Friday, April 13, 2007

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்




நான் இன்று கருங்குளம் வெங்கடாசலபதி கோவில் பற்றி எனக்கு தெரிந்தவற்றை உங்களிடம் கூறுகிறேன். இத்திருக்கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் போகும் வழியில் இத்திருத்தலம் உள்ளது. இந்தக் கோவில் கருங்குளம் மலை மேல் உள்ளது. இந்தக் கோவிலில் ஒரு விசேஷம் என்னவென்றால் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள், இரண்டு சந்தன கட்டைகளாக நமக்கு காட்சியளிக்கிறார். இதற்கு ஒரு புராணக் கதை உள்ளது. அதைப் பற்றி பின் கூறுகிறேன். இந்தக் கோவிலில் மற்ற முக்கியமான விசேஷம் என்னவென்றால், இங்கு உறங்கா புளி மரமும், ஊறா கிணரும் உள்ளது. அதாவது இந்த புளிமரத்தில் என்றுமே புளியம்பூ புளியங்காயாக மாறாது அதுமட்டுமில்லாமல் இந்த மரம் என்றுமே உறங்காமல் இருக்கும், அதேபோல இந்த கிணற்றில் என்றுமே தண்ணீர் வற்றாமல் இருக்கும் அதனால் புதிதாக தண்ணீர் என்றுமே ஊற்றெடுக்காது. இந்த கோவிலில் சித்திரா பௌர்னமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
புராணக் கதை:
ஒரு காலத்தில் சுபகந்தன் என்றொரு அரசன் வாழ்ந்து வந்தான். அவன் நெறி தவறாமல் அந்நாட்டு மக்களிடம் மிகவும் பிரியமாக பழகி வந்தான். அதனால் எல்லோரும் அவனிடம் அன்பாக பழகி வந்தார்கள். ஆனால் சில காலத்திற்கு பிறகு அவனுக்கு புற்று நோய் வர ஆரம்பித்தது. எந்த வைத்தியர்களாலும் அவனை குணப்படுத்த முடியவில்லை. புற்று நோய் அவன் உடம்பு முழுவதும் படற ஆரம்பித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் மிகவும் தவித்தான். பின் திக்கற்றவர்களுக்கு தெய்வமே கதி என்று திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று, அங்கு தங்கி இறைவனை நினைத்து முழுமனதுடன் பிரார்த்தித்தான். இதனால் பெருமாள் மகிழ்ந்து அவனது கனவில் தோன்றி, உன் நோய் குணமாக வேண்டுமென்றால் எனக்கு சந்தன கட்டைகளைக் கொண்டு வாகனம் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்ததில் இரண்டு கட்டைகள் மிஞ்சும், அதை கருங்குளம் மலையில் வந்து வைத்து விடு, அந்த கட்டைகளில் நான் என்றும் வசிப்பேன் என்றார். இப்படி செய்தால் உன் நோய் கண்டிப்பாக குணமாகும் என்றார். இதனால் அந்த அரசனும் மகிழ்ந்து பெருமாள் சொன்னது போலவே சந்தன கட்டைகளைக் கொண்டு வாகனம் செய்து பின் மிஞ்சியதை கொண்டு வந்து உறங்கா புளிமரம் பக்கத்தில் கொண்டு வந்து வைத்தான். இதனால் அவனுடைய நோய் நீங்கியது. ஆகவே இந்த பெருமாளை முழுமனதுடன் வணங்கினால், நோய்கள் தீர்ந்து நலமாக வாழலாம். எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னார்

உறங்காப் புளி, காயா மகிழ்,
ஊறாக் கிணறு, தோலா வழக்கு
என்று திருக்கண்ணங்குடியைச் சொல்லுவார்கள்!

கருங்குளத்திலும் உறங்காப் புளி புதிய செய்தி. சந்தனம் மணக்கும் பெருமாளா? நன்றி அன்புத்தோழி!

அன்புத்தோழி சொன்னார்

தங்கள் நன்றிக்கு நன்றி திரு க ர ச (KRS)