Wednesday, July 4, 2007

எட்டுக்கு எட்டு போட்டால், எட்டுவது இந்த எட்டுக்களே!! இதை கொஞ்சம் எட்டித்தான் பாருங்களேன்

நம்மையும் இந்த எட்டு தொடர் விளையாட்டுக்கு, ஒரு தகுதியை உரியவராக்கிய திரு KRS அவர்களுக்கும், திரு வி.எஸ்.கே அய்யாவிற்கும் என் நன்றிகள்.

ஒவ்வொருத்தர் எழுதியிருப்பதைப் பார்த்தால், நானெல்லாம் வாழ்க்கையில் என்ன செய்தேன் என்று யோசிக்க வைக்கிறது. ஆனால் இனிமேலாவது வாழ்க்கையில் ஏதாவது உருப்படியாகச் செய்து சாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

நான் வாழ்க்கையில் பெற்றதையும், மற்றதையும் பற்றி என் எட்டில் கூறியிருக்கிறேன். இவைகள் எல்லாம் கண்டிப்பாக சாதனைகள் இல்லை. என்னைப்பற்றிய உண்மைகள் மட்டுமே.

1.நான் வாழ்க்கையில் படித்தது Accounts, மேற்படிப்பு HR, ஆனால் அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத Finance பணியில் வேலைப் பார்த்தேன். இதிலேயே தெரிந்திருக்கும் நான் எவ்வளவு தெளிவாக இருக்கிறேன் என்று. நான் முதன் முதலில் கல்லூரியில் சேர்ந்தது BA Corp, ஆனால் பிறகு BCOM கிடைத்தது, அதனால் அந்த படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மற்றொன்றில் சேர்ந்தேன். பிறகு மேல் படிப்பு வரும் போது, MCA படிக்கலாமா என்று ஒரு குழப்பம். என் வீட்டிலும் எது சேர்ந்தாலும் சரி என்றார்கள். நானும் அதற்குண்டான வழிகளை ஆரம்பித்தேன், ஆனால் முடிவில் அங்கும் சேரவில்லை. சேர்ந்ததெல்லாம் HR, ஆனால் என் நேரம் முடிக்கும்போது campus interview வரவில்லை. அதனால் அத்துறையில், முன் அனுபவமில்லாத எனக்கு வேலைக்கிடைக்கவில்லை. தகுந்த வேலையை நான் இன்றும் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வேரொரு வேலைக்கு சென்றுக் கொண்டேதான், என் மேல் படிப்பை முடித்தேன். என்னாலும் படித்துக் கொண்டே வேலைப் பார்க்க முடிந்தது என்ற ஒரே சந்தோஷம் தான்.

2.நான் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தது, ஒரு marketing executive வாகத்தான். தினமும் நாள் கூலி தருவார்கள். இதற்கு காலையிலிருந்து, மாலை நேரம் வரையில் ஒவ்வொரு வீடாகவும், கம்பெனியாகவும் சென்று நாங்கள் விற்கும் தண்ணீரைப் பற்றி கூறிவிட்டு வருவேன். அதேபோல் telemarketing கூட செய்திருக்கிறேன். இது எனக்கு ஒரு வித்யாசமான அனுபவம் தான். அதனால் இன்றும் கூட யாராவது, எதாவது பொருள் விற்க வந்தால், அவர்களை துரத்திவிட மாட்டேன். marketing என்றதும் என் நினைவிற்கு வருவது இந்த வரிகள் தான், கழுத்திலே டை, கையிலே பை, வாயிலே பொய்.

3.கடவுள் என்றால் அபார நம்பிக்கை எனக்கு உண்டு. இதனால் ஒரு நாள் ஒரு வேண்டுதலுக்காக, திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு வந்து 108 முறை பிரகாரம் சுற்றுவதாக வேண்டிக் கொண்டு விட்டாச்சு. ஆனால் நான் முன்னபின்ன அந்த கோவிலுக்கு சென்றதில்லை, அதுவும் நான் சென்ற நேரம் மாலைப் பொழுது. அது மட்டும் இல்லாமல் அன்று தங்கரத பவனி நடந்துக் கொண்டிருந்தது. அம்மனை தரிசித்து முடித்தப் பிறகு மணி சுமார் ஏழு இருக்கும். பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தேன். நேரம் சென்று கொண்டே போனது, ஆனது ஆகட்டும் முடித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். கோவில் குருக்கள் கோவிலை சாத்துவதற்க்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாக பத்து மணி அளவில் சுற்றி முடித்தேன். பிறகு தான் கடைசி பேருந்து சென்றுவிட்டது என்ற விஷயம் தெரிந்தது. உடனே பயம் தொற்றிக் கொண்டது. அதன் பின் கோவில் வாசலில் ஒரு பெண், எனக்கு சமாதானம் சொல்லி, அவர்கள் எல்லோரும் இரவு கோவில் முன்பு தங்குவதற்காக வந்துள்ளதாகவும் சொன்னாள். பிறகு என் வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, கவலைப் படாமல் இருக்கும் படி சமாதானம் செய்தேன். அங்கேயே ஒரு கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டு கோவில் வாசலில் இரவு தங்கினேன். அங்கு இரவு முழுவதும் பஜனை நடந்தது. இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து பஜனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சுமார் காலை நாலு மணிவரை பஜனை நடந்தது. பிறகு மறுபடியும், காலை முதல் தரிசனமாக அம்பாளை தரிசித்து செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்தால் செம டோஸ். இதுவும் ஒரு அனுபவம் தான்.

4. மாங்காட்டில் ஒரு நாள் துணைக்கு யாரும் இல்லாத போது, அம்பாளை வணங்கி அங்க பிதர்ஷணம் செய்ய ஆரம்பித்தேன். செய்து முடித்தவுடன் ஒரே தலைச்சுற்றல், வாந்தி. கூடவும் யாருமில்லை. அப்பொழுது உதவிக்கு ஒரு அம்மா வந்து என்னை ஒரு கடையிக்கு அழைத்துச் சென்று ஜூஸ் வாங்கி கொடுத்தாள். பிறகு தான் கொஞ்சம் தெளிந்தது. ஆகவே தனியாக வந்து இப்படியொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டதிலிருந்தே சிறிது விவேகத்துடனும் செயல் பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் நம்பினார் கெடுவதில்லை என்ற சொல் போல், நான் வேண்டியது நடந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

5. வலியில்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட பாக்கியசாலி நான். பிரசவத்தின் போது, குறித்த நாளும் தாண்டிவிட்டது, ஆனால் வலி எடுக்கவில்லை. பிறகு மருத்துவரிடம் சென்றோம், அவர்களும் பார்த்துவிட்டு, எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, இன்னும் இரண்டு நாள் பொறுத்துப் பார்க்கலாம் என்று கூறினார். சரியென்று நாங்களும் வீடு வந்து விட்டோம், பின் மறுநாள் காலை எனக்கு பனிக்குடம் உடைந்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு அவசரமாக ஓடினோம். ஆனால் வலி எடுக்கவேயில்லை. பிறகு மருத்துவரும் பார்த்துவிட்டு வலி வருவதற்கு ஊசி போட்டார்கள். ஆனால் எதற்கும் பாச்சா பலிக்கவில்லை. கடைசியில் ஆப்ரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க வேண்டும், இனிமேல் காத்திருந்தால் குழந்தைக்கு ஆபத்து என்று கூறிவிட்டார்கள். சரியென்றதும் ஆப்ரேஷம் செய்து ஒரு குட்டிப்பாப்பாவை வெளியே எடுத்தாங்க. கேட்டால் கொடி சுற்றியிருப்பதால் வலி எடுக்கவில்லை என்றார்கள். இப்ப குட்டிக்கு ஒரு வயசு ஆகுது.

6. கணவருக்கு வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது. இதனால் நானும், என் 5மாத குட்டிபாப்பாவும் கிளம்பி அமரிக்கா வந்தோம். வேறு குழந்தைகளை பார்த்து வளர்வதை கூட இருந்து பார்த்ததும் கிடையாது. குழந்தையை எனக்கு தெரிந்த வரையில் பெரியவர்களின் உதவி மூலம் தொலைபேசி மற்றும் இணைய ஆலோசனையுடன் நல்லபடியாக வளர்த்து வருகிறேன். இப்படி ஒரு குழந்தையை நம்மால் தனியாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு கிடைத்தது பற்றி எனக்கு மிகவும் சந்தோஷம்.

7. Software பற்றி எதுவுமே தெரியாத எனக்கு என் கணவர் உதவியுடன், இணைய அறிவு வளர வழி கிடைத்ததை தாண்டி இன்று கிடைக்கும் நேரத்தில் handycam மூலம் எடுத்த படத்தை edit செயவதிலுருந்து encoding பண்ணி DVD க்கு மாற்றுவதிலிருந்து அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். இதனால் இப்பொழுது நேரம் வாய்க்கும் போது, camera விலுள்ள நாங்கள் எடுத்த படத்தை DVDக்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

8. திருமணத்திற்கு முன் வீட்டில் அவ்வளவாக வேலை பார்க்காமல் ஏதோ ஒன்றிரண்டு வேலை மட்டுமே செய்துவிட்டு, கோவில், class என்று சென்றுவிடுவேன். இதனால் என் அம்மா தனியாகவே எல்லா வேலைகளையும் செய்வார்கள். ஆனால் திருமணமானப்பின் தான் என் அம்மாவின் நிலைமை புரிகிறது. வெளியே வேலைக்கும் சென்றுவிட்டு, வீட்டிலும் வேலை செய்து அப்பாடா என்று ஆகிவிடும். அலுவலகம் விட்டு வேலைக்கு வந்தால் யாராவது காப்பி போட்டு தர மாட்டார்களா என்றிருக்கும். எல்லா நிலைமையும் அவரவர்களுக்கென்று வரும் போது தான் தெரியும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதெல்லாம் நினைத்து பார்த்தால் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

விளையாட்டின் விதிகள்: (உங்களின் தலைவிதிகள்:-)
1. ஆடுபவர் தன்னைப் பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.) அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும் -
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் - இது எல்லாம் optional தான் - நிறைய பேரு இதை மதிக்கலை. ஸோ...கண்டுக்காதீங்க! :-)
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும். - முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)

எனக்கு முன்னாலே எல்லோரும் வந்துவிட்டதனால், யாரைக் கூப்பிடுவது என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.

17 comments:

Anonymous சொன்னார்

I enjoyed reading your post. How is the baby papaa?

Radha

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னார்

//அங்கேயே ஒரு கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டு கோவில் வாசலில் இரவு தங்கினேன். அங்கு இரவு முழுவதும் பஜனை நடந்தது. இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து பஜனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்//

என்னங்க, ஒரு திரில்லர் போலச் சொல்லி இருக்கீங்க! அருமை!
நவராத்திரி போல் அம்பாளுக்கு வராது என்பார்கள். நீங்கள் அந்த ஒரு ராத்திரியில் அருமையாக மத்டும் இல்லை, அருகாமையாகவும் சேவித்து உள்ளீர்கள்!

//இப்ப குட்டிக்கு ஒரு வயசு ஆகுது.
குழந்தையை எனக்கு தெரிந்த வரையில் பெரியவர்களின் உதவி மூலம் தொலைபேசி மற்றும் இணைய ஆலோசனையுடன் நல்லபடியாக வளர்த்து வருகிறேன்.//

குட்டியின் பெயர் என்னவோ? தனியாக வேணும்னா சொல்லுங்கள்!
குட்டிக்கு எங்கள் வாழ்த்து! குட்டி அடிக்கும் லூட்டியில் பதிவு எழுதவும் நேரம் கிடைக்குதா? பலே ஆளு தான் நீங்க! :-)

அன்புத்தோழி சொன்னார்

Hi radha,

thank you. Baby is fine.

அன்புத்தோழி சொன்னார்
This comment has been removed by the author.
அன்புத்தோழி சொன்னார்

வாழ்த்துக்கு நன்றி திரு KRS. குட்டி பாப்பா தூங்கும் நேரம் தான், எனக்கு ஓய்வு நேரம். அந்த நேரத்தையும் மிஸ் பண்ணா எப்படி?

துளசி கோபால் சொன்னார்

நல்ல எட்டுங்க. அருமை.

அன்புத்தோழி சொன்னார்

வருகைக்கு நன்றி திரு துளசி

காட்டாறு சொன்னார்

தலைப்பு சுத்த வைக்குது உங்க முதல் எட்டு போல. ;-)

அன்புத்தோழி சொன்னார்

என்னங்க பண்றது காட்டாறு, சுத்தருது, என் வாழ்க்கை விட்டு போக மாட்டேங்குது. வருகைக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னார்

தங்கள் கணனிப் புலமை பாராட்டுக்குரியதே!!
நல்லேட்டுக்கள்!

அன்புத்தோழி சொன்னார்

நன்றி திரு யோகன் பாரிஸ்

முகவை மைந்தன் சொன்னார்

பட காட்சி கோர்ப்பு குறித்து ஒரு பதிவு போடுங்களேன்.

அன்புத்தோழி சொன்னார்

மன்னிக்கவும் திரு முகவை மைந்தன், நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை. தயவு செய்து கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா?

முகவை மைந்தன் சொன்னார்

//handycam மூலம் எடுத்த படத்தை edit செயவதிலுருந்து encoding பண்ணி DVD க்கு மாற்றுவதிலிருந்து அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன்//

எப்படின்னு ஒரு பதிவு கேட்டேன். நன்றி.

அன்புத்தோழி சொன்னார்

கண்டிப்பாக போட்டு விடுகிறேன். ஆலோசனைக்கு நன்றி.

VSK சொன்னார்

அவரவர் எடுத்து வைக்கும் எட்டுக்கள் யாவையுமே
அவரவர் அளவில் இனிமையே! சாதனையே!

நீங்கள் எட்டியிருக்கும் எட்டும்
அதைச் சொல்லியிருக்கும் நேர்மையும்
வரிசைப்படுத்தியிருக்கும் நேர்த்தியும்
உங்கள் வெள்ளை மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது!
[படம்னு சொன்னதும் இதையும் டிவிடி பண்ணப் போயிடாதீங்க!]
:))

உங்களது இறைநம்பிக்கை பரவசப்படுத்துகிறது.
எண்ணியதை நாம் செய்தால்
எண்ணியதை அவள் தருவாள் என்பதை மெய்ப்பிக்கும் வரிகள்!

உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

அன்புத்தோழி சொன்னார்

வாழ்த்துக்கு நன்றி திரு வி எஸ் கே அய்யா.