Tuesday, September 25, 2007

குழந்தைக்கு சொல்லித் தரும் பாப்பா பாட்டு

ஒரு குழந்தையை நல்ல குணங்களுடனும், அவர்கள் மனமும் நோகாமாலும் பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்க, நாம் சின்ன வயதிலேயே அவர்களுக்கு நல்ல புத்திமதி கூறும் பாட்டுகளையும், கதைகளையும் சொல்லி வந்தால், அது அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து, பிற்காலத்தில் தவறு செய்ய யோசிப்பார்கள். ஒரு குழந்தை நன்றாக வளர்வதும், வளராததும் அது அவர்கள் பெற்றோரை பொருத்து தான் உள்ளது. அப்படி நாம் குழந்தைக்காக பாடும் பாட்டுகளில், பாரதியாரின் பாப்பா பாட்டு, மிகவும் சிறந்தது. இந்த பாட்டை பாட்டினால், எப்படி தன்னொத்தோடு வளர வேண்டும், பிறரிடம் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும், தேசப் பற்றும், மொழிப் பற்றும் வளர்த்துக் கொள்ள வேண்டும், விலங்குகள் நமக்கு நண்பன் போன்ற நல்ல கருத்துகளை வளர்க்கும். இதோ பாரதியாரின் பாப்பா பாட்டு;;

ஓடி விளையாடு பாப்பா! -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. (1)

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! (2)

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதை
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேனும் பாப்பா! (3)

பாலைப் பொழிந்து தரும் பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா,
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா! (4)

வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா! (5)

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு தரும் நல்ல பாட்டு,
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா! (6)

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்லலாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா! (7)

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! (8)

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! (9)

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா! (10)

தமிழ்மத்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! (11)

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதை
தாயென்று கும்பிடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் -அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! (12)

வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! (13)

வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு;
சேதமில் லாதஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா. (14)

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர். (15)

உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா! (16)

Monday, September 24, 2007

குழந்தைக்கு பொடி இதோ

நம்ப நாட்டில் உள்ள பல இயற்கையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் நமக்கு இடைத்தது ஒரு வரப்பிரசாதம். இதை நிறைய பேர் கவனிக்காமல் சீரீயல்ஸ்ல (artificial cereals) தான் சக்தி இருக்குனு நினைத்து, நிறைய வாங்கி கொடுக்கறாங்க. அதே போல ஜீஸ், நம்ம கையால ஆப்பில், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை மிக்ஸியில் போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுக்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் பல பேர் கடையில் கிடைக்கும் ஜீஸ் பாட்டிலை வாங்கி அதை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் உடம்பில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் தான் சேர்கிறது. நாமும் இயற்கையோடு ஒன்றி, இயற்கை உணவுகளை கொடுத்தால், குழந்தைகளுக்கு நல்ல சத்துக்கள் உடம்பில் சேரும்.

இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன், மாகி நூடுல்ஸ் (magie noodles) இதிலுள்ள ரசாயன கலப்பு உடம்பிற்கு மிகவும் கெட்டது. ஆனால் முக்கால்வாசி வீட்டில் இது தான் குழந்தைகளுக்கு மாலை உணவு. இது பிற்காலத்தில் அவர்கள் உடம்பை மிகவும் பாதிக்கும். அதற்காக அவர்களுக்கு வெளி உணவே கொடுக்காதீர்கள், என நான் சொல்லவில்லை. அதையும் கொடுங்கள், இயற்கை உணவுகளை அதிகம் கொடுங்கள் என்று தான் சொல்கிறேன்.

இந்த இயற்கையான சத்துமாவு கஞ்சியை குழந்தைகளுக்கு வீட்டில் செய்து தினமும் கொடுத்தால், அது அவர்கள் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கஞ்சிப்பொடி செய்யும் முறை;

சம்பா கோதுமை -- 200 கிராம்
ஜவ்வரிசி -- 100 கிராம்
கம்பு -- 100 கிராம்
கேழ்வரகு -- 100 கிராம்
பார்லி -- 100 கிராம்
பாசிப்பருப்பு -- 100 கிராம்
பாதாம், முந்திரி -- 100 கிராம் (இரண்டும் சேர்த்து)
புழுங்கலரிசி -- 200 கிராம்
பொட்டுக்கடலை --100 கிராம்
ஏலக்காய் -- 4 எண்ணிக்கை.

புழுங்கலரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு இவற்றை சுமார் ஒரு மணிநேரம் ஊறவைத்து, பின் வடிகட்டி துணியில் உலர்த்தி, அதை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்றாக சிவக்க வறுக்க வேண்டும். ஆனால் முந்திரி, பாதாம் இவற்றை லேசாக வறுத்தால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள சாமான்களில் பார்லியையும், பொட்டுக்கடலையையும் வறுக்க வேண்டாம். இவை அத்தனையையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மாவாக திரித்து வைத்துக்கொள்ளவும். இவை அனைத்துமே எல்லா இடத்திலும் கிடைக்கும். ஒரு வேளை கம்பு, கேழ்வரகு இவை கிடைக்கவில்லை என்றால் அது இல்லாமலும் செய்யலாம். அதே போல் இந்த கஞ்சியை பாலோடு சேர்த்து வேக வைத்து கொடுத்தால், உடம்பில் பால் சத்தும் இதனுடன் சேரும்.

இவ்வளவே தாங்க, நீங்களும் உங்க குழந்தைக்கு பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா?

குறிப்பு; இதில் நான் ஏதாவது சொல்ல மறந்திருநால் தயவு செய்து குறிப்பிடவும்.

ஆயர்பாடி மாளிகையில்

நான் தாலாட்டு பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை எஸ் பி பி பாட இன்று முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு இனிமையாக இருக்கும். இப்பாடலை கேட்க இங்கே அழுத்தவும்.

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல்
மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணனை உண்டு
மண்டலத்தை காட்டியப்பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவளுரங்க
மயக்கத்திலே இவனுரங்க
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)

நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அந்த மோகநிலைக் கூட, ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன் பொன்னழகை பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெருவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)

Monday, September 10, 2007

காளிகாம்பாள் திருக்கோவில்

இத்திருக்கோவில் சென்னையில் பாரீஸ் தம்பு செட்டிதெருவில் அமைந்துள்ளது. அம்பாளின் பெயர் காளிகாம்பாள், சிவனின் பெயர் கமடேஸ்வரர். முதன் முதலில் இத்திருத்தலம் சென்னைக்குப்பம் என்னும் பகுதியில், பண்டைக் கால ஆங்கிலேயர் ஆட்சியில் கிபி 1640 யில் ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் கட்டப்பட்டது. பிறகு ஆங்கிலேயர்களின் கோரிக்கையின் பேரில் தம்பு செட்டி தெருவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.பின்னர் இத்திலுகோவில் விஸ்வகர்மா குலத்தினரால் பாதுகாக்கப் பட்டு வருகிறது.

இத்திருத்தலம் காஞ்சிபுரத்திற்கு ஈசான்யமாகவும், திருமயிலைக்கு வடக்கிலும், திருவொற்றியூருக்கு தெர்க்கிலும்,மற்றும் திருவேற்க்காட்டிற்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தினை வியாசர், அகத்தியர், பராசரர், பிருங்கி மகரிஷி போன்ற பல முனிவர்கள் வழிபட்டிருக்கிறார்கள். மற்றும் இந்திரன்,வருணன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் முதலானோரும் இத்திருதலத்தை வழிபட்டுள்ளார்கள். மற்றும் குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம்அதிகரித்தது என்ற செய்திகளும் உண்டு.

இன்னும் சத்ரபதி சிவாஜி அவர்களும் காளிகாம்பாளை வழிபட்ட பிறகே தனக்குமுடிசூட்டிக் கொண்டார் என்ற வரலாறு செய்திகளும் உண்டு.

இவ்வாலயத்தின் ஸ்தல விருக்ஷம் மாமரம். அம்மனின் பிகாரத்தை சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சித்தி புத்தியுடன்வினாயகர், ஸ்ரீ கமடேஸ்வரர், துர்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மா, வீரபத்ர மாகாளி,ஸ்ரீ நாகேந்திரர், காயத்ரி, விஸ்வகர்மா,நடராகஜர், இன்னும் நிறைய சந்நிதிகள் உள்ளன.

இவ்வாலயத்திலும், ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேரு ஸ்ரீ சக்கரத்தை காணலாம்.இங்கு அருள் பாலிக்கும் காளிகாம்பாள் மற்ற சக்தியை விட பல மடங்கு சக்திவாய்ந்ததாகும். இன்னும் சொல்லப் போனால் காஞ்சி காமாட்சியே, காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும். அம்பாள் அமர்ந்திருக்கும் காட்சியானது கைகளில் அங்குசம், பாசமும்,நீலோத்ப மலரை தாங்கிய வண்ணமுமாகவும், பின் இடக்கையில் வரத முத்திரை தரித்தநிலையிலும், தன் ஒரு காலை மடித்தும்வலது காலை தாமரையின் மேல் வைத்துபத்மாசன நிலையில் காட்சி தருகிறாள்.இத்திருக்காட்சியைப் பார்க்க கண் கோடிவேண்டும். ஆக நீங்களும் வந்து அம்மனை தரிசித்து அருள் பெருங்களேன்

Thursday, September 6, 2007

புகைப்பட போட்டிக்கு

என் வீட்டு தெருவில், விளையாட்டு மைதானம் பார்,
என் வீட்டு குழந்தை, விளையாடும் பொம்மை பார்,
என் வீட்டு குழந்தை, தூக்கி எறியும் பிளாக்ஸை பார்,
பல வண்ணங்களை காண்பிக்குமே.

இதுவே நான் பங்கு பெரும் முதல் படப் போட்டி. எல்லோரும் போடும் படங்களை பார்த்தவுடன் எனக்கும் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதன் விளைவு தான் இது. என்ன எடுக்கலாம் என்று யோசிக்கும் போது, குழந்தையின் பொம்மைகள் கண்ணில் பட்டன.
அப்படியே விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் வண்ண செங்கல் எல்லாம் கண்ணில் பட அத்தனையும் எடுத்தாகி விட்டது. இதோ என் படங்கள்.
Posted by Picasa