்டு சென்றாள். பிறகு காஞ்சியில் சிவனின் உருவத்தை செய்து வேண்டி வந்தாள். இதனால் சிவபெருமான், திருவண்ணாமலைக்கு வந்து தன்னுடைய உடலில் சரிபாதையை பெருமாறு கூறினார். பிறகு அம்மன் திருவண்ணாமலைக்கு சென்று சிவனையெண்ணி தவம் செய்ய தொடங்கினாள். அப்பொழுது அத்தவத்தை கலைக்க மகிடாசூரன் அங்கே வந்தான். இதனால் அம்மன் மகிஷாசுரமர்தினியாக உருவெடுத்து அவனைக் கொன்றாள். அதன்பின்னர் கார்த்திகை மாதம் பௌர்னமி கூடிய சுப தினத்தில் பிரதோஷ வேளையில் ஜோதிரூபமான சிவனை தரிசித்துவிட்டு அம்மன் சிவனின் இடபாகத்தைப் பெற்றாள். அதனால் தான் கார்த்திகை தீபத்தின் போது அர்த்தனாரீஸ்வரர் ரூபமாக எழுந்தருளி சிவனும் அம்பாளுமாக சேர்ந்து எல்லோருக்கும் காட்சி கொடுக்கிறார்.

முருகனின் அருள்பெற்ற அருணகிரிநாதர்; அருணகிரிநாதர் தன் இளமை காலத்தில் வாழ்க்கையை வெருத்து வள்ளாள மகாராஜா கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கு தோன்றி அருணகிரிநாதரை காப்பாற்றி அவருக்கு அருள் புரிந்தார். பின்பு அவர் முருகப்பெருமானின் மீது அளவு கடந்த பக்தி
வைத்து பல பாடல்களை இயற்றினார். இதனால் இவர் மேல் பொறாமை கொண்ட அரசவைப்புலவரான சம்பந்தன் நீ அழைத்தால் உனது முருகன் வருகிறானா அல்லது நான் அழைத்தால் எனது காளி தேவி வருகிறாளா? என்று அகந்தையோடு பேசினான். பிறகு அருணகிரிநாதர் தன் நிலைமையை முருகனிடம் கூறி மன வேதனை அடைந்தார். இதனால் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சி தந்தருளினார். அகந்தையாக பேசியதால் காளி தேவி சம்பந்தனுக்கு காட்சி கொடுக்கவில்லை. இதனால் பெரும் கோபம் கொண்ட சம்பந்தன், அருணகிரிநாதனின் புகழை அழிக்க தக்க சமயத்திற்காக காத்திருந்தார். அதற்கு சமயமாக விஜயநகர் மன்னரான பிரபுவிட தேவராயர் தன்னுடைய கண் பார்வை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை தனக்கு சாதகமாகிக்கொள்ள சம்பந்தன், பிரபுவிட மன்னரைப் பார்த்து தங்களுக்கு கண் பார்வை கிடைக்க ஒரு வழி இருக்கிறது என்றார். அது என்னவென்றால் சொர்க்கத்தில் இருக்கும் பாரிஜாத மலரைக் கொண்டு வைத்தியம் செய்தால் இழந்த கண்களை திரும்ப பெற முடியும் என்றும், ஆனால் இதை அருணகிரிநாதரால் தான் கொண்டு வர முடியும் என்றார். இதனால் மன்னரும் அருணகிரிநாதரிடம் தனக்கு இச்செயலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அருணகிரிநாதரும் அதற்கிணங்க தன்னுடைய பூத உடலோடு சொர்க்கத்திற்கு செல்ல முடியாததால் ஒரு இறந்த கிளியிடம் தன் உயிரை வைத்து கூடுவிட்டு கூடு பாய்ந்து சொர்க்கத்திற்கு சென்றார். ஆனால் சம்பந்தரின் சூழ்ச்சியால் அருணகிரினாதரின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது.

இதனால் அங்கு அருணகிரிநாதர் கிளிரூபத்திலேயே இருந்து முருகனின் பாடல்களை இயற்றினார். அங்கு கிளி வடிவமாக ஒரு கோபுரத்தில் அருணகிரிநாதர் தங்கியதால் அது கிளி கோபுரம் என்ற பெயரைப் பெற்றது.

வள்ளாள மகாராஜாவின் மகனான பரமசிவன்; வள்ளாள மகாராஜாவிற்கு தன் மேல் மிகவும் கர்வம் கொண்டு அருணாசலேசுவரர், தான் சொன்னால் அனைத்தையும் நிறை வேற்றுவார் என்ற நினைப்போடு வாழ்ந்து வந்தார். இதனால் இவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான் அவருக்கு குழந்தையாக பிறந்தார். ஆனால் வள்ளாள மகாராஜா, தாம் எடுத்து அந்த குழந்தையை கொஞ்சும் போது சிவனாக பிறந்த அந்த குழந்தை மறைந்து விட்டது. மனம் கலங்கி சிவனை வந்து மகாராஜா வேண்டினார். இதனால் மகாராஜாவின் தவறை உணர்த்தி அவருக்கு மகனாக பிறந்ததால் தாமே அவருக்கு ஈமக்கிரியைகளை செய்துவிப்பதாக அருணாசலேசுவரர் வாக்களித்தார். இதனால் தான் இன்றும் மாசி மாதத்தில் வள்ளாள மகாராஜாவிற்கு அருணாசலேசுவரர் திதி செய்து வைக்கிறார். இதற்கு மாசி மகம் தீர்த்தவாரி என்று பெயர்.

மற்றொரு சம்பவம்; வள்ளாள மகாராஜா தன் பெயரில் ஒரு கோபுரத்தை கட்டி முடித்து விட்டு தன் பேரில் கர்வம் கொண்டார். இதனால் இவருக்கு புத்தி சொல்ல விரும்பிய சிவபெருமான் பத்து நாட்கள் தொடர்ந்து வரும் திருவிழாவில் ஒன்பது நாளும் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல மறுத்து விட்டார். இதனால் மனம் வருந்தி தன்
தவரை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் திருவிழாவின் கடைசி நாளில் வள்ளாள மகாராஜா கோபுரம் வழியாக செல்ல சிவபெருமான் அனுமதித்தார்.

ரமண மகரிஷியின் பாதாள லிங்கம்; ஆயிரங்கால் மண்டபத்தில் படிகட்டின் வழியாக கீழே சென்றால் அங்கே நாம் பாதாள லிங்கத்தை பார்க்கலாம். அங்கே தான் ரமண மகரிஷி தன் இளமை காலத்தில் தங்கி சிவனையெண்ணி தவமிருந்தார். அவருக்கு உதவியாக சேஷாத்திரி என்பவர் உடனிருந்தார். மனதில் உள்ள ஆசைகளையும், எண்ணங்களையும் எப்படி அடக்க வேண்டும் என்று எளிமையான முறையில் கூறியது இவரது சிறப்பு. ஒரு எடுத்துக்காட்டாக...... ஒரு பெண் தன் விலையுயர்ந்த நகையை கழுத்தில் அணிந்துக் கொண்டே மற்ற எல்லா
இடங்களிலும் தேடியது, தன் பொருளின் மேல் தான் வைத்த பற்றை பற்றி எல்லோருக்கும் தெரியும் படி செய்தது போன்ற கதையில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

இவையே திருவண்ணாமலை ஸ்தலம் பற்றி நான் அறிந்ததும் கேட்டதும். உங்களுக்கு தெரிந்த வரலாறு கதை இருந்தால் தயவு செய்து கூறவும். நானும் தெரிந்துக் கொள்வேன்.

Wednesday, June 6, 2007

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் 1

இந்த வாரத்தின் கோவில் திருவண்ணாமலையில் இருக்கும் திரு அருணாசலேசுவரர் திருக்கோவில். மற்ற இடங்களில் நாம் மலைமேல் சுவாமி இருப்பதாக கேள்வி பட்டிருப்போம், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம். இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. முக்தி தரும் இடமாக கருதப்படும் இடங்களில் இத்திருத்தலமும் ஒன்று.
திருவாரூரில் பிறக்க வேண்டும், காசியில் இறக்க வேண்டும், தில்லை சிதம்பரத்தை போய் பார்க்க வேண்டும், ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமிது.
இம்மலையில் சுற்றும் வழியில் அஷ்ட லிங்கங்கள் உள்ளது. அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். இம்மலையை சுற்றி வந்தால் இறைவனை சுற்றுவதற்கு சமானம். அதுவும் பௌர்னமியன்று சுற்றினால் மிகவும் விசேஷம். இத்திருக்கோவிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பிராத்திலும் பல சந்நிதிகள் இருக்கிறது. முதல் பிராகரத்தில் சுவாமி சந்நிதியுள்ளது. மூன்றாவது பிராகரத்தில்
உண்ணாமலை அம்மன் சந்நிதி உள்ளது. மற்ற பிராகரங்களில் வேணுகோபாலசுவாமி சந்நிதி, வினாயகர் சந்நிதி, முருகன் சந்நிதி, கால பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி, வள்ளாள மகாராஜா கோபுரம், கிளி கோபுரம், அருணகிரினாதர் மண்டபம், பாதாள லிங்கம், ஆயிரங்கால் மண்டபம், மற்றும் பல சந்நிதிகள் உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருட்சம் மகிழ மரம். இந்த மரம் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த மரத்தில் சிறிய தொட்டில்கள் செய்து கட்டி வேண்டிக்கொள்வார்கள். குழந்தை பிறந்தவுடன் தொட்டில்களை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு விட்டு செல்வார்கள்.


ஸ்தல வரலாறு; ஒரு காலத்தில் பிரம்மாவிற்கும், விஷ்னுவிற்கும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உண்டாயிற்று. இதனால் இருவரும் சிவபெருமானை மத்யஸ்த்திற்கு அழைத்தார்கள். ஆகையால் சிவபெருமான் இவர்களின் உயர்வு தாழ்வு எண்ணத்தை போக்க ஒரு போட்டி வைத்தார். யார் முதலில் தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ பார்த்து
சொன்னால் அவர் தான் சிறந்தவர் என்றார். பிறகு சிவன் ஜோதிமயமாக தன் உருவை மாற்றிக் கொண்டார். இதனால் விஷ்னு வராக அவாதாரம் எடுத்து அடியை காண பூமியை குடைந்து சென்றார். ஆனால் அவரால் முடியவில்லை. தான் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டார். அதுபோல பிரம்மா அன்னப்பறவையாக மாறி முடியை தேடிச் சென்றார். இடையில் தாழம்பூ சிவனின் முடியிலிருந்து கீழே விழுவதை பார்த்துவிட்டு, சிவனின் முடியைக் காண இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு தாழம்பூ தாம் பல்லாயிற வருஷ காலமாக கீழே விழுவதால் தனக்கு தெரியவில்லை என்றது. இதனால் பிரம்மா தாம் தோர்க்கக்கூடாது என்ற எண்ணத்தினால் தாழம்பூவை தாம் சிவனின் முடியை பார்த்ததாக பொய் சாட்சி கூற கூறினார். இதற்கு தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதனால் கோவம் அடைந்த சிவபெருமான் பிரம்மாவிற்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ
சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபித்தார். அப்படி ஜோதியாக சிவன் நின்ற அந்த இடம் தான் திருவண்ணாமலை ஸ்தலம்.


இத்தலத்தை ஒட்டிய மற்ற வரலாறு கதைகளை அடுத்த பதிவில் பார்க்கலாமா.....

(தொடரும்)